

ஸ்ரீ
தேவியுடைய மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாவது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்துகொண்டே இருந்தன. பாலிவுட்டில் அவர் அறிமுகமாக இருப்பது அதிகாரபூர்வமாகத் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான ‘சாய்ராட்’ மராத்திப் படத்தின் இந்தி மறு ஆக்கத்தில்தான் ஜான்வி அறிமுகமாகிறார். ‘ஃபான்ரி’ படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் உருவான படம்தான் ‘சாய்ராட்’.
ஆணவக் கொலையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ நான்கு கோடியில் எடுக்கப்பட்டு, நூறு கோடி ரூபாய் வசூலித்தது. விமர்சகர்களும் கொண்டாடிய இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரிங்கு ராஜ்குருவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. ‘சாய்ராட்’ கன்னட மறு ஆக்கத்திலும் ரிங்குவே நடித்தார். இந்நிலையில் ரிங்குவின் கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் ஜான்வி, அவரை நடிப்பில் மிஞ்ச முடியுமா எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார் நெட்டிசன்கள். இந்தி இயக்குநர் கரண் ஜோஹரின் இணைத் தயாரிப்பில் சாஷாங் கெய்தான் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஜான்வியின் காதலராக நடிக்க இருப்பவர் சாஹித் கபூருடைய தம்பியான இஷான் கட்டர். டிசம்பர் 1-ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குகிறார்களாம்.