

‘அன்பே சிவம்’ படத்தில் ‘யார் யார் சிவம்?’ என்கிற வைரமுத்துவின் பாடலில் வரும் வரிகள் இவை: ‘இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும், அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்’. இது இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் படைப்பாளுமைக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வரிகள்.
நோலனின் படைப்பு மனம், உலகம், உயிர்கள் மீதான மாபெரும் அன்பின் கருவி. அறிவியல் புனைவை அளவோடு தொட்டுக்கொண்டு நோலன் படைக்கும் திரைப்படங்கள், தனக்கான அழிவைத் தானே தேடிக்கொண்டு, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிதேடும் மனிதகுல யத்தனத்தைச் சுட்டிச் செல்பவை.
அதேபோல், அறிவியல் தெரிந்த பலருக்கும் கதை சொல்லத் தெரிந்திருக்காது; கதை சொல்லத் தெரிந்திருக்கும் பலருக்கும் அறிவியலின் ஆழம் புரிபடாது. ஆனால், அறிவியலும் தெரிந்து, அற்புதமாகக் கதை சொல்லவும் தெரிந்தவர் நோலன். வி.எஃப்.எக்ஸ் விளைவுகளை அதிகமும் சார்ந்திருக்காமல், காட்சிகளை முடிந்தவரை அசலாக உருவாக்கிவிட உழைப்பவர்.
கலைத்துப்போட்டுக் கதை சொல்லி, பிரம்மாண்டக் காட்சி மொழியின் வழியாகப் பிரச்சினையின் தீவிரத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுவதில் கைதேர்ந்தவர். முதல் முறையாக ‘பயோபிக்; வகைப் படத்தைத் தந்திருக்கிறார். அதுவும் ‘அணுகுண்டின் தந்தை’ என்று வருணிக்கப்பட்ட ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு.
இருவகைப் போராட்டம்: ராபர்ட் ஓபன்ஹெய்மர், அமெரிக்காவிலிருந்து ஜெர்மனிக்குப் போய் இயற்பியலில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்று நாடு திரும்புகிறார். உடன், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் குவாண்டம் இயற்பியல் வகுப்பு எடுக்கிறார். அவருக்கு இடதுசாரி சித்தாந்தம் மீதும் கம்யூனிஸ்ட் இயக்கம் மீதும் ஈடுபாடு இருக்கிறது. அது இரண்டாம் உலகப்போர் தொடங்கித் தீவிரமடைந்திருந்த தருணம்.
உலகத்துக்கே அச்சுறுத்தலாக மாறிவிட்டிருந்த நாஸிக்களைத் தோற்கடிக்க, அவர்களுக்கு முன்னதாக அணுகுண்டை உருவாக்கிவிட வேண்டும் என்கிற தீவிர முயற்சியில் இறங்குகிறது அமெரிக்கா. அதற்காக அமர்த்தப்படும் ‘புராஜெக்ட் மன்ஹாட்டன்’ குழுவுக்குத் தலைவராக ஓபன்ஹெய்மரை அமர்த்துகிறது. யாரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா நினைத்ததோ, எதற்காக ஓபன்ஹைய்மர் இரவு பகலாக உழைத்தாரோ, அந்த நாஸிக்களின் தலைவரான ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ள, நாஸி ராணுவமும் சரணடைந்துவிடுகிறது.
ஆனால், அமெரிக்காவின் ‘பேர்ல் ஹார்பார்’ துறைமுகத்தைத் தாக்கிய ஜப்பான், சரணடைய விரும்பாமல் போர் தொடர்ந்துகொண்டிருந்த நேரத்தில்தான், 1945, ஜூலையில் அணுகுண்டைக் கண்டுபிடிக்கிறார் ஓபன்ஹெய்மர்.
ஆனால், அணுகுண்டுச் சோதனை வெற்றியடைந்த கணத்திலிருந்து மனநெருக்கடிக்கு உள்ளாகிறார். கண்டுபிடித்ததுடன் அவரது வேலை முடிந்துவிட, அதைப் பிரயோகிக்கும் அதிகாரம், அரசியல் மையத்தின் தலைவரான அமெரிக்க ஜனாதிபதியிடமும் ராணுவத்திடம் போய்விடும் என்கிற நிதர்சனம் அவருக்கு உறைக்கிறபோது உடைந்துபோகிறார். அடுத்த பெரிய அடி, அடுத்த மாதமே விழுகிறது.
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது ஆகஸ்ட் மாதத்தில் 2 அணுகுண்டுகள் வீசப்பட்டதில் 2.5 லட்சம் மக்கள் சாம்பலாகி மடிந்துபோனார்கள். அந்த அழிவுக்குத் தாமே காரணம் என்கிற குற்றவுணர்வின் கடும் நெருக்குதலுக்கு ஆளாகும் ஓபன் ஹெய்மர், அதன் பிறகு அமெரிக்காவின் அணுகுண்டுத் தயாரிப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்.
‘இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த நாயகன்’ என்று பாராட்டிய அதே அரசாங்கம், இப்போது ‘தேசத் துரோகி’ என்றும் ‘சோவியத் கைக்கூலி’ என்றும் குற்றம் சாட்டுகிறது. ஒரு பக்கம், அணுகுண்டைக் கண்டுபிடித்தால் ஏற்பட்ட அழிவு தந்த குற்றவுணர்வு, அதனால் ஏற்படும் மனப் போராட்டம், இன்னொரு பக்கம், தன் மீதான அமெரிக்க அரசின் அபாண்டப் பழி சுமத்தலும் அதன் மீதான விசாரணையை எதிர்கொள்ளும் புறவுலகப் போராட்டம் என அலைக்கழிக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் எஞ்சிய வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதுதான் படம்.
ஹீரோயிசம் இல்லை: இந்தப் படத்திலும் தனது பாணியிலிருந்து நோலன் விலகிவிட வில்லை. ஓர் அறிவியலாளரின் மனப்போராட்டம் நிறைந்த வாழ்க்கை வரலாற்றுப் படம் எனும்போது, அறிவியல் சார்ந்த பல விஷயங்களை விளக்க வேண்டிய அவசியம், நீதிமன்ற விசாரணைக்கு நாயகன் உட்படுத்தப்படுதல் ஆகிய அம்சங்கள் காரணமாக, கூடுதல் எண்ணிக்கையிலான உரையாடல் காட்சிகளை நோலனால் தவிர்க்க முடியவில்லை.
ஆனால், அறிவியல் தெரியாதவர்களுக்கும் கூட மிக எளிதில் புரியும் விதமாக அவர் உரையாடலின் வழி விளக்கியிருக்கிறார். காட்சி மொழியைச் சார்ந்திருக்கும் காட்சிகளில் தனது தனித்த முத்திரையைப் பதிக்க அவர் தவறவும் இல்லை.
ஓபன்ஹெய்மர் மீதான தேசத் துரோக விசாரணையிலிருந்து தொடங்கும் படம், முன்பின்னாக அவரது வாழ்க்கையை விரித்துச் செல்கிறது. இரண்டாம் உலகப் போர் வரலாற்றுப் பின்னணியையும் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு குறித்துக் கொஞ்சமும் அறிந்துகொண்டு செல்பவர்களுக்குத் திரை அனுபவம் குறைவுபடாது.
உலகையே புரட்டிப்போட்ட அணுகுண்டின் நாயகனுடைய வாழ்க்கையை, ஹீரோயிசம் என்கிற திரைப்படச் சந்தைக்கான வசூல் உத்தியிலிருந்து வெளியே எடுத்துவந்து, அவனுடைய அகச்சிக்கல் உருவாக்கும் போராட்டமாக, வளர்ந்து செல்லும் குற்றவுணர்வின் வரைபடமாக இந்த பயோபிக்கை படைத்திருக்கிறார் இயக்குநர்.
இதில் ஓபன்ஹெய்மரின் கதாபாத்திரத்தை, அவரது சுயசரிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மைகளுக்கு மிக நெருக்கமாக வடிவமைத்திருக்கிறார். தொடர்ந்து சிதிலமான மனநிலையும் குழப்பங் களும் நிறைந்த குணாதிசயத்துடன், தொடர்ச்சியாக எதிலும் ஈடுபட முடியாமல் தவிக்கும் மனிதராக ஒபன் ஹெய்மர் வருகிறார்.
அவரது சமகாலத்தின் மற்றொருமுக்கிய விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடன் நட்பு இருந்தபோதிலும் ஓபன்ஹெய்மரின் விருப்பங்கள் சிதறல்களாக இருந்திருக்கின்றன. அவர் கிரேக்க மொழியையும் சம்ஸ்கிருதத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறார். தனது காருக்கு ‘கருடா’ என்று பெயர் வைத்திருக்கிறார்.
தனக்கு திருமண மாகியிருந்த போதிலும் வேறொரு பெண்ணுடன் உறவுவைத்துக் கொண்டிருக்கிறார். இவற்றை ஒளிக்காமல் புத்திசாலித்தனமான காட்சிகளாக வைத்துள்ள நோலன், போர் அரசியலுக்குள் ஓர் அழிவுப் பேராயுததை உருவாக்கும் கருவியாகச் சிக்கவைக்கப்பட்ட ஓர் இயற்பியல் விஞ்ஞானியின் கதாபாத்திரத்தச் சிதைவை, ஒரு நாயகன் முரண்பாடுகளின் மூட்டையாக அலைக்கழிவதையும் அலைக்கழிக்கப் படுவதையும் சித்தரித்திருப்பதன் வழியாக, நிகழ்காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் தேவைப்படுவது ‘அன்பு’ மட்டுமே, அழிவு அல்ல என்பதை பார்வையாளரின் மனதில் பதியன் போட்டு அனுப்புகிறார்.
வசனங்களும் காட்சியும்: அணுகுண்டுச் சோதனை முடிந்தபிறகு, ஒபன்ஹெய்மரிடம் அனுமதி பெறாமலேயே இரண்டு குண்டுகளைச் செய்து எடுத்துச் செல்கிறார்கள். அப்போது சக விஞ்ஞானியான எட்வர்ட் “ஜப்பானியர்கள் இது என்னவென்று தெரிந்தால் சரணடைவார்களா? என்று கேட்கிறார் . “எனக்குத் தெரியவில்லை” என்று விரக்தியாகச் சொல்லிவிட்டு “அழிவைக் கண்டுபிடித்த உரிமையும் அதை பயன்படுத்தும் பொறுப்பும் நம்மிடம் இல்லை” என்று செய்வதறியாது டிரக்குகளில் செல்லும் அணுகுண்டுகளைப் பார்த்தபடி மூச்செறிகிறார்.
அழிவுக்காக ஒருபோதும் அறிவியலைப் பயன் படுத்தக்கூடாது என்கிற கொள்கையைக் கொண்டவர்களே விஞ்ஞானிகள். வல்லரசுகளுக்கு இடையிலான அரசியல் பனிப் போரும் வல்லாதிக்கப் போட்டியுமே அவர்கள் தடுமாறி விழும் பொறியாக அமைகின்றன என்பதை படம் எடுத்துக்காட்டுகிறது.
ஹிரோஷிமா, நாகசாகியில் நகரங்களின் அழிவு நடந்த சில தினங்களுக்குப் பிறகு பல்கலைக்கழக அரங்கக் கூட்டம் ஒன்றில் பலத்த கைத்தட்டல்களுக்கு நடுவில் பேசும் ஓபன்ஹெய்மர் “உலகம் அந்த நாட்களை நினைவில் வைத்துக் கொள்ளும்...” என்று கூறிவிட்டு கசக்கும் பாராட்டுகளை வெறுத்தபடி இறங்கி நடக்கிறார்.
அப்போது, அணுகுண்டு வீசப்பட்டால், அந்த அரங்கத்தில் கைத்தட்டுகிறவர்களும் எப்படிச் சிதிலமாவார்கள் என்கிற ஓபன்ஹெய்மரின் மனோவோட்டக் காட்சித் துணுக்குகள், நோலனின் உயர்ந்த கலைக்கோட்பாட்டை நமக்குச் சொல்கின்றன. ஓபன்ஹெய்மர் அமெரிக்க ஜானாதிபதியைச் சந்திக்கும்போது “எனது கையில் ரத்தம் படிந்திருக்கிறது” என்று வெளிப்படையாகப் புலம்புவார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி நக்கலாகத் தனது கைக்குட்டையை எடுத்து நீட்டுகிறார். அந்த இடம்தான் அதிகாரத்தின் முன்னால் அறிவியல் தோற்று நிற்கும் உண்மையின் தரிசனம் கிடைக்கிறது.
- jesudoss.c@hindutamil.co.in