

தனது பாடல் வரிகளால் எந்நாளும் ஏதாவதொரு சிந்தனையில் நம்மை ஆழ்த்துபவர் கவிஞர் நா.முத்துக்குமார். அவரது பிறந்தநாளான கடந்த ஜூலை 12 அன்று, சமூக வலைதளங்கள் முழுக்க முத்துக்குமாரின் பாடல் வரிகள் நிரம்பியிருந்தன. மறைந்த பிறகும் தனது எழுத்துக்களில் வாழும் முத்துக்குமாரின் நினைவாக ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ என்கிற இசை நிகழ்ச்சி ஜூலை 28 அன்று சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
‘மழை மட்டுமா அழகு, சுடும் வெயில்கூட ஒரு அழகு’ என்கிற பாடல் வரிகளோடு நிகழ்ச்சி தொடங்கியது. முத்துக்குமாருக்கு இரண்டாவது தேசிய விருதை வாங்கிக்கொடுத்த ‘சைவம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகே’ பாடலில் இடம்பெறும் அழகான வரி இது.
வாழ்வு, உறவு, உத்வேகம், தத்துவம், கொண்டாட்டம் என அனைத்துக்கும் நா.முத்துக்குமாரின் வரிகளில் சில நம் நினைவுக்கு வரும். இப்படி அவர் விட்டுச் சென்ற பாடல்களில் நாம் அடிக்கடி முணுமுணுக்கும் வெற்றிபெற்ற பாடல்கள் பலவற்றை இசைக் கலைஞர்கள் மேடையில் பாடினர்.
‘காதல் வளர்த்தேன்’, ‘ஒரு நாளில்’ போன்ற பாடல்களை இசைக் கலைஞர்களோடு நிகழ்ச்சியைக் காண வந்திருந்தவர்களும் சேர்ந்து பாடியது, அரங்கம் முழுவதும் முத்துக்குமாரின் நினைவுகளை நிரப்பியது. முத்துக்குமார் எழுதிய மறக்க முடியாத பல வரிகளை ஒன்றாகத் தொகுத்து 20 நிமிட ‘மாஷ்-அப்’ ஆக இசைக் கலைஞர்கள், நிகழ்ச்சியின் இறுதியில் பாடி அவருக்காகச் சமர்ப்பிக்க, மொத்த அரங்கமும் இறுதிவரைக் கட்டுண்டு கிடந்தது.