

கல்வெட்டு போல் காலம் கடந்து நினைவில் தங்கியிருக்கும் ஆற்றல், பல திரைப்படங்களுக்கும் உண்டு. அத்தகைய படங்களில் உயிர்பெற்று எழுந்த கதாபாத்திரங்களையும் அவற்றில் வாழ்ந்து காட்டிய நடிகர்களையும் நினைவூட்ட, அப்படங்களின் தலைப்பைக் கேட்டாலே போதும். அல்லது அப்படங்களில் புகழ்பெற்ற பாடலின் ஒரு வரி காற்றில் தவழ்ந்து, காதை எட்டினால் போதும்..
மொத்தத் திரைப்படமும் மனத்திரையில் ரீவைண்ட் ஆகி ஓடத் தொடங்கிவிடும். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களுக்கு அந்தப் பொக்கிஷப் பட்டியலில் நிரந்தர இடமுண்டு. காதலின் சிரஞ்சீவியாக அந்தப் படங்களின் வழியே தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கும் கல்யாண்குமார் தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கை 50ஐத் தொடும்.
கன்னட சினிமா பல சிறந்த கதாநாயகிகளைத் தமிழுக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் பிறந்து, வளர்ந்து, கன்னட சினிமாவில் முத்திரை பதித்த ஒரு தமிழரை, தமிழ் சினிமாவுக்குப் பரிந்துரை செய்தார், அன்றைக்கு மூன்று மொழிகளில் பிரபலமாக இருந்த பண்டரிபாய். அவர்தான் ஏ.வி.மெய்யப்பனுக்கும் இயக்குநர் தாதா மிராசிக்கும் கல்யாண் குமாரை பரிந்துரை செய்தார்.
முதலில் ஏவி.எம்.கன்னடத்தில் தயாரித்த ‘பூகைலாசா’வில் (1958) நாரதர் வேடம் ஏற்றார் கல்யாண்குமார். பின்னர், தாதா மிராசியின் இயக்கத்தில், சின்ன அண்ணாமலையின் தயாரிப்பில் உருவான ‘கடவுளின் குழந்தை’ (1960) படம்தான் தமிழ் சினிமாவுக்கு அவரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது. ஆனால், அதற்கு முன்பே, கன்னட சினிமாவில் நட்சத்திரமாகப் புகழ்பெற்றிருந்தார்.
மூன்று ‘குமார்’கள்: எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய 3 நட்சத்திரங்கள் மூன்று விதமான பாணிகளைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றிருந்த 60களின் தமிழ் சினிமாவில், அவர்களது வசீகரமான தோற்றங்களுக்குச் சற்றும் குறைவில்லாத அழகான நாயகனாகத் தோன்றி, தமிழ் மனங்களை வென்றவர்தான் கல்யாண்குமார். காதலையும் சோகத்தையும் சம அளவில் குழைத்து வைத்திருந்தாலும் எப்போதும் ஒளி குன்றாத கண்கள் அவருடையவை.
அதில் ‘கூலர்’ கண்ணாடி அணிந்துகொண்டு இன்னும் அசரடித்தார். அலையலையான சுருள் முடியில் அக்காலத்தின் நவீன ‘ஹேர் ஸ்டை’லால் கவர்ந்திழுத்தார். பென்சில் மீசை சிலருக்கு மட்டும்தான் மிக அழகாக இருக்கும். கல்யாண்குமாருக்கு அதில் முதலிடம். இந்தப் புறத் தோற்றத்தின் ஈர்ப்பையெல்லாம் இரண்டாவது இடத்துக்கு தள்ளி வைத்தது அவரது இனிய குரலும் தமிழைச் சிதைக்காத உச்சரிப்பும்.
கண்ணீரில் தோய்த்த காதல் வசனங்களை, ஜெமினி கணேசனைவிட குழைவாகவும் வலி நிரப்பியும் பேசி, பெண்களின் இதயத்தில் புகுந்துகொண்டார். தமிழ் மொழியை ‘கன்னட வாசனை’ இல்லாமல் இவரால் எப்படி உச்சரிக்க முடிகிறது என்று திரையுலகம் தேடியது. பெங்களூருவில் குடியேறிய ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தின் வாரிசு கல்யாண்குமார் என்று தெரிய வந்தபோதும், அங்கே அவர் புறக்கணிக்கப்படவில்லை. 60களில் கன்னட சினிமாவை தங்களது ஹீரோயிச ஆளுமைக்குள் கொண்டுவந்துவிட்ட ராஜ்குமார், உதயகுமார் ஆகிய இரண்டு குமார்களுடன் மூன்றாவது குமாராக முடிசூட்டிக்கொண்டார் கல்யாண் குமார்.
வாழ்க்கைக் கதையில் அறிமுகம்: செல்வாக்கு மிக்க வைதீகக் குடும்பத்தில் கல்யாண்குமார் பிறந்தபோது, சொக்கண்ணா என்கிற சம்பத் குமாராக பாட்டனாரின் பெயரை அவருக்குச் சூட்டினார் தந்தை. ஆங்கில வழியில் பள்ளிக் கல்வியை முடித்த கையோடு, அவரை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து மருத்துவராக்கக் கனவு கண்டார் அவரின் அப்பா. ஆனால், தனது நடிகனாகும் கனவை வெளிப்படையாகச் சொன்னார் சம்பத்குமார்.
பெங்களூருவில் இருந்தால் சினிமா, டிராமா என்று மகன் கெட்டுவிடுவான் என்று முடிவு செய்த அப்பா, மும்பையில் இருந்த ‘செராமிக் இன்ஸ்டியூட்’டில் சம்பத் குமாரைச் சேர்த்தார். அங்கே படித்த இரண்டு வருடங்களும் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கி இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால் ‘மதராஸி’ என்று கூறி புறக்கணிக்கப்பட்டார். மகன் படிக்கப் போன இடத்தில் ஸ்டுடியோக்களில் அலைந்துகொண்டிருப்பதை அறிந்தவுடன் பேச்சை நிறுத்திக்கொண்டார் அப்பா.
அவரது ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றுவிட வேண்டும் என்று துடித்த சம்பத்குமார், படிப்பை முடித்து பெங்களுரு திரும்பியதும் தாயார் கல்யாணியின் பெயரிலிருந்து கல்யாண் என்கிற பாதியை எடுத்துத் தனக்கான பெயரையும் தானே சூட்டிக்கொண்டார். பெங்களூரு ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷனின் சேர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். மேடையிலும் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகன்தான்.
அன்றைக்கு கல்யாண்குமாரை பெரிதும் பாதித்தார் இந்தி நடிகரும் இசைக் கலைஞருமான கிஷோர்குமார். நாடக மேடையில் அவரது பாணியை நகலெடுக்கவும் செய்தார். பாலிவுட் ஸ்டுடியோக்களில் கல்யாண்குமார் புறக்கணிக்கப்பட்ட கதையைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி.ராஜு, கல்யாண் குமாரை அழைத்து, பாலிவுட்டில் அலைந்து திரிந்த அனுபவங்களைக் கூறக் கேட்டு, அதையே திரைக்கதையாக எழுதச் சொன்னார்.
ஒரு நடிகனின் கதையாக உருவான அந்தப் படம் தான் கல்யாண்குமார் கன்னடத்தில் நாயகனாக அறிமுகமான ‘நடசேகரா’ (1954). திரையுலகம் குறித்து கன்னட சினிமாவில் வெளியான முதல் சினிமா. படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற, அறிமுகப் படமே கல்யாண்குமாரை நட்சத்திரம் ஆக்கியது. ஆனால், அடுத்த ஒரு வருடம் அவர் நடிக்கவே இல்லை. தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள சரியான அடுத்த அடியை எடுத்து வைக்க விரும்பிய அவர், தெலுங்கிலும் கன்னடத்திலும் ஒரே நேரத்தில் உருவான ‘சதாரமா’ (1956) படத்தில் ஒரு கொள்ளைக்கார
பண்டிட்டாக வில்லன் வேடம் ஏற்றார். அந்த வேடத்தின் மூலம் கன்னட ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அழுத்தம் திருத்தமாக அமர்ந்துகொண்டார். ( ‘மலைக் கள்ளன்’ கன்னட மறுஆக்கத்திலும் கல்யாண்குமார்தான் நாயகன்) அதன்பின்னர், அடுத்த இரு பத்தாண்டுகளுக்கு கன்னட சினிமாவில் ராஜ்குமார், உதயகுமார், கல்யாண்குமார் என்கிற முக்கோணப் புயல் சுழன்று சுழன்று வீசியது. அதில் கல்யாண்குமார், ஒரு ‘ஸ்டைலிஷ் ஹீரோ’வாகச் செய்த நடிப்புச் சாதனைகள் பல.
அவற்றில் கன்னடத்தின் முதல் வண்ணப்படமான ‘அமரசில்பி ஜனகாச்சாரி’யில் ஹொங்சாள வரலாற்றில் வாழும் புகழ்பெற்ற சிற்பியான ஜனகாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். கன்னட சினிமாவின் மூன்று ‘குமார்’களும் இணைந்து பூமிதான இயக்கத்தை வலியுறுத்திய ‘பூதானா’ (1962) என்கிற படத்தில் நடித்தார்கள்.
மறக்க முடியாத இணை: ‘கடவுளின் குழந்தை’ படத்தில் காதலில் வஞ்சிக்கப்படும் செல்வந்தரின் மகனாக கோட் - சூட்டில் கல்யாண்குமாரின் நடிப்பைக் கண்ட ஸ்ரீதர், அவரை ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் காதலியின் கணவனுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் முரளியாகச் சித்தரித்தார். அந்தப் படம் பிரிந்த காதலர்களின் மருந்தாக மாறிப்போனது. டாக்டர் முரளியும் அவரது காதலி சீதாவும் (தேவிகா) காதலில் தோற்றாலும் அதை வாழ வைக்கும் கண்ணியமும் உன்னதமும் கொண்ட கதாபாத்திரங்களாக நிலைபெற்றார்கள்.
அதன்பின்னர் ஸ்ரீதரே கல்யாண்குமார் - தேவிகா இருவரையும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் மீண்டும் இணைத்து வைக்க, தமிழ் சினிமா வரலாற்றின் மறக்க முடியாத ஜோடிகளில் ஒன்றாக மாறிப்போனது இந்த இணை.’நிஜ வாழ்விலோ, தன்னுடன் கன்னடத்தில் இணைந்து நடித்த ரேவதியைக் காதலித்துக் கரம் பிடித்தார். பின்னாளில் வெகுஜன நாவலாசிரியராக, திரைக்கதை எழுத்தாளராகப் புகழ்பெற்ற தன் மனைவியின் கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கவும் செய்தார்.
கன்னடத்தில் நாயகனாகப் புகழ்பெற்றுவிட்ட தொடக்கத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, கல்யாண்குமாருக்கு ஒரு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். பின்னர், சந்தியாவின் மகள் ஜெயலலிதா வளர்ந்து கதாநாயகியாக புகழ்பெற்றபின் கல்யாண்குமாருடன் ஜோடி சேர்ந்தது 5 படங்களில். மூன்று கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருந்தபோதும் தனது பூர்விகத்தை மறக்கமால் சென்னையில் மூன்று பங்களாக்களைக் கட்டிய முதல் கன்னடக் கலைஞர். இன்று அவரது 95வது பிறந்த நாள்.
படங்கள் உதவி: ஞானம்
- jesudoss.c@hindutamil.co.in