

பரத் நடிப்பில் 50வது படமாக வெளிவரவிருக்கிறது ‘லவ்’ திரைப்படம். 20 வருடங்களுக்கு முன் ஷங்கரின் அறிமுகமாக ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான பரத், தனது திரைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்து அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி..
இந்த 20 வருட திரைப் பயணம் உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வுகளைக் கொடுத்திருக்கிறது? - ஐம்பதாவது படம் என்பது எனக்கு மிகவும் ‘ஸ்பெஷ’லான ஒரு தருணம். இந்த இருபது ஆண்டுகளில் பல மேடு பள்ளங்களைச் சந்தித்திருக்கிறேன். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன.
அதில் பல அவமானங்கள், சந்தோஷம் என ரோலர் கோஸ்டர் ரைட் செய்து இன்னும் சினிமாவில் தாக்குப் பிடித்து நின்றுகொண்டிருக்கிறேன். என்றாலும் 50 படங்களை நான் கடக்க ரசிகர்கள் எனக்குத் தந்துவரும் ஆதரவே காரணம். இதுவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே கொடுத்திருக்கிறேன். இச்சமயத்தில் என்னை அறிமுகப்படுத்திய ஷங்கர் சார், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் சார் ஆகியோருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
தொடக்கத்திலேயே உங்களுக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த படம் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’. 50வது படத்தின் தலைப்பு ‘லவ்’. இது எதிர்பாராமல் அமைந்ததா? - ஆமாம்! அது விடலைப் பருவத்தில் காதலிக்கும்போது சந்திக்கும் பிரச்சினை. இது காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு சந்திக்கும் பிரச்சினை. இன்றைய காலத்தில் காதலர்களாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டுவிட்டதாகப் போலியாக நினைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால், காதல், திருமண வாழ்க்கையாக அடுத்துக் கட்டத்துக்குச் செல்லும்போது நடைமுறையில் சந்திக்கும் பிரச்சினைகள் சின்னச் சின்னதாக இருந்தாலும்கூட அவற்றைப் பூதாகரமாக்கிப் பார்க்கும் உளவியல் சிக்கல்தான் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது.
அதையெல்லாம் பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆர்.பி.பாலா. இந்தப் படத்தை ஒரு ‘ஃபேமிலி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ட்ராமா’ என்று சொல்லலாம். காதல் வேறு.. திருமண வாழ்க்கை வேறு என்பதைத் திடுக்கிடும் கோணத்துடன் சொல்லும் படம்.
‘மிரள்’ படத்தைத் தொடர்ந்து நீங்களும் வாணி போஜனும் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறீர்கள்? - ‘மிரள்’ படத்தின் வெற்றிதான் எங்களை மீண்டும் திரையில் இணைத்திருக்கிறது. வாணி அற்புதமான நடிகர். சிரிப்பு, விளையாட்டு என்று படப்பிடிப்பில் இருப்பார். காட்சி என்று வந்து விட்டால் அசத்திவிடுவார். சின்னத் திரையில் நல்ல பயிற்சிபெற்று சினிமாவுக்கு வந்தவர். தமிழை அவ்வளவு அழகாகப் பேசி நடிக்கிறார். வசன உச்சரிப்பிலும் நடிப்பைக் கொடுக்க வேண்டியது ஒரு நடிகரின் கடமை.
தமிழ் தெரிந்த ஹீரோயின் எனும்போது அது சாத்தியமாகிறது. ‘லவ்’ படத்தில் திவ்யாவாக ஒவ்வொரு காட்சியிலும் அழகும் கோபமும் நிறைந்த கதாபாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பதில் அவரது ‘வேரியேஷன்ஸ்’ பார்த்து படப்பிடிப்புத் தளத்தில் வியந்தேன். நான் அஜய் என்கிற கதாபாத்திரத்தில் அவரது காதலனாகவும் பின்னர் கணவராகவும் வருகிறேன். எங்கள் இணை மிகவும் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். ‘மிரள்’, ‘லவ்’ போல் நல்ல கதை அமைந்தால் நாங்கள் மீண்டும் இணைந்து நடிக்க எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.பி.பாலா பற்றி.. மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்படப் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் படங்களுக்கு மொழி மாற்றுப் பதிப்புக்கான வசனங்களை எழுதிப் புகழ்பெற்றவர். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘குருப்’ படத்தில் நடித்தபோது அந்தப் படத்தில் பணிபுரிந்த ஆர்.பி.பாலா, ‘உங்களது 50வது படத்தை இயக்க விரும்புகிறேன்.
கதையைக் கேளுங்கள்’ என்று சொன்னார். சொன்னதை விட ஸ்டைலாகவும் நவீனமாகவும் படத்தை எடுத்துவிட்டார். நவீனம் என்று நான் சொல்வது கதையில் உள்ள பிரச்சினைகளை மட்டுமல்ல, படத்தின் நேரத்தையும் 1 மணி நேரம் 50 நிமிடம் என்று ஆங்கிலப் படம்போல் சுருக்கிக் கொடுத்திருப்பதையும்தான். இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருப்பதற்கு ஒளிப்பதிவாளர் பி.சி.முத்தையாவின் கேமரா ஒர்க்கும் முக்கியமான காரணம்.
அடுத்து நடிக்கும் படங்கள்? - வசந்த பாலன் இயக்கத்தில் ஜீ5 தயாரிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடரில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். விஜய் ராஜ் என்கிற அறிமுக இயக்குநரின் உருவாக்கத்தில் ‘முன்னறிவான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் 6 நாள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சியிருக்கிறது. ஆகஸ்டில் தொடங்கவிருக்கும் முன்னணி இயக்குநரின் படத்தில் நடிப்பதற்காகத் தாடி, மீசையை வளர்த்து வருகிறேன். அதுபற்றி அவர்களே அறிவிப்பு செய்வார்கள்.