

ஹாலிவுட் ஒரு ஆச்சரியகரமான கனவுலகம். இங்கிருந்து வெளியாகும் படங்களின் வகைமையைப் பட்டியலில் அடைப்பது அத்தனை சுலபமல்ல. தர்மத்துடன் அதர்மம் மோதிக்கொள்ளும் ஹீரோ-வில்லன் கிளிஷேக்கள் ஹாலிவுட்டிலிருந்து இன்னும் வெளிவந்தபடிதான் இருக்கின்றன. உலகச் சந்தையைக் குறிவைக்கும் இந்த மசாலா படங்களுக்கு மத்தியில் புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து உருவாகும் சூப்பர் ஹீரோ படங்கள், ஆச்சரியப்படுத்தும் தொழில்நுட்பப் பிரமாண்டத்துடன் வெளியாகும் அறிவியல் புனைகதைகள், நடிகர்களின் குரல் நடிப்பை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, உயிருள்ள நடிகர்களைவிட அற்புதமாக உணர்ச்சிகளைக் காட்டும் 3டி கதாபாத்திரங்களை முன்னிறுத்தும் அனிமேஷன் படங்கள் என்று ஹாலிவுட்டுக்கு இன்னொரு முகமும் உண்டு. இந்த எல்லா முகங்களைவிடவும் உலக சினிமா அரங்கில் ஹாலிவுட்டுக்குப் பெருமை சேர்ப்பவர்கள், வரையறை, கோட்பாடுகள் எதிலும் சிக்காமல் இயங்கும் ‘தன்னிச்சையாக முழுச் சுதந்திரத்துடன் நினைத்ததைப் படமாக்கி அதைப் படைப்பாக்கும் இன்டிபென்டென்ட்’ சினிமா இயக்குநர்கள்தான். அவர்களில் ஒருவர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர்.
வணிக சினிமாவின் எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் தனக்கான கலையாளுமையைப் படைப்பதில் பிடிவாதமாக இருக்கும் ரிச்சர்ட் இயக்கத்தில் இன்று ஹாலிவுட்டில் வெளியாகும் படம் ‘பாய்ஹூட்’.
இது ஏதோ ஆமை வேகத்தில் நகரும் படமென்று நினைத்துவிடாதீர்கள். ஒரு 6 வயதுச் சிறுவன் 18 வயது இளைஞனாகும் காலகட்டம் வரையிலான அவனது பன்னிரெண்டு ஆண்டுகால வானவில் வாழ்க்கையின் வண்ணங்களை 12 ஆண்டுகள் காத்திருந்து படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட். இதற்காக எலர் கோல்ட்ரன் (Ellar Coltrane) என்ற பன்னிரெண்டு வயதுச் சிறுவனை ஒப்பந்தம் செய்து 2002 -ம் ஆண்டு முதல் அவனைப் படமாக்கிவந்திருக்கிறார். இவரது திரைமொழியின் முக்கியக் கூறாகக் காலமும், அவன் வாழிடத்தின் கலாச்சாரமும் வாழ்முறையும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
“ரிச்சர்டின் பெரும்பாலான படங்கள் ஒரு நாளில் முடிந்துவிடக்கூடியவை. இது போன்ற கால நிர்ணயம், வடிவ ரீதியான புதிய சாத்தியங்களை ஏற்படுத்துகிறது. இயக்குநர் ரிச்சர்டின் பாணியில் படங்கள் நீண்ட உரையாடலாகவும், வாழ்வு, இருத்தல் சார்ந்த பல கேள்விகளை எழுப்பக் டிய இயல்பு கொண்டதாகவும் மாறுகிறது.. இவரது படங்களில் ‘டிராமா’ இல்லை, கதைத்தன்மை இல்லை, ஆனால் உயிர்த் துடிப்புடன் கூடிய மனிதர்கள், தங்களைப் பற்றி நம்மிடம் பேசிய வண்ணம் இருக்கிறார்கள். அவை வெறும் பேச்சு அல்ல, அவை உள்ளார்ந்து மிகச் சாதாரணமாக வெளிப்படும் அவர்களது உள்ளக் கிடக்கை” என்கிறார் திரைப்பட இணை இயக்குநரான மாமல்லன் கார்த்தி.
ஒரு ஆண் பிள்ளையை, ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரை கேமரா பின் தொடர்ந்து செல்லும் அற்புதத்தை ரிச்சர்ட் எப்படிப்பட்ட திட்டமிடலுடன் படமாக்கியிருப்பார் என்பதே ஒரு வகையில் சாதனைதான் தவறவிடாதீர்கள்.