

ரசிகர்கள், விமர்சகர்கள் ஆகிய இரண்டு தரப்புமே கொண்டாடியத் திரைப்படம், கடந்த 2017இல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’. சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில், தமிழ்த் திரைப்படங்களுக்கானப் போட்டிப் பிரிவில், சிறந்த படத்துக்கான விருதையும் வென்றது. அதை இயக்கிய சுரேஷ் சங்கையா இரண்டாவதாக இயக்கியிருக்கும் படம் ‘சத்திய சோதனை’. ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
ஒரு நல்ல படைப்பைக் கொடுத்த இயக்குநர், தனது அடுத்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு போராடவேண்டியிருக்கிறது? - இதுபோன்ற மாற்று முயற்சிகளைக் கதையாகச் சொல்லி, தயாரிப்பாளரை ஒப்புக்கொள்ளச் செய்வதில்தான் சிக்கல் மொத்தமும் அடங்கியிருக்கிறது. ‘இந்தக் கதை எப்படி ஒரு திரைப்படமாக ‘ஒர்க் அவுட்’ ஆகும், ஒரு கிராமத்தையே எப்படி நடிக்க வைப்பாய், இவ்வளவு பேரைக் கட்டி மேய்க்க முடியுமா, அப்படியே எடுத்தாலும் இது பிஸ்னஸ் ஆகுமா, தியேட்டருக்குக் கூட்டம் வருமா?’ என்று கேட்டு நகர்ந்துவிடுகிறார்கள். ‘ஒரு கிடாயின் கருணை மனு’வுக்கு நான் என்ன போராட்டத்தை எதிர்கொண்டேனோ, அதுவேதான் ‘சத்திய சோதனை’க்கும்.
படைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் ஒரு முதலீட்டாளர் கிடைக்கும் வரை நானும் விடுவதாக இல்லை. அப்படித்தான் அனுசரண் இயக்கத்தில், ‘பன்றிக்குட்டி’ என்கிற ஒரு நேர்த்தியான படத்தைத் தயாரித்த சமீர் பரத் ராம், நான் சொன்ன கதையின் ஐடியாவைக் கேட்டு, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ எடுத்திருக்கிறீர்கள்; உங்களால் இதையும் எடுக்க முடியும்’ என்று தயாரிக்க முன்வந்தார். அவரிடம் என்னை அழைத்துச் சென்ற ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணுக்கு நன்றி கூறுகிறேன்.
‘சத்திய சோதனை’ படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது, கிராமத்து மனிதர்களும் கிராமப்புறக் காவல் நிலையமும் இணையும் கதைக் களம் எனத் தெரிகிறது.. ஆமாம். இதுவொருக் கொலை விசாரணைத் திரைப்படம். இதுவரைத் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பார்த்து வந்துள்ள காவல் நிலையங்களுக்கும் இந்தப் படத்தில் பார்க்கப்போகும் காவல் நிலையத்துக்கும் மலையளவு வேறுபாடு இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களின் இருப்பை, அங்குப் பணிபுரிகிறவர்களின் உலகை அப்படியே கச்சாவாகக் காட்டியிருக்கிறேன்.
அதேபோல், ஒரு கொலைக் குற்றத்தை, அதனுடன் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படுகிறவர்களை விசாரிக்கும் அணுகுமுறையில் ஊரகக் காவல் நிலையங்களின் முகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எனக்குரிய எள்ளல் சித்தரிப்புக்குள் கொண்டுவந்திருக்கிறேன். படத்தில் வரும் கிராமத்தில் வசிப்பர் போலவும், அங்குள்ள காவல் நிலையத்துக்கு நேரில் சென்று வந்தவர் போலவும் ரசிகர்கள் உணர்ந்தால், அதுதான் இந்தப் படத்தின் வெற்றியாக இருக்கும். சூழ்நிலைக் கைதியாகச் சிக்கும்போது நிகழும் வாழ்க்கை அவலங்கள் அனைத்தும் ரசிகர்களை மனம்விட்டுச் சிரிக்க வைக்கும்.
பிரேம்ஜி அமரன் சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் இப்படம் அவரை மேலேற்றிவிடுமா? - அவருக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும். இதுவரைப் பார்த்த காவல் நிலையம் எப்படி இந்தப் படத்தில் இருக்காதோ, அப்படித்தான் இதுவரைப் பார்த்த பிரேம்ஜியும் இந்தப் படத்தில் இருக்க மாட்டார்.