

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை அடியோடு தடைசெய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், லாட்டரி சீட்டு விற்பனையைக் கதைக் களமாக வைத்து ஒரு த்ரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் செல்வகுமார். வெற்றி - ஷிவானி நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகிக் கவனம் பெற்றிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
உங்களைப் பற்றிக் கொஞ்சம்...
‘கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா, ‘விழித்திரு’ படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். எனது சொந்த ஊர் திருநெல்வேலி அருகிலுள்ள விக்ரமசிங்கபுரம். வேதா பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.தியாகராஜா நல்ல கதைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து அவரைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னேன். “இதற்கு பொருத்தமான ஹீரோ யார்?” எனக் கேட்டார். இந்தக் கதையை 2018இல் கேட்ட ‘எட்டுத்தோட்டாக்கள்’ வெற்றி, “இதில் நான்தான் நடிப்பேன்” என்று பிடிவாதமாக இருப்பதை அவரிடம் சொன்னேன். ஆச்சரியப்பட்ட அவர், “உடனே படப்பிடிப்பைத் தொடங்குங்கள், இந்தக் கதைக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டுமோ அதைத் தயங்காமல் செலவழிக்கிறேன்” என்று கதைக் களத்துக்கான தேவையைப் புரிந்துகொண்டு சுதந்திரம் கொடுத்தார். நல்ல கதை இருந்தால் அது தனக்கான நடிகர்களையும் கலைஞர்களையும் தயாரிப்பாளரையும் சென்று அடையும் என்பதற்கு ‘பம்பர்’ படம் ஒரு எடுத்துக்காட்டு.
‘பம்பர்’ என்கிற தலைப்பு லாட்டரியைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில்தான் லாட்டரியே இல்லையே..!
கேரள மாநில அரசு தனி அமைச்சகம் வைத்து ‘அரசு லாட்டரி’யை நடத்துகிறது. பிறமாநில லாட்டரிகளுக்கு அங்கே அனுமதி கிடையாது. தினசரி 75 லட்சம் முதல் 80 லட்சம் வரை பரிசு உண்டு. அதேபோல் விசு வருடப்பிறப்பு, ஓணம், ஆயுத பூஜை, கிறிஸ்மஸ் - புத்தாண்டு என வருடத்துக்கு 4 பம்பர் பரிசு லாட்டரி குலுக்கல்களையும் அரசு நடத்துகிறது. இதில் கிறிஸ்மஸ் - புத்தாண்டு பம்பர் லாட்டரியை நான் கதைக் களம் ஆக்கியிருக்கிறேன்.
என்ன கதை?
கதாநாயகன் புலிப்பாண்டி தூத்துக்குடியைச் சேர்ந்தவன். சிறுவயது முதலே சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளானவன். பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவன். அறமென்றால் என்னவென்றே தெரியாத அவன் தொழில் நிமித்தமாக கேரளாவுக்குச் செல்கிறான். அங்கே எந்தச் சூழ்நிலையிலும் அறத்தைக் கைவிடுவது இல்லை என்று வாழும் இஸ்மாயில் என்கிற லாட்டரி சீட்டு விற்கும் பெரியவரைச் சந்திக்கிறான். அவரிடம் லாட்டரிச் சீட்டும் வாங்குகிறான். அவன் வாங்கிய லாட்டரி சீட்டுக்குப் பரிசு விழ, அது அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டது என்பதுதான் கதை.
லாட்டரியை ஆதரிக்கும் கதையா?
இல்லை. வாழ்க்கையின் எதிர்பாராத சூழ்நிலையில் அறத்தைக் கைவிடுவது எத்தனை ஆபத்தானது என்பதைச் சொல்லும் கதை. அதற்கு லாட்டரி சீட்டு கதைக்களம் மிகப் பொருத்தமாக அமைந்தது. கேரள லாட்டரியைத் தேர்ந்தெடுக்கக் காரணம், அதில் இருக்கும் வெளிப்படைத் தன்மையும் சமூக அக்கறையும்தான். போலி லாட்டரி சீட்டுகளுக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு லாட்டரியிலும் க்யூஆர் கோட் அச்சிடப்பட்டிருக்கும் அதை ஸ்கேன் செய்தாலே வாங்கிய லாட்டரி சீட்டின் சீரியல் எண், எந்த ஏஜெண்டுக்கு விற்கப்பட்டது, அதற்குப் பரிசு விழுந்திருக்கிறதா, இல்லையா எல்லாம் தெரிந்துவிடும்.
அதேபோல், விற்காத லாட்டரி சீட்டுகள் குலுக்கலில் இருந்து நீக்கப்பட்டுவிடும். ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நடைபெறும் குலுக்கலைக் காணப் பொதுமக்களும் செல்லலாம். லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தைப் பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளுக்கு அரசு பயன்படுத்துகிறது. இந்தப் பின்னணியை எதற்குச் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் சுரண்டல் லாட்டரியை அனுமதித்ததன் விளைவாக, போலி லாட்டரிச் சீட்டுகளை வாங்கிப் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்தன. அதனால் லாட்டரி ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டது.
லாட்டரியை கேரள அரசுபோல் நடத்தினால், அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு பல சமூகப் பணிகள் செய்யமுடியும். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியொரு வெளிப்படைத் தன்மையை எந்தக் காலத்திலும் எதிர்பார்க்க முடியாது என்பதால், இங்கே லாட்டரி வராமல் இருப்பதே நல்லது. அதேபோல், தமிழ்நாட்டில் எதுவொன்றுக்கும் எளிதில் அடிமையாகிவிடும் மனப்பாங்கு கொண்டவர்கள் அதிகம் உண்டு. ஆன்லைன் ரம்மியே அதற்கு எடுத்துக்காட்டு.
படத்தில் மற்ற கலைஞர்கள்?
லாட்டரி விற்கும் இஸ்மாயில் கேரக்டரில் ஹரிஷ் பெராடி வாழ்ந்திருக்கிறார். கதாநாயகியாக ஷிவானி தூத்துக்குடி பெண்ணாக மாறியிருக்கிறார். படத்தில் வரும் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் பிரபலமான நடிகர்கள்தான்.