

எண்ணற்ற கலை வேந்தர்களைத் தமிழ்த் திரையுலகத்துக்கு அளித்த பெருமை தஞ்சைத் தரணிக்கு உண்டு. அங்கே, திருத்துறைப்பூண்டி வழங்கிய மற்றொரு இசைக்கொடைதான் நூற்றாண்டு நாயகர், திரையிசை வேந்தர் டி.ஆர்.பாப்பா. சிவசங்கரன் என்கிற இயற்பெயர் கொண்ட இவருக்கு, பஞ்சமம் என்கிற ஸ்வரமே இரண்டு முறை ஒலிக்கும் வகையில் பெயர் அமைந்துபோனது இசைப் பொருத்தம்! 26ஆவது வயதில் இளம் பிடில் வித்வானாக அகில இந்திய வானொலியில் பிரகாசித்தவர். அங்கே கர்னாடக இசை ஜாம்பவான்களான ஜி.என்.பாலசுப்பிரமணியம், டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி போன்றவர்களுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் அளவுக்கு வயலின் இசைக் கருவியில் மிகச் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றிருந்த டி.ஆர்.பாப்பா, மிக இளம் வயது முதலே கர்னாடக இசையில் முறையான பயிற்சி பெற்றிருந்தார். திரைப்பட இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பாக, அதிக ஊதியம் பெற்ற வயலின் இசைக் கலைஞர்களில் இவரும் ஒருவர் என்பது சிறப்புச் செய்தி.
தனது குருநாதரான வயலின் மேதை கும்ப கோணம் சிவனடிப்பிள்ளையின் உதவியாளராக, நேஷனல் மூவி டோன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். பாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பாவுடைய சகோதரரின் அறிமுகம் கிடைத்து. அவரோடு இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசைக்குழு மூலமாக கோவை ஜுபிபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கே சிறுவனாக அலுவலக உதவிகளைச் செய்துவந்த (பின்னாளில் மெல்லிசை மன்னராக விஸ்வரூபம் எடுத்த) எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைஞானத்தைச் சரியாக நாடி பிடித்து, அவரை இசைப் பிரிவில் பணியாளராக அணைத்துக் கொண்ட கொண்ட பெருமை டி.ஆர்.பாப்பாவுக்கே உரியது.
சிட்டாடல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய அன்றைய புதுமை தயாரிப்பாளர் ஜோசப் தளியத் ஜூனியரின் ‘ஆத்ம சாந்தி’ மலையாளப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் டி.ஆர்.பாப்பா. அப்படத்தைத் தொடர்ந்து, தமிழில் தளியத் தயாரிப்பில் ‘மல்லிகா’, ‘விஜயபுரி வீரன்’, ‘இரவும் பகலும்’, ‘விளக்கேற்றியவள்’, ‘காதல் படுத்தும் பாடு’ எனத் தொடர்ந்து ஒரே தயாரிப்பாளரின் கடைசித் திரைப்படம் வரை இசையமைத்துத் தனித்துவமான சாதனை புரிந்தவர் டி.ஆர்.பாப்பா.
காலம் கடந்து காற்றில் ஒலிப்பவை!
தமிழிலிருந்து இந்திக்கு மறுஆக்கம் செய்யப்பட்ட ‘மல்லிகா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நீல வண்ணக் கண்ணனே... உனது எண்ணமெல்லாம் நான் அறிவேன்...’, ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ ஆகிய இரண்டு பாடல்கள் காலத்தை வென்றவை. ஜெமினி கணேசன் - பத்மினி நடித்த ‘ஆசை’ படத்தில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி குரலில் மேற்கத்திய வால்ட்ஸ் நடையில் அபூர்வமான இசைக் கோப்புடன் ‘ஆசை பொங்கும் அழகு ரூபம்’ என்கிற பாடல், பல நவீனப் பாடல்களுக்கு முன்னோடி. ‘ரம்பையின் காதல்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில், ‘சமரசம் உலாவும் இடமே’ என்கிற அற்புதமான தத்துவப் பாடலைக் கொடுத்தார். ‘இரவும் பகலும்’ படத்தில் வில்லன் நடிகர் எஸ்.ஏ.அசோகனை அவரது சொந்தக் குரலில் ‘இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துவிட்டான்’ என்று நெஞ்சுருகப் பாட வைத்தார். ‘இரவும் பகலும்’ ஜெய்சங்கர் நாயகனாக அறிமுகமான படம்.
பாவேந்தர் பாரதிதாசன், உவமைக் கவிஞர் சுரதா, கலைஞர் மு.கருணாநிதி, முத்துக்கூத்தன், எம்.கே.ஆத்மநாதன், உடுமலை நாராயணகவி, கே.டி.சந்தானம், தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, புரட்சிதாசன், ஆலங்குடி சோமு, கு.மா. பாலசுப்பிரமணியம், கவியரசு கண்ணதாசன், வாலி என மொழியில் உச்சம் தொட்ட பாடலாசிரியர்களோடு இணைந்து வெற்றிப் பாடல்களை அதிக எண்ணிக்கையில் தந்த டி.ஆர்.பாப்பா, பஞ்சு அருணாச்சலத்துக்கும் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார்.
ஆளுமைகளுடன் இணைந்து..
பேரறிஞர் அண்ணாவுடன் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’, ‘ரங்கூன் ராதா’, ‘நல்லவன் வாழ்வான்’, ‘எதையும் தாங்கும் இதயம்’ ஆகிய படங்களிலும் மு. கருணாநிதியோடு ‘அம்மையப்பன்’, ‘குறவஞ்சி’, ‘ராஜா ராணி’ ஆகிய திரைப்படங்களிலும் எம்.ஜி.ஆர். உடன் ‘நல்லவன் வாழ்வான்’ திரைப்படத்திலும் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். ‘வைரம்’ படத்தில் ஜெயலலிதாவைப் பின்னணிப் பாடகியாக்கி, நான்கு தமிழக முதல்வர்களோடு திரைத்துறையில் பணியாற்றியவர் என்கிற பெருமையைப் பெற்றார். சி.எஸ்.ஜெயராமன் குரலில் ‘யார் சொல்லுவார் நிலவே’, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி குரலில் ‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே’, பி.பானுமதி குரலில் ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’, எஸ்.சி.கிருஷ்ணன் குரலில் ‘பூனைக் கண்ணை மூடிக்கொண்டால்’, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குரலில் ‘சிரிப்பு... இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு..’, டி.எம்.சௌந்தரராஜன் குரலில் ‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’, ஜே.பி.சந்திரபாபு குரலில் ‘ஒண்ணுமே புரியல உலகத்திலே’ என, இந்த அற்புதமான படைப்பு, இசையாளுமைகளுடன் இணைந்து பணிபுரிந்த டி.ஆர்.பாப்பாவின் புகழை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அன்று இளம் தலைமுறை பாடகர்களாக வளர்ந்துகொண்டிருந்த எஸ்.ஜானகி, ஏ.எல்.ராகவன், எம்.ஆர்.விஜயா போன்ற பலருக்கும் வாய்ப்பு கொடுத்து அரவணைத்துக் கொண்டார்.
பக்தி இசையில் உச்சம்!
பகுத்தறிவு இயக்க முன்னோடிகளுடன் திரைத்துறையில் பணியாற்றிய போதிலும் டி.ஆர். பாப்பா பக்தி இசையின் உச்சத்தையும் தொட்டு இசையில் ஒரு சிறந்த கர்மயோகியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். தனது இசையமைப்பில் கிட்டத்தட்ட 1000 பாடல்கள் பாடி சாதனை புரிந்திருக்கும் சீர்காழி கோவிந்தராஜன் குரலில், அபிராமி அந்தாதியைச் செய்யுளுக்கு ஒரு ராகம் என்கிற அடிப்படையில் நூறு ராகங்களில் மெட்டமைத்துப் பரவசப்படுத்தி இருக்கிறார். இவரது ‘சின்னஞ்சிறு பெண் போலே... சிற்றாடை இடை உடுத்தி...’ என்கிற அம்மன் பக்திப் பாடல், சிந்து பைரவி ராகத்துக்கே ஒரு தனி அடையாளமாகிப் போனது. கந்தர் அலங்காரம், திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப் பல பக்தி இலக்கியங்களுக்கு இசை அலங்காரம் செய்திருக்கிறார்.
வானொலிச் சாதனை
அகில இந்திய வானொலியைத் தனது அன்னை இல்லமாக நினைத்திருந்த டி.ஆர்.பாப்பா, அதன் மூலமாகக் குரல் இசை தேர்வுக்கு வரும் இளம் பாடகர்கள் பலரை ஊக்கம் கொடுத்து வளர்த்திருக்கிறார். மரணம் அடைவதற்கு முதல் நாள்கூட பெங்களூருவில் நடைபெற்ற ஆகாச வாணி சங்கீத சம்மேளனத்தின் ‘வாத்திய விருந்தா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்.
தமிழகத் திரைக்களத்தை அரசியல் களமாக்கி அதிரவைத்த எம்.ஜி.ஆர். - கவிஞர் வாலி கூட்டணியை ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’, ‘குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா..’ ஆகிய பாடல்களோடு முதலில் தொடங்கி வைத்தவர் இவரே. டி.ஆர்.பாப்பாவோடு தனிப்பட்ட முறையில் நட்புகொண்டிருந்த மு.கருணாநிதி, இவரைத் தமிழ்நாடு இசைக்கல்லூரியின் முதல்வர் ஆக்கினார். கு.மா.பாலசுப்பிரமணியத்தின் வரிகளில் டி.எல்.மகாராஜன் குரலில் டி.ஆர்.பாப்பாவின் இசையில் ‘அவர்தான் கலைஞர் அஞ்சுகச் செல்வர்’ என இன்றைக்கும் திமுக மேடைகளில் ஒலிக்கும் கட்சிப் பாடல், இந்த இரண்டு மகத்தான தமிழ்த் திரைத்துறை மேதைகளை அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.