

ஓவியம்: முத்து
‘குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தாயும் தற்கொலை’ - செய்தித்தாள்களில் இந்த வரியைக் கடக்கும்போதெல்லாம் இதயம் ஒரு கணம் நின்று துடிக்கிறது. பத்து மாதம் சுமந்து, பிரசவ வலி பொறுத்து, உலகத்திலேயே உயர்ந்த உறவு என்று கொண்டாடப்படும் தாய்மையே, தன் பெற்ற பிள்ளையின் உயிரைப் பறிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது எதனால்? வறுமையா? கணவன் கைவிட்டதா? குடும்ப வன்முறையா? இதில், எதுவாக இருப்பினும், ‘இனி வழியே இல்லை’ என்ற அவநம்பிக்கையின் உச்சம் அது.
‘பெண்கள் ஆளப் பிறந்தவர்கள், அழியப் பிறந்தவர்கள் அல்ல’ என்ற உண்மையை நாம் உரக்கச் சொல்ல வேண்டும். பிரச்சினைகள் நூறு இருக்கலாம், ஆனால் அதற்கான தீர்வுகள் சட்டப் புத்தகங்களில் இருக்கின்றன.
நேற்றும் இன்றும்: ஒரு சட்டப் பார்வை - 2005க்கு முன்பு, குடும்பப் பிரச்சினையில் சிக்கிய பெண்களுக்கு ஒரு சில வழிகள்தான் இருந்தன. ஒன்று, கணவனுடன் வாழ வேண்டும் என்று கேட்டு வழக்கு போடுவது (Restitution of Conjugal Rights) அல்லது அந்த வாழ்க்கையே வேண்டாம் என்று விவாகரத்து கேட்பது. இவை இரண்டுமே நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள்.
அடுத்த வழி, காவல் நிலையம் செல்வது. ஆனால், காவல் நிலையத்தில் குடும்பப் பிரச்சினைகளுக்காகப் புகார் அளிப்பது, பல நேரங்களில் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போலாகிவிடும். கணவன் கைது செய்யப்பட்டால் குடும்பம் நிரந்தரமாக உடைந்துவிடுமோ என்ற பயம், காவல் நிலையச் சூழல் தரும் பதற்றம் போன்றவை பெண்களைத் தயங்க வைத்தன.
‘இதற்குத் தற்கொலையே மேல்’ என்று அவர்கள் நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. 'குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான 2005ஆம் ஆண்டின் சட்டம் வந்த பிறகு, குடும்பத்தை உடைக்காமலேயே, கணவனைச் சிறைக்கு அனுப்பாமலேயே, ஒரு பெண் தனக்கான உரிமைகளையும், நிம்மதியையும் கேட்டுப் பெற முடியும்.
பாதுகாப்பு அரண்: பெண்கள் அச்சப்படத் தேவையில்லை. இன்று சட்டத்தின் பாதுகாப்பு நான்கு திசைகளிலும் உங்களைக் காக்கத் தயாராக உள்ளது. இந்தச் சட்டம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக நான்கு முக்கிய அமைப்புகளை நியமித்துள்ளது: உடல் ரீதியான வன்முறை மட்டுமல்லாமல் மனரீதியான / உளவியல் ரீதியான/ பொருளாதார ரீதியான வன்முறைகள் இவற்றை உள்ளடக்கிய எந்த வன்முறையையும் செய்வதை தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலம் பெற முடியும்.