

யோகாவின் முக்கியத்துவத்தை உலக அளவில் பரவலாக்கும் நோக்கில் 2014-ம் ஆண்டு இந்தியா முன்வைத்த தீர்மானத்தை 177 நாடுகள் ஆதரித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் அவை ஜூன் 21ம் தேதியை உலக யோகா நாளாக அறிவித்தது.
அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் உலக யோகா நாள் அனுசரிக்கப்படுகிறது. 2026ம் ஆண்டில் 12வது உலக யோகா நாளுக்கான கருப்பொருளாக ‘ஆரோக்கியமான வயோதிகத்துக்கு யோகா’ என ஐ.நா அறிவித்துள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆரோக்கியமாகவும் தன்னிறைவுடனும் வாழ யோகாசனப் பயிற்சி உதவும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம், தூக்கமின்மை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது அவசியம். உலக யோகா நாள் கொண்டாடத் தொடங்கியதற்குப் பிறகு, யோகா குறித்த விழிப்புணர்வும் அதன் மீதான ஆர்வமும் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.
அதனால் தான் உலக யோகா நாள் என்பது பாரம்பரியத்தை நினைவுகூரும் நாளாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.