

ஜனவரி:
ஆர்.சிதம்பரம் (ஜனவரி 4) - இந்திய அரசின் அறிவியல் ஆலோசக ராகப் பணியாற்றிய ஆர்.சிதம்பரம் (88), பொக்ரான் 1 (1974), பொக்ரான் 2 (1998) அணுகுண்டுப் பரிசோதனைகளில் அங்கம் வகித்தவர்.
ஜெயச்சந்திரன் (ஜனவரி 9) - பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச் சந்திரன் (80), தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறுமொழிகளில் 16,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.
கே.எம்.செரியன் (ஜனவரி 26) - இந்தியாவின் முதல் பைபாஸ், இதய மாற்று அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் கே.எம்.செரியன் (82), இந்தியாவின் முதல் இதய – நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்.
பிப்ரவரி:
நவீன் சாவ்லா (பிப். 1) - இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா (79), பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதற்காக அறியப்படுபவர்.
மார்ச்:
நந்தலாலா (மார்ச் 4) - த.மு.எ.க.ச.வின் மாநில முன்னாள் துணைத்தலைவரான கவிஞர் நந்தலாலா (70), தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றப் பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர்.
இரா.நாறும்பூநாதன் (மார்ச் 16) - எழுத்தாளரும் த.மு.எ.க.ச. மாநில துணைச் செயலாளருமான நாறும்பூநாதன் (64), தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது பெற்றவர்.
தேவேந்திர பிரதான் (மார்ச் 17) - பிஜேபி தலைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான தேவேந்திர பிரதான் (83), வாஜ்பாய் அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து - வேளாண்மைத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றியவர்.
ஷிஹான் ஹுசைனி (மார்ச் 25) - வில்வித்தைப் பயிற்சியாளரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி (60), 400க்கும் மேற்பட்டவர்களுக்கு வில்வித்தை பயிற்சியளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
மனோஜ் பாரதிராஜா (மார்ச் 25) - இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48), ‘கார்த்திகை திங்கள்’ படம் மூலம் இயக்குநர் ஆனவர்.
ஏப்ரல்:
மனோஜ் குமார் (ஏப். 4) - பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் (87), ‘ஃபேஷன்’ படம் மூலம் 1957இல் திரையுலகில் அறிமுகமானார். 1965 இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து ‘உபகார்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
குமரி அனந்தன் (ஏப்.9) - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (93), தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
போப் பிரான்சிஸ் (ஏப்.21) - கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 2013 மார்ச் 13 அன்று 266ஆவது போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்கர் இவர். புனித பீட்டர் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் யேசு சபையினரும் இவரே.
கே.கஸ்தூரிரங்கன் (ஏப்.25) - இஸ்ரோ முன்னாள் தலைவரான கே.கஸ்தூரிரங்கன் (84), பாஸ்கரா 1, பாஸ்கரா 2 ஆகியவற்றின் திட்ட இயக்குநர். இன்சாட் - 2, தொலை உணர் செயற்கைக்கோள்கள் (ஐஆர்எஸ் 1ஏ – 1பி), ஆகியவை இவரது மேற்பார்வையில் உருவாக்கப்பட்டன.
மே:
எம்.ஆர்.சீனிவாசன் (மே 20) - அணு விஞ்ஞானியான எம்.ஆர்.சீனிவாசன் (95), இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சரா உருவாக்கத்தில் விஞ்ஞானி ஹோமி பாபாவுடன் இணைந்து பணியாற்றியவர். 18 அணுமின் நிலைய திட்டங்களுக்குத் தலைமை வகித்தார்.
ஜெயந்த் நாரலீகர் (மே 20) - இந்திய அணு இயற்பியலாளரான ஜெயந்த் நாரலீகர் (86) வானவியல், ஈர்ப்பு விசை, விண்மீன்களின் இயற்பியல் போன்ற துறைகளில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவர்.
ராஜேஷ் (மே 29) - தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ராஜேஷ் (75), தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர்.
ஜூன்:
விக்ரம் சுகுமாரன் (ஜூன் 1) - தமிழ்த் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் (47), ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். பின்னர், ‘ராவணக் கோட்டம்’ படத்தை இயக்கினார்.
எம்.எஸ். ஜனார்த்தனம் (ஜூன் 6) - சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் (89), மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவராக இருந்தவர். தமிழகத்தில் இஸ்லாமியர் - கிறிஸ்துவர் இட ஒதுக்கீடு இவரது பரிந்துரையின் அடிப்படையில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
விஜய் ரூபானி (ஜூன் 12) - குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான விஜய் ரூபானி (68), பாஜகவின் குஜராத் மாநிலத் தலைவர் பொறுப்பு வகித்தவர்.
ஜூலை:
வா.மு.சேதுராமன் (ஜூலை 4) - மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91), பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தில் நிறுவனராக இருந்தவர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பதிப்பித்துள்ளார்.
கோட்டா சீனிவாச ராவ் (ஜூலை 13) - தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவந்தவர் கோட்டா சீனிவாச ராவ் (83). 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சரோஜாதேவி (ஜூலை 14) - பழம்பெரும் நடிகை சரோஜாதேவி (87) தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரையுலகில் 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர்.
மு.க.முத்து (ஜூலை 19) - தமிழ்த் திரைப்பட நடிகரும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (77), ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
வி.எஸ்.அச்சுதானந்தன் (ஜூலை 21) - கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (102), சுதந்திரப் போராட்ட வீரர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தபோது கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர். கேரள சட்டமன்றத்தில் அதிக ஆண்டுகள் (15) எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.
ஆகஸ்ட்:
வே.வசந்தி தேவி (ஆக. 1) - மூத்த கல்வியாளரும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி (87), தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராகவும் செயல்பட்டார்.
சிபு சோரன் (ஆக. 4) - ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் (81), நாடாளுமன்ற உறுப்பினராக எட்டு முறை பதவிவகித்தவர்.
இல. கணேசன் (ஆக.15) - பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநருமான இல. கணேசன் (80), ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேரச் சேவகராக இருந்து தமிழக பாஜகவின் தலைவராக ஆனவர்.
சுதாகர் ரெட்டி (ஆக. 22) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான சுரவரம் சுதாகர் ரெட்டி (83), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியத் தலைவராக இருந்தவர்.
செப்டம்பர்:
எஸ்.எல்.பைரப்பா (செப்.24) - பிரபல கன்னட எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பா (94), கடந்த ஐம்பது ஆண்டுகளில் 24 நாவல்களை எழுதியுள்ளார்.
அக்டோபர்:
ஜேன் குடால் (அக்.1) - குரங்கியல் நிபுணரான ஜேன் குடால் (91), லண்டனில் பிறந்து வளர்ந்தவர். பரிணாம வளர்ச்சி தொடர்பான சிம்பன்சிகளைக் குறித்த ஆய்வுகளின் முன்னோடி இவர்.
நடன.காசிநாதன் (அக்.6) - தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரான நடன.காசிநாதன் (84) பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், பழமையான சிற்பங்கள், நடுகற்களைக் கண்டறிந்த பெருமைக்குரியவர்.
நவம்பர்:
வி.சேகர் (நவ.14) - தமிழ்த் திரைப்பட இயக்குநர் வி.சேகர் (73), ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
தர்மேந்திரா (நவ.24) - பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89), ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ படத்தின் மூலம் 1960இல் இந்தித் திரையுலகுக்கு அறிமுகமானார். பாலிவுட்டின் ‘ஹீமேன்’ என அழைக்கப்பட்ட இவர் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
டிசம்பர்:
ஏவி.எம்.சரவணன் (டிச. 4) - திரைப்படத் தயாரிப்பாளரான ஏவி.எம்.சரவணன் (86), ஏவி.எம். புரொடெக்ஷன்ஸ் நிறுவனர் ஏவி.மெய்யப்பனின் மகன். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் இவர்.
சிவராஜ் பாட்டீல் (டிச. 12) - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90), மக்களவை சபாநாயகராக இருந்தவர்.
காலீதா ஜியா (டிச. 30) - வங்கதேச முதல் பெண் பிரதமரான காலீதா ஜியா (80), வங்கதேச முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவி. இவர் இரண்டு முறை வங்கதேசப் பிரதமராக இருந்தவர்.