

மத்திய அரசு சார்ந்தவை:
* மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான முடிவை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
*இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயமடைந்தனர். ஐவர் உள்பட 13 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து டெல்லியில் இலங்கைத் தூதரை அழைத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
*மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
* நாட்டிலேயே முதல் முறையாக பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்ட செங்குத்துத் தூக்குப்பாலத்துடன் கூடிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
* டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
* மாமன்னர்கள் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழனுக்குத் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி அறிவித்தார்.
* நாட்டிலேயே உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளைத் திறம்பட மேற்கொண்ட தற்காகத் தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கியது.
சட்டமன்றம் / அரசுத் திட்டம் / செயல்பாடுகள்
* ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்தது.
* 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங் களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் இரண்டு சட்ட மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேறின.
* தமிழகத்தில் 6-12ஆம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் வகை யில் ‘புதுமைப்பெண்’ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
* தமிழக அரசின் பட்ஜெட் இலச்சி னையில் இந்திய ரூபாய் (₹) குறியீட்டுக்குப் பதிலாக ‘ரூ’ இடம்பெற்றது.
* சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் சமர்ப்பித்தனர்.
* தமிழக சட்டப்பேரவையில் 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.19,287 கோடிக்கு இறுதித் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
* நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளி களை நேரடி நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டது.
* கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிசெய்யும் புதிய சட்டம் நிறை வேறியது.
* ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சி களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
* மத்திய அரசின் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
* கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்திச் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
* தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்கு களும் எதிராக 154 வாக்குகளும் கிடைத்தன.
* கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க மசோதா உள்பட 18 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
* தனியார் சித்த மருத்துவப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கும் சட்டம் உள்பட 18 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
* தமிழகத்தில் பொது இடங்கள், நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்டம் நடை முறைக்கு வந்தது.
* பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட 6 புதிய திட்டங்களுக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
* உதவிக் காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வில் இனி காவல் துறை இட ஒதுக்கீடு கிடையாது எனவும் அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து, உடல்தகுதித் தேர்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டது.
* சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க முன்னாள் நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது.
* தமிழ்நாடு உடற்கல்வியியல் விளை யாட்டுப் பல்கலைக்கழக மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
உத்தரவுகள்
* தமிழக அரசின் 7ஆவது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டது.
* அரசாணைகளைத் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறைச் செயலாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சி - செய்தித் துறைச் செயலாளர் உத்தரவிட்டார்.
* கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழனி, கொ.மா.கோதண்டம், புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
* முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
* ஊரக உள்ளாட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப் படும் கட்டுமானங்களைப் பூட்டி சீல் வைக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.
* நோய்வாய்ப்பட்ட தெருநாய்களைக் கருணைக் கொலை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.
* ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.
* பனைமரத்தை வெட்டும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டது.
* பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தின் எல்லையை ஒட்டிய, சதுப்பு நிலத் தாக்கம் உள்ள 1 கி.மீ. சுற்றுப்பகுதிகளுக்குள் எவ்விதக் கட்டிட அனுமதியும் வழங்கக் கூடாது என்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உத்தரவு பிறப்பித்தது.
* அரசியல் கட்சிப் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான பரிந்துரைகளைத் தமிழக அரசு வழங்கியது.
அரசு அறிவிப்புகள்
* முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது.
* 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாடத் தமிழக அரசு தடை விதித்தது.
* போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
* ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக் கோட்டை, தேர்த்தங்கல் பறவைக் காப்பகங்கள் புதிய ராம்சர் தலங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.
* தமிழ்நாடு 9.5 சதவீத வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சத்தைப் பதிவுசெய்து, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழ்வதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
* மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
* தமிழகத்தில் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தித் தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
* சென்னை, திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.
* போதை மீட்பு மையங்கள், மறுவாழ்வு மையங்களில் நோயாளிகளுக்குச் சிகிச்சை, கையாளுதல் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.
* வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர்மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
திட்டங்கள்
* ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்கிற சிறப்பு மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டது.
* முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் ‘தாயுமானவர்’ திட்டம் தொடங்கப்பட்டது.
* தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்குக் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப்முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* சமூக நலம், மகளிர் உரிமைத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநிலத் திருநங்கையர் நலக் கொள்கை 2025’ வெளியிடப்பட்டது.
* 2025 ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் 120 மின்சாரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
* ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
* தமிழகத்தின் மிக நீளமான கோவை - அவிநாசி சாலையில் ஜி.டி. நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டது. 10.10 கிமீ தொலைவுக்குக் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் இது.
தமிழக அமைச்சரவை:
* பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் தமிழக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
* பொன்முடி வசம் இருந்த வனம் - காதித் துறை ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி வசம் இருந்த மின் துறை எஸ்.எஸ்.சிவசங்கருக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. மதுவிலக்கு - ஆயத்தீர்வை துறை சு.முத்துசாமிக்குக் கூடுதலாக வழங்கப் பட்டது.
* தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவருக்குப் பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* தமிழக அமைச்சரவையில் 2 அமைச் சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. துரை முருகன் வசம் இருந்த கனிமவளத் துறை எஸ்.ரகுபதிக்கும், அவரிடமிருந்த சட்டத் துறை துரைமுருகனுக்கும் ஒதுக்கப்பட்டது.
அரசு நிகழ்ச்சி:
* கேரள மாநிலம் வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக பெரியார் நினைவகம் திறக்கப்பட்டது.
* கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா நிகழ்வின் ஒரு பகுதியாக விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் வகையில் கண்ணாடி இழை நடைபாலம் திறக்கப்பட்டது.
* குறைந்த விலையில் மருந்துகளை வழங்க தமிழகத்தில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
* ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது.
* சென்னை விமான நிலையம் அருகே ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஆளுநர் / ஆளுநர் மாளிகை:
* 2025ஆம் ஆண்டு முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரைக்கு முன்பாகத் தேசிய கீதம் பாடப்படவில்லை என்கிற கருத்தை வலியுறுத்தி அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளி யேறினார்.
* தமிழ்நாடு உடற்கல்வி - விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதிகள் இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அறிவுறுத்தினார்.
* தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோ தாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்.
உள்ளாட்சி அமைப்பு:
* வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு முடிந்த பிறகு 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியாகும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்தது.
* சென்னை, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும், கன்னியாகுமரி உள்பட 14 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்குவதற்கான மறுசீரமைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது.
* தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் பங்கேற்காமல் புறக் கணித்தனர்.
அரசியல்:
* மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்வதை 25 ஆண்டுகள் தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்கள் பினராயி விஜயன் (கேரளம்), ரேவந்த் ரெட்டி (தெலங்கானா), பகவந்த் மான் (பஞ்சாப்), கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 14 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
* உச்ச நீதிமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
* பாமகவின் தலைவராகத் தானே இருக்கப் போவதாக பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். பாமக செயல் தலைவராக மகள் காந்தியை அவர் அறிவித்தார்.
* தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
* கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வுசெய்யப்பட்டார்.
* தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருடைய குடும்பத்தினருக்குச் சொந்தமான ஜவுளிஆலையில் உள்பட திண்டுக்கல், சென்னை யில் 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
* தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாத மமக, கொமதேக உள்ளிட்ட 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
தொகுதி மறுசீரமைப்பு:
* மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விவாதிக்கத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது.
* மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தற்போதைய நிலையே அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
* நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை விவகாரம் தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
தேர்தல் ஆணையம்:
* சென்னை தலைமைச் செயலகத்தில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் 2025 ஜனவரியில் வெளியிட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
* செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர் களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1,76,505 வாக்காளர் களும் உள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்தார்.
* ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 45 பேர் வைப்புத் தொகையை இழந்தனர்.
* தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலிலிருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப் பட்டனர்.
தேர்தல்:
* மாநிலங்களவையில் திமுக எம்.பி.க் கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், மதிமுக எம்.பி. வைகோ, அதிமுக எம்.பி. சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24இல் முடிவடைந்தது.
* தமிழகத்தில் காலியான ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் பி.வில்சன், சிவலிங்கம், சல்மா; மநீம சார்பில் கமல்ஹாசன், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால், ஆகியோர் போட்டியின்றித் தேர்வாயினர்.
குற்றம் / காவல்:
* மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.
* எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 2024இல் நடைபெற்ற தீ விபத்து சம்பவம் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு ஏடிஜிபி கல்பனா நாயக் எழுதிய கடிதம் வெளியே கசிந்த நிலையில், பெண் டிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்குச் சதித் திட்டம் காரணம் அல்ல என்று சங்கர் ஜிவால் விளக்கம் அளித்தார்.
* பணப் பரிவர்த்தனை முறைகேடு, வரி ஏய்ப்புப் புகாரில் அமைச்சர் கே.என்.நேரு, அவருடைய உறவினர் வீடுகள் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
* டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறை கேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டிய நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
* போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணாவைச் சென்னை காவல் துறை யினர் கைதுசெய்தனர்.
* சாத்தான்குளம் தந்தை - மகன் காவல் நிலையக் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து வழக்கின் முதல் எதிரியான காவல் ஆய்வாளர் தர் மனு தாக்கல் செய்தார்.
* உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் தந்தை - மகன் இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்டிக் கொன்ற வழக்கில் தொடர்புடைய மணிகண்டனை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
விபத்துகள்:
* கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள லெவல் கிராஸிங்கில் பள்ளி வேன் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவி, 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
* விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் நடைபெற்ற பட்டாசு விபத்தில் பெண் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
பள்ளிக் கல்வி:
* தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 0.47% அதிகம். தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில் மாணவிகள் 96.70%, மாணவர்கள் 93.16% தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் அரியலூர் மாவட்டம் 98.82% பெற்று முதலிடம் பிடித்தது.
* 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 8.71 லட்சம் பேரில் 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது.
* பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இக்கொள்கையில் 2025-26 கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைமுறை ரத்து செய்யப்படும்; தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
* ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ் தகுதித்தாள் தேர்வில் 2.36 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 85 ஆயிரம் பேர் தோல்வி அடைந்தனர்.
* கும்பகோணம் அரசு மாதிரிப் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ்டூ மாணவர் கவியரசன் உயிரிழந்தார்.
* பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய கல்வித் துறை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்நாட்டில் இந்த அறிவிப்பு பின்பற்றப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
* ஐஏஎஸ் உள்பட சிவிஸ் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 1,009 பேர் வெற்றி பெற்றனர். தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த சிவச்சந்திரன் முதலிடம் பிடித்தார்.
நீட் விவகாரம்:
* நீட் விலக்கு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துவிட்ட நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது பற்றி சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
* மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தேசிய தேர்வு முகமைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தாலும், பிறகு இந்தத் தடை விலக்கப்பட்டுவிட்டது.
மற்ற நிகழ்வுகள்:
* முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதற்கு மனிதத் தவறே காரணம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவித்தது. 2021இல் பிபின் ராவத் உள்பட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர்.
* இசை முரசு என்றழைக்கப்படும் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணுவின் நூறாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
* இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் சிம்பொனி இசைக்கோவை யான ‘வேலியன்ட்’டை லண்டனில் அரங்கேற்றினார். ஆசியக் கண்டத்திலிருந்து இச்சாதனையைப் படைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா.
* இசைத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த இளையராஜாவுக்குத் தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பரில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
* விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
* தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
* 2024இல் தமிழ்நாட்டில் மூளைச் சாவு அடைந்த 268 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்ததாக மாநில உறுப்பு மாற்று ஆணையம் தெரிவித்தது.
* நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நவீன வசதிகளுடன் ரூ.130 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது.
* இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் நிலவிவந்த நிலையில், ராணுவத்துக்கு ஆதரவாகத் தேசியக் கொடியேந்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி சென்னையில் நடைபெற்றது.
* சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
* காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்றார். இவர் சங்கரமடத்தின் 71ஆவது பீடாதிபதி.
* விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையை உலக மரபுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.
* நடப்பாண்டில் (2025-26) மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
* சென்னையில் முதல் முறையாக நிகழ்ந்த நீரிடியால் (மேக வெடிப்பு) பல்வேறு பகுதிகளில் அதிகன மழை கொட்டித் தீர்த்தது.
* தூயமல்லி, அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச்
சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருள் களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்தது.
* சென்னையில் ஆறாவது நீர்த்தேக்கத் திட்டத்துக்குக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங் கியது.
நியமனம்:
* தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஆனார் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்.
* தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங் குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இமையம் நியமிக்கப்பட்டார்.
* சென்னை தரமணி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
* தமிழகக் காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வுபெற்றார். இதையடுத்துப் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் பதவி யேற்றார்.
* தமிழக அரசின் தலைமை காஜியாக (சன்னி பிரிவு) என்.பி. உஸ்மான் முகாயிதின் நியமிக்கப்பட்டார்.
விருது:
* 2024ஆம் ஆண்டுக்கான ‘வைக்கம் விருது’ கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூரு மஹாதேவாவுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கியது.
* பிரபல வயலின் கலைஞர் ஆர்.கே. ராம் குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது, நடனக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணாவுக்கு ‘நிருத்திய கலாநிதி’ விருதுகளை சென்னை மியூசிக் அகாடமி வழங்கியது.
* தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டது.
* 2025ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த திருநங்கை’ விருது ரேவதி, பொன்னி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
* தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டது.
* தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்கக் கலைஞர் குருவாயூர் துரை, நடிகை ஷோபனா, புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்தி உள்பட 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
* சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்குத் தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.