

பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் தங்கு தடை யின்றித் தங்களது பாதையில் செல்ல முடியுமா? தொழில்நுட்பம் அதற்குத் துணையாக இருக்குமா? இது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிற வகையில் ஒரு ‘ஸ்மார்ட் காலணி’ சிலரால் பயன்படுத்தப்படுகிறது.
அதன் பெயர் ‘லேச்சல்’. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிருத் சர்மா, கிரிஸ்பியன் லாரன்ஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் இணைந்து 2011இல் ‘டுசெர் டெக்னாலஜிஸ்' புத்தொழில் நிறுவனத்தைத் தொடங்கினர். அதில்தான், உலகின் முதல் தொடுஉணர் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் காலணி உருவாக்கப்பட்டுள்ளது.
எப்படிச் சாத்தியம்?
லேச்சல் காலணியின் பாதம் படும் பகுதியில் புளுடூத் பாட்ஸ் (Bluetooth pods) பொருத்தப்பட்டுள்ளன. பார்வைத்திறன் குறைபாடுடைய ஒருவர் இதைத் தனது திறன்பேசியில் உள்ள லேச்சல் செயலி (Lechal App) உடன் இணைத்தால்போதும். அவர், தான் செல்ல வேண்டிய திசையைத் தெரிந்துகொள்ளத் திரையைப் பார்க்க வேண்டிய தேவையில்லை.
வலது அல்லது இடது என எந்தப் பக்கம் திரும்ப வேண்டுமோ, அதற்கு ஏற்ப வலது அல்லது இடது காலணி லேசாக அதிர்வுறும். தோளில் தட்டி வழிகாட்டுவதுபோல, கால்கள் மூலமாக இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.