

தமிழ்நாட்டில் வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை எச்சரிக்கைகள் வந்தன. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் 'கத்தரி பிறக்கப்போகிறது', ‘அக்கினி நட்சத்திரம் முடியும் வரை இப்படித்தான் இருக்கும்' என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சொல்வது போலவே அந்தக் காலக்கட்டத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
அக்கினி நட்சத்திரம் என்றால் என்ன? இது எப்படிக் கணக்கிடப்படுகிறது? அக்கினி நட்சத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் நம் முன்னோர்களின் காலக் கணிதத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
தமிழ் மாதங்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன? சூரியன் எந்த ராசியில் உள்ளது என்பதைக் கொண்டு. ராசி என்றதும் இது சோதிடத்துடன் தொடர்புடையதோ என்று எண்ண வேண்டாம். சோதிடம் என்பது தனி மனிதர்களின் வாழ்க்கையை வானில் உள்ள கோள்களின் நிலையுடன் தொடர்புபடுத்த முயல்வது.
அதற்கு அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லை. காலக்கணிதம் என்பது வானில் சூரியன், சந்திரன் இருக்கும் நிலையைக் கொண்டு காலத்தைக் கணிப்பது – அறிவியல்பூர்வமானது.
நம் முன்னோர்கள் காலத்தை எப்படிக் கணக்கிட்டனர்?
நேரம்: பகலில் சூரியனின் நகர்வைக் கொண்டும் இரவில் விண்மீன்களின் நகர்வைக்கொண்டும் நேரத்தைக் கணித்தனர். சூரிய உதயம் முதல் அடுத்த சூரிய உதயம் வரை ஒரு நாள் என்றும் ஒரு நாளுக்கு 60 நாழிகை என்றும் கணக்கிடப்பட்டது. அதாவது, நாம் இப்போது பயன்படுத்தும் 1 மணி நேரம் என்பது 2½ நாழிகை.
நாள்: நிலவு பூமியைச் சுற்றி வருகிறது அல்லவா? நிலவு ஒரு முறை பூமியைச் சுற்றிவர சுமார் 27 நாள்கள் ஆகும். எனவே, இரவு வானில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் என 27 நட்சத்திரங்களுக்கு அருகில் நிலவு தெரியும். அதாவது, பூமியைச் சுற்றியுள்ள 360 டிகிரியை 27 நட்சத்திரங்களாகப் பிரித்துவிடலாம்.
இவையே அஸ்வினி, பரணி, கார்த்திகை என்று 27 நட்சத்திரங்களாகப் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஆங்கில நாள்காட்டியில் தேதி இருப்பதுபோல, இந்திய நாள் காட்டியில் நட்சத்திரம் முக்கிய இடம் வகித்தது. அதனால்தான் குழந்தை பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கம் வந்தது.