

நீண்டகால விண்வெளிப் பயணங்களால் மனித உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? இதனைக் கண்டறிவதற்காகத் தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், சோயுஸ் விண்கலத்தில் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து அண்மையில் சர்வதேச விண்வெளிநிலையம் சென்றார். எட்டு மாதங்கள் அங்கு தங்கும் அனில் மேனன் குறைவான புவியீர்ப்புவிசையால் ரத்த ஓட்டம், இதயச் செயல்பாடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்படுகிற தாக்கம் எத்தகையது என்று ஆராய இருக்கிறார்.
மேலும், அந்தச் சூழலில் செமிகண்டக்டர் உற்பத்தித்திறன், உயிரியல் திசு வளர்ச்சி உள்ளிட்டவற்றையும் சோதிக்கிறார். இவரது சோதனை முடிவுகள் எதிர்காலத்தில் சந்திரன், செவ்வாய் நோக்கி விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்கான படிப்பினைகளைத் தருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.