

ஓவியம்: முத்து
சிவகங்கைச் சீமையின் செம்மண் புழுதியில், மாலை வெயில் பொன்னிறமாய் திண்ணையை நனைத்துக் கொண்டிருந்தது. அங்கு அமர்ந்திருந்த சொக்கலிங்கத்தின் கண்களில் முதுமையின் தளர்வை விட, மனதின் பாரமே அதிகமாய் தெரிந்தது. மனைவி மண்ணோடு கலந்த பின், ஒரே மகன் முருகன்தான் அவருக்கு மிஞ்சிய சொத்தும், மீதமிருந்த சொர்க்கமும்.
“என் மூச்சுள்ள வரை நீயும், உன் மூச்சுள்ளவரை இந்த நிலமும் நலமாய் இருக்க வேண்டும்” — இதுவே அவர் தவம். தான் வியர்வை சிந்திச் சேர்த்த வீடும், தங்கம் விளைந்த வயலும் மகனுக்குச் சேர வேண்டும் என்ற பேரன்பில், ஒரு செட்டில்மென்ட் ஆவணத்தை (Settlement Deed) எழுதிக் கொடுத்தார். அது வெறும் காகிதமல்ல; தன் வாழ்நாள் முழுவதையும் மகனிடம் ஒப்படைத்த ஒரு ‘நம்பிக்கைப் பத்திரம்’.