

அறிவொளி இயக்கத்துக்குப் பிறகு பிறந்தவர்கள்கூட அறிவொளி இயக்கம் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பார்கள். வயது வந்தோர் கல்வியில் தமிழ்நாட்டில் பெரும் பாய்ச்சலை உருவாக்கி, நாம் படிக்காவிட்டாலும் நம் குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக்கவைக்க வேண்டும் என்கிற மாபெரும் உந்துதலைத் தனது பாடல்கள், நாடகங்கள், சொல்லிக் கொடுக்கும் விதம் என எல்லாவற்றிலும் மக்களின் இயக்கமாக மலர்ந்த இயக்கம் அது.
அந்த மக்கள் இயக்கத்தை மலரச் செய்த தாய் இயக்கம் ஒன்று இருக்கிறது. அது அறிவொளி இயக்கத்தை மட்டுமல்ல, இந்தியா எங்கும் மலர்ந்த எழுத்தறிவு இயக்கத்துக்குத் தாய் இயக்கமான கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் (கே.எஸ்.எஸ்.பி.).
கே.எஸ்.எஸ்.பி. அமைப்பின் பொன்விழா மாநாடு கோழிக்கோட்டில் 2013இல் நடைபெற்றது. கேரளத்திலும் இந்தியா முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டார்கள்.
கோழிக்கோட்டில் இருந்த அந்த அமைப்பின் ஆர்வலர்கள் வீடுகளில் தங்க எல்லாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களே மாநாட்டுத் திடலுக்குக் காலையில் அழைத்துச் சென்றுவிடுவார்கள். மாநாடு நடைபெற்ற இடம் ஓர் அரசுப் பள்ளி.
இதே போன்ற ஒரு மாநாட்டை இங்கு நடத்தி இருந்தால், அவர்கள் செலவழித்ததைப் போலப் பல மடங்கு செலவு செய்து, அந்த மாநாட்டை நடத்த வேண்டி இருந்திருக்கும். ஆனால், ஒரு பொன்விழா மாநாட்டை மிக எளிமையாக, மிக மிகச் சிறப்பாகக் குடும்ப நிகழ்வு போல் நடத்துவதற்கு அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
இந்த மாநாட்டுக்குப் பணமாக யாரிடமிருந்தும் நிதி பெறப்படவில்லை. பொருள்களாகக் கொடுத்தால் பெற்றுக்கொண்டார்கள். அந்த அமைப்பின் வளர்ச்சி, இதர செலவுகளுக்குக்கூடப் பணமாக யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை.
நூல் விற்பனை எனும் மையம்
ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 40 வரை சமகாலத்துக்குத் தேவையான அறிவியல், சமூக நூல்களை அடையாளம் கண்டு, பொருத்தமானவர் களைக் கொண்டு எழுதி வாங்குகிறார்கள். அவற்றை விற்பதற்குக் கோடை விடுமுறையில் மிகப்பெரிய கலைப் பயணம் நடத்தப்படுகிறது.
அந்தக் கலைப் பயணத்தின் வழியாக எத்தனை கோடி ரூபாய்க்கு நூல்களை விற்க வேண்டும் என்று முன்பே தீர்மானிக்கிறார்கள். அதற்கு மேலாகவே நூல்களை விற்றும் விடுகிறார்கள். ஒவ்வொரு நூலும் சிறந்த கருப்பொருளைக் கொண்டிருக்கிறது.
‘இயற்கை, சமூகம், அறிவியல்', ‘வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்' போன்ற பல புத்தகங்கள், பல பதிப்புகள் கண்டாலும், எந்த மொழியில் வெளியானாலும் அந்த மொழியில் வேகமாக விற்றுத் தீரும் நூல்களாக உள்ளன.
இந்தப் புத்தக விற்பனை மூலமே அவர்களுடைய கிளைச் செயல்பாடு முதல் மாநிலச் செயல்பாடுகள்வரை எல்லாவற்றுக்கும் நிதி திரட்டப்படுகிறது. நூல் விற்பனையில் கே.எஸ்.எஸ்.பி. ஆர்வலர்கள் அனைவரும் ஈடுபட்டாக வேண்டும்.