நுகர்வோர் நீதிமன்றத்தை எவ்வாறு அணுக வேண்டும்? | கேளுங்க... கேளுங்க

நுகர்வோர் நீதிமன்றத்தை எவ்வாறு அணுக வேண்டும்? | கேளுங்க... கேளுங்க
Updated on
2 min read

கேள்வி: வாடகை ஒப்பந்தம் போடுவதன் அவசியம் என்ன மற்றும் வீட்டு உரிமையாளரோ அல்லது வாடகைதாரரோ ஒப்பந்தத்தை மீறினால் சட்டம் வழங்கும் தீர்வுகள் என்னென்ன?

பதில்: வீட்டு உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடையேயான உரிமைகள் மற்றும் கடமைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தமிழக அரசு 2017இல் தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின் பிரிவு 4இன் படி, குத்தகை காலம் எதுவாக இருந்தாலும், அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கட்டாயமாக எழுத்துப்பூர்வமாக மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் அவை வாடகை ஆணையரிடம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறை தமிழ்நாடு டெனன்சி போர்ட்டல் மூலம் ஆன்லைனில் மேற்கொள்ளப்படலாம்.

இது 1908ஆம் ஆண்டின் இந்திய பதிவுச் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு மேற்பட்ட குத்தகைகளுக்குப் பதியப்படும் வழக்கமான முறையிலிருந்து முற்றிலும் தனித்துவமானது. இத்தகைய எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்கள் மூலம் மாத வாடகை, முன்பணம், வாடகைக் காலம், பராமரிப்புப் பொறுப்பு, காலி செய்யும் நிபந்தனைகள் மற்றும் மின்சார, தண்ணீர் கட்டணங்கள் தெளிவாகப் பதிவு செய்யப்படுவதால், பிற்காலத்தில் ஏற்படும் தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும், இந்திய சாட்சியச் சட்டம் 1872இன் படி, இந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்கள் நீதிமன்றத்தில் மிக வலுவான ஆதாரமாகக் கருதப்படுகின்றன.

ஒருவேளை வீட்டு உரிமையாளர் ஒப்பந்தத்தை மீறி, வாடகைதாரரை காரணமின்றி வெளியேற்ற முயன்றாலோ, முன்பணத்தைத் திருப்பித் தர மறுத்தாலோ அல்லது அத்தியாவசிய வசதிகளைத் துண்டித்தாலோ வாடகைதாரர் சட்டப்பூர்வ தீர்வுகளைப் பெற முடியும்.

குறிப்பிட்ட நிவாரணச் சட்டம் 1963இன் கீழ் சட்டவிரோத வெளியேற்றத்தைத் தடுக்க தற்காலிக அல்லது நிரந்தரத் தடை உத்தரவு வழக்கைத் தொடரலாம். அதேபோல், ஒப்பந்த மீறலால் ஏற்பட்ட இழப்புகளுக்காக இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872இன் பிரிவு 73இன் கீழ் நஷ்டஈடு கோரலாம் மற்றும் தராத முன்பணத்தை மீட்க மீட்பு வழக்கைத் தாக்கல் செய்யலாம்.

மறுபுறம், வாடகைதாரர் ஒப்பந்தத்தை மீறி வாடகை செலுத்தாமல் இருந்தாலோ, சொத்தைச் சேதப்படுத்தினாலோ அல்லது ஒப்பந்த காலம் முடிந்தும் காலி செய்ய மறுத்தாலோ வீட்டு உரிமையாளருக்கும் சட்டப்படியான தீர்வுகள் உள்ளன. வீட்டு உரிமையாளர் 2017ஆம் ஆண்டின் தமிழ்நாடு வாடகைச் சட்டத்தின் கீழ் வாடகை நீதிமன்றத்தில் வெளியேற்ற மனுவைத் தாக்கல் செய்யலாம். மேலும் நிலுவையில் உள்ள வாடகைத் தொகையை வசூலிக்க மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சொத்துக்கு ஏற்பட்ட சேதங்களுக்காகச் சேதஈடு கோரவும் சட்டம் வழிவகை செய்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in