கிரிக்கெட் முதல் தடகளம் வரை: விளையாட்டு @ 2025 | மறக்க முடியுமா?

கிரிக்கெட் முதல் தடகளம் வரை: விளையாட்டு @ 2025 | மறக்க முடியுமா?
Updated on
4 min read

மகளிர் உலகக் கோப்பை வெற்றி:

* நவிமும்பையில் நவம்பர் 2 அன்று நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

*2005, 2017 ஆகிய ஆண்டுகளில் மிதாலி ராஜ் தலைமையிலான மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றும், கோப்பையை வெல்ல முடியவில்லை. நீண்ட காலமாகக் கோப்பையை வெல்லாமல் தவித்த மகளிர் அணியின் ஏக்கத்தை ஹர்மன்பிரீத் கெளர் தலைமையிலான இளமையும் அனுபவமும் கலந்த அணி போக்கியது.

கிரிக்கெட்:

* சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். 106 டெஸ்ட் போட்டி களில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இக்கோப்பையை 2002, 2013, 2025 என மூன்று முறை இந்தியா வென்றுள்ளது.

* சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அவர் 67 போட்டிகளில் 4,301 ரன்களைக் குவித்தார். இதில் 12 சதங்கள், 18 அரை சதங்கள் அடங்கும். மேலும் கேப்டனாக 24 டெஸ்ட் போட்டிகளில் 12 வெற்றி, 9 தோல்விகளைப் பெற்றார்.

* இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். விராட் கோலி 14 ஆண்டு கால டெஸ்ட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடி 9,230 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள், 31 அரை சதங்கள் அடங்கும். மேலும், 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 40 போட்டிகளில் வெற்றி, 17 தோல்விகளைப் பதிவுசெய்துள்ளார்.

* அகமதாபாத்தில் நடைபெற்ற பதினெட்டாவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணி வென்ற முதல் ஐபிஎல் கோப்பை இது.

* ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150 ரன்களுக்கு மேல் ரன் குவித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரின் சாதனையை, இந்திய கேப்டன் ஷுப்மன் கில் சமன்செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கில் 269, 161 ரன்களைக் குவித்தார்.

* ராஞ்சியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 52ஆவது சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒரு கிரிக்கெட் வடிவில் அதிக சதம் விளாசிய வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றார். டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் விளாசியதே அதிகபட்சம்.   

டென்னிஸ்:

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டம் - இத்தாலி வீரர் ஜானிக் சின்னர். மகளிர் ஒற்றையர் பட்டம் - அமெரிக்க வீராங்கனை மாடிசன் கீஸ். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டம் - ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ். மகளிர் ஒற்றையர் பட்டம் - அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்.

* விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டம் - போலந்தின் இகா ஷ்வாடெக், விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டம் - இத்தாலி வீரர் ஜானிக் சின்னர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டம் - பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா. அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டம் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ். டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ரோஹன் போபண்ணா அறிவித்தார்.

செஸ்:

* முன்னணியில் உள்ள ஆறு வீரர்கள் மட்டும் பங்கேற்ற நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஏழாவது முறையாகப் பட்டம் வென்றார். உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

* ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் சக நாட்டவரான கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

* சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர் பட்டம் வென்றார். சென்னையைச் சேர்ந்த 21 வயதான வி.எஸ்.ராகுல் இந்தியாவின் 91ஆவது கிராண்ட் மாஸ்டராக ஆனார்.

டேபிள் டென்னிஸ்:

* டேபிள் டென்னிஸ் போட்டிகளி லிருந்து ஓய்வுபெறுவதாகத் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சரத் கமல் (41) அறிவித்தார்.

ஹாக்கி:

* இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்காக 320 ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று 158 கோல்களை வந்தனா அடித்துள்ளார்.

* 24 நாடுகள் பங்கேற்ற 14ஆவது ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை தொடர் சென்னை, மதுரையில் நடைபெற்றது. இத்

தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென் டினாவை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது.

துப்பாக்கி சுடுதல்:

* பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி தங்கப் பதக்கம் வென்றார். இதில் 10 மீ. ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பபுதா - இளவேனில் வாலறிவன் இணை தங்கப் பதக்கம் வென்றது. மகளிர் டிராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

* டெல்லியில் நடைபெற்ற 16ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 50 தங்கம் உள்பட 99 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.

பளுதூக்குதல்:

* அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 193 கிலோ எடையைத் தூக்கித் தங்கப் பதக்கம் வென்றார்.

ஸ்குவாஷ்:

* ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ள எகிப்தின் ஹயா அலியை 117ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா வீழ்த்திப் பட்டம் வென்றார்.

வில்வித்தை:

* டாக்காவில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவின் இறுதிப் போட்டியில் கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

குத்துச்சண்டை:

* கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக் ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரேஸை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார்.

பாட்மிண்டன்:

* பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி - ஷிராக் ஷெட்டி இணை 10 இடங்களுக்குள் நுழைந்தது.

* 29ஆவது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி - ஷிராக் ஷெட்டி இணை வெண்கலம் வென்றது.

* குவாஹாட்டியில் நடைபெற்ற உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆசியத் தடகள சாம்பியன்ஷிப்:

* மும்முறை தாண்டுதல் பிரிவில் தமிழகத்தின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி தங்கம் வென்றார்.

* 3,000 மீ. ஸ்டீப்பிள்சேஸில் இந்தியா வின் அவினாஷ் சேபிள் தங்கப்பதக்கம் வென்றார். மகளிருக்கான 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் ஜிஸ்னா மேத்யூ, ரூபால் சௌத்ரி, ரஜிதா, சுபா வெங்கடேசன் ஆகியோரை உள் ளடக்கிய அணி தங்கப் பதக்கம் வென்றது.

* ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டா மிடத்தைப் பிடித்தது. சீனா முதலிடத்தையும் ஜப்பான் மூன்றாமிடத்தையும் பிடித்தன.

மற்றவை:

* தேசிய விளையாட்டுப் போட்டியில் சர்வீசஸ் அணி 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரம் (198 பதக்கங்கள்), ஹரியாணா (153 பதக்கங்கள்) முறையே இரண்டாம், மூன்றாமிடத்தைப் பிடித்தன. தமிழ்நாடு 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தது.

கிரிக்கெட் முதல் தடகளம் வரை: விளையாட்டு @ 2025 | மறக்க முடியுமா?
Single Salma: தன்னை அறியும் சல்மா உடைத்த ‘சமூகச் சடங்கு’ | திரை தேவதைகள் 01

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in