பார்க்கர் முதல் பெர்சவியரன்ஸ் ரோவர் வரை: அறிவியல் @ 2025 | மறக்க முடியுமா?

பார்க்கர் முதல் பெர்சவியரன்ஸ் ரோவர் வரை: அறிவியல் @ 2025 | மறக்க முடியுமா?
Updated on
4 min read

பார்க்கர் விண்கலம்: சூரியனின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் சூரியன் குறித்த நம் புரிதலை மேம்படுத்திக்கொள்ளவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ‘பார்க்கர்’ விண்கலத்தை அனுப்பியிருக்கிறது. 2018இல் சூரிய மண்டலத்தின் மையத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட பார்க்கர் விண்கலம், அதீத வெப்பத்தையும் அதீத கதிர்வீச்சையும் தாங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை 26 முறை சூரியனுக்கு நெருக்கமாகச் சென்றிருக்கிறது. அது நெருக்கமாகச் சென்ற ஒவ்வொரு முறையும் சூரியனை நோக்கிச் செல்லும் தூரம் குறைந்திருக்கிறது. 2025 டிசம்பர் 13 அன்று 26ஆவது முறையாக பார்க்கர் விண்கலம் சூரியனை நெருங்கிச் சென்றது.

6,92,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் பார்க்கர் விண்கலம், 980 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கிக்கொண்டு சூரியனுக்குள் சென்று திரும்பியிருக்கிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரங் களில் பார்க்கர் விண்கலமே மிக வேகமாகப் பயணிக்கக்கூடியது.

விண்வெளிக்குச் சென்ற இந்தியர்! - நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி யர் ஒருவர் விண்வெளிக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி விண்வெளி நோக்கி ஜூன் 25 அன்று சீறிப்பாய்ந்தது. அந்த விண் கலத்தை இந்தியாவின் ஷுபன்ஷு சுக்லா செலுத்த, அமெரிக்காவின் பெகி வைட்சன் இந்தப் பயணத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தார்.

இவர்கள் இருவருடன், போலந் தைச் சார்ந்த ஸ்வாவோஸ் உஸ்னைஸ்​கி​யும், ஹங்கேரியைச் சார்ந்த திபோர் கபுவும் பயணிகளாகச் சென்றார்கள். இந்த நால்வரும் 18 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற் கொண்டார்கள். பின்னர், தாங்கள் சென்ற அதே க்ரூ டிராகன் C213 மூலம், பூமிக்குத் திரும்பினார்கள். தங்கி​யிருந்த நாள்களில், இந்த நால்வர் குழு 60க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டது.

விண்வெளியில் ஷுபன்ஷு சுக்லா: பூமியில் மனிதர்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இயங்கும். ஆனால், விண்வெளியில் எடையற்ற நிலை காரணமாக ரத்தம் மேல் பகுதிகளில் அதிகம் தேங்கும். இதன் விளைவாக, கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு தலைவலி உண்டாகும்.

இந்த மாற்றங்களுக்கு ஏற்ப உடல் பழகிக்​கொள்ள இரண்டு நாள்கள் தேவைப்படும். நான்காம் நாளிலிருந்து ஷுபன்ஷு சுக்லா தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்​கினார். எடையற்ற நிலையில் தசை செல்கள் எவ்வாறு சீர்குலைகின்றன எனும் ஆய்வை மேற்கொண்டார்.

இந்த ஆய்வு விண்வெளி வீரர்களின் உடல் பாதுகாப்புக்கு மட்டுமல்​லாமல், பூமியில் தசை நலிவு நோய்கள் (muscular dystrophy) போன்ற பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளைக் கண்டறியவும் உதவும். ஐந்தாம் நாள் முதல், விண்வெளிப் பயணத்​தின்போது வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்​சத்துகளை வழங்குவதற்காக நுண்பாசி (மைக்ரோ ஆல்கே) உற்பத்தி குறித்த ஆய்வு களை ஷுபன்ஷு தொடங்​கி​னார்.

ஆறாம், ஏழாம் நாள்களில் சயனோபாக்டீரியா என்கிற நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறித்த ஆய்வு கள் மேற்கொள்​ளப்​பட்டன. எட்டாம் நாளில் தர்டிகிரேடு என்கிற சிறப்பு நுண்ணுயி​ரிகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்​டார். 11ஆம் நாளில் தாவர வளர்ச்சி குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டன.

12ஆம் நாள் முதல் 14ஆம் நாள்வரை முளைத்த தாவரங்​களின் படங்கள் எடுக்கப்பட்டு, அவை பூமிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் குளிரூட்​டியில் பாதுகாக்​கப்​பட்டன. 18ஆம் நாள் மூளை ரத்த ஓட்டம் பற்றிய செரிப்ரல் ஹீமோடைனமிக்ஸ் ஆய்வு, நியூரோமோஷன் வி.ஆர்​.ஆய்வு, டெலிமெட்ரிக் ஹெல்த் ஏ.ஐ. ஆய்வு போன்ற கூட்டு ஆய்வுகளில் ஷுபன்ஷு சுக்லா பங்கேற்​றார்.

நிசார்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன மான நாசாவும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இணைந்து உருவாக்கியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நிசார்’ (NISAR - NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

2025 ஜூலை 30 மாலை 5:40 மணிக்கு, இஸ்ரோவின் ‘ஜிஎஸ்எல்வி-எஃப்16’ ஏவூர்தி மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக் கோள், ஏறக்குறைய 12 நாள்களுக்கு ஒரு முறை பூமியின் ஒவ்வொரு புள்ளியையும் மீண்டும் மீண்டும் படம்பிடிக்கும் திறன் கொண்டது.

இதன் மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், பேரிடர்கள் போன்றவற்றை நுட்பமாகவும் தொடர்ச்சி யாகவும் கண்காணிக்க முடியும். நிலப் பயன் பாட்டு மாற்றங்கள், சூழலியல் மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றைக் கண்டறிய இது பெரிதும் உதவும்.

இஸ்ரோ: 2025 ஜனவரி 29இல் ‘என்.வி.எஸ்-02’ (NVS-02) என்கிற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியதன் மூலம் இஸ்ரோ தனது 100ஆவது ஏவூர்தி செலுத்துதலை நிறைவுசெய்தது. 1969இல் தும்பா கிராமத்​துக்கு அருகே சைக்கிளில் சிறு ரக ஏவூர்தியை ஏந்திச் சென்று விண்ணில் செலுத்தி, அதன் தொடர்ச்​சி​யாகப் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுப் படிப்படியாக இந்த நிலையை இஸ்ரோ எட்டியுள்ளது.

நாட்டின் வளர்ச்​சியில் அறிவியல் தொழில்​நுட்​பத்தின் முக்கியப் பங்கை உணர்ந்திருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அமெரிக்கா, அன்றைய சோவியத் ஒன்றியத்துக்குப் பிறகு மூன்றாவது நாடாக இந்தியா​விலும் விண்வெளி ஆய்வைத் தொடங்க ஹோமி பாபாவின் உந்துதலின் பெயரில் ஆதரவு வழங்கி​னார்.

விண்வெளி ஆய்வுக்கு அகமதா​பாதில் விக்ரம் சாராபாய் நிறுவிய இயற்பியல் ஆய்வு நிறுவனம் தலைமை ஏற்றது. இதன் தொடர்ச்​சியாக, நேருவின் ஆதரவில் விக்ரம் சாராபாய் 1962 இல் விண்வெளி ஆய்வுக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) என்கிற சிறப்பு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்த அமைப்புதான் 1969இல் இஸ்ரோவாக (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் - Indian Space Research Organization) மாறியது.

விண்கல இணைப்பு: 2025 ஜனவரி 16 அதிகாலை இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து, சாதனை படைத்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு இட்டுச் செல்லும் கனவு முதல் நிலவுப் பயணம், செவ்வாய்ப் பயணம், விண்வெளியில் குடில் உருவாக்குதல் வரை இஸ்ரோவின் எதிர்காலக் கனவுகளுக்கு இந்தத் தொழில்நுட்பப் பரிசோதனை வழிகோலி யுள்ளது.

இரண்டு விண்கலங்களை இணைப்பதுதான் விண்வெளியில் விண்கல இணைப்பு (Space Docking). இரண்டு விண்கலங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை, தொலைவை உணரும் லேசர் கருவிகள், கொக்கி, துளை போன்ற பகுதிகளை இனம் காண்பதற்கு கேமரா போன்ற கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டன. விண்கலத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்ட கணினியின் உதவியுடன் அதனைத் துல்லியமாக இயக்கி, பிணைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தங்கம்: பிற உலோகங்களில் இருந்து தங்கத்தைத் தயாரிக்க இயலுமா என்று பல ஆண்டுகளாக செர்ன் (European Organization for Nuclear Research) ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட சுரங்க வடிவிலான துகள் முடுக்கியில் ஆராய்ச்சியாளர்கள் எலெக்ட்ரான்கள், புரோட்டான்கள், அயனிகள் போன்ற மிகச் சிறிய துகள்களை உருவாக்கவும் ஒன்றை மற்றொன்றின் மீது மோத வைக்கவும் முடியும்.

2012ஆம் ஆண்டு அடிப்படைத் துகளான ஹிக்ஸ்போஸான் இங்கேதான் கண்டறியப்பட்டது. தங்கத்தின் சில பண்புகள் ஈயத்திலும் இருப்பதால், இந்த ஆராய்ச்சிக்கு ஈயத்தை விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர். ஈய அணுவில் 82 புரோட்டான்கள் உள்ளன, தங்க அணுவில் 79 புரோட்டான்கள் உள்ளன. செர்னில் உள்ள மிகப் பெரிய துகள் முடுக்கி மூலம் ஈயத்தின் அயனிகள் ஒன்றுடன் மற்றொன்று மோத வைக்கப்பட்டன.

இவற்றில் பல அயனிகள் மோதின. சில அயனிகள் மோதவில்லை. இந்த ஆய்வில் ஈயத்தின் அணுக்கள் ஒன்றோடு மற்றொன்று நெருங்கி வந்தபோது மின்காந்த மின்னூட்டங்களைக் கொண்ட ஒரு புலம் உருவானது.

இதன் காரணமாக ஈய அணுவில் இருந்த 82 புரோட்டான்களில் 3 புரோட்டான்கள் வெளியேறின. இதனால் 79 புரோட்டான்களைக் கொண்ட தங்க அணுக்கள் உருவாயின! இவை மைக்ரோ நொடிகளுக்கு மட்டுமே நீடித்தன. ஈயத்திலிருந்து தங்கத்தை உருவாக்கியதாக 2025 மே 8 அன்று ஆய்வு முடிவை செர்ன் வெளியிட்டது.

பெர்சவியரன்ஸ் ரோவர்: 2020இல் பெர்சவியரன்ஸ் ரோவர் என்கிற ரோபாட்டை, நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க்கு அனுப்பியது. இந்த பெர்சவியரன்ஸை பூமியிலிருந்து விஞ்ஞானிகளால் இயக்க முடியும்; தானாகவும் இயங்கும். செவ்வாய்க் கோளில் விண்கற்களோ சிறுகோள்களோ மோதியதில் ஏற்பட்ட பள்ளங்களில் ஒன்று ஜெஸிரோ கிரேட்டர் (தரைக்குழி). இங்கு முன்னொரு காலத்தில் ஏரி இருந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் நினைக்கின்றனர்.

ஒருவேளை இங்கு ஏரி இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தால், இங்கு உயிர்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைக்குமா அல்லது எதிர்காலத்தில் உயிர்கள் உருவாவதற்கான சூழல் இருக்குமா என்று அறிவியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் இந்த ஜெஸிரோ தரைக்குழியை ஆய்வுக்காக அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இந்தப் பள்ளத்தில் தரையிறங்கிய பெர்சவியரன்ஸ் ரோவர், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு, தரவுகளைத் திரட்டிப் பூமிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. ஜெஸிரோ தரைக்குழியின் மேற்பகுதியில் உள்ள பள்ளங்கள், பாறைகளில் ஆய்வு செய்து கொண்டிருந்த பெர்சவியரன்ஸ் ரோவர், முதல் முறையாக, 2024 டிசம்பர் 12 அன்று பெரும்பள்ளத்தின் மேல் பகுதியான தரைக் குழி விளிம்பில் வெற்றிகரமாக ஏறியது. இதன் மூலம் செவ்வாய்க் கோளின் ஆதிகாலப் பாறைகள், நிலப்பரப்பில் ஆய்வுசெய்ய முடியும் என்பதால் கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பார்க்கர் முதல் பெர்சவியரன்ஸ் ரோவர் வரை: அறிவியல் @ 2025 | மறக்க முடியுமா?
Single Salma: தன்னை அறியும் சல்மா உடைத்த ‘சமூகச் சடங்கு’ | திரை தேவதைகள் 01

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in