

பெரியது மற்றும் சிறியது (Big and The Small, Volume 1 The Journey into the Microcosm, Volume 2 From the Microcosm to the Macrocosm: G Venkataraman) என்கிற பொதுத் தலைப்பின் கீழ் இரண்டு நூல்கள். இந்த நூல்களை எழுதிய பேராசிரியர் ஜி.வெங்கடராமன். டி.ஆர்.டி.ஓ. இயக்குநராக இருந்தவர்.
ஒன்று அணுவுக்குள் இருக்கும் துகள்களின் உலகை நம் முன் நிறுத்துகிறது. மற்றொன்று அது போலவே இருக்கின்ற நம் கண்முன்னால் விரிவடைந்துகொண்டே இருக்கும் பிரம்மாண்ட பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசுகிறது.
முதலாவதை மைக்ரோகாசம் நோக்கிய பயணம் என்கிறார். அடிப்படைத் துகள்களின் கதை என்று ஒரு கதை போலவே இதைச் சொல்ல முயல்கிறார். உலகம் எதனால் உருவானது என்கிற மனித குலத்தின் மிகப் பெரிய துப்பறியும் சாகசக் கதை இது.
அணுவைத் துளைத்த கதை
அணுவே இறுதி அல்ல என்பதை மனிதர்கள் கண்டறிந்த கதையைத் தொகுதி ஒன்று பேசுகிறது. ஒவ்வொரு தலைமுறையும் இதுவே மிகச் சிறிய பொருள் என்று நம்பிய ஒன்றைக் கண்டறிந்தது.
ஒரு பிரம்மாண்ட சிந்தனை என்று இவர் பதிவுசெய்யும் டெமாக்ரிடஸ், ஆய்வகம் இல்லாமல் அணுவை எப்படிக் கற்பனை செய்தார் என்பதை விவரிக்கிறார். 2,400 ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்னார், எதையும் வெட்டிக்கொண்டே போனால் இறுதியில் வெட்ட முடியாத ஒரு சிறு துண்டு கிடைக்கும், அதற்கு அவர் வைத்த பெயர்தான் அட்டமோஸ், அதாவது அணு.
வெகுநாள்களுக்கு மனித உலகம் அதைத்தான் நம்பிக்கொண்டிருந்தது இதன் அடிப்படையில் எப்படி ஜான் டால்டன் தனது அணுக் கொள்கையை வெளியிட்டார் என்பதையும் ஜே.ஜே.தாம்சன் முதல் முறையாக அணுவை எப்படித் துளைத்தார் என்பதையும் பிறகு விவரிக்கிறார் நூலாசிரியர்.
அணு பிரிக்க முடியாதது என்று உலகம் நம்பியபோது, அவர் எலக்ட்ரானைக் கண்டறிந்தார். இதுதான் இறுதி என்று உலகம் நம்பியது. ஆனால், அவர் சொன்னார் “இது தொடக்கம்தான்…” அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தவர் ரூதர்போர்டு.
தங்கத் தகட்டில் துகள் களை அவர் ஏந்தினார். சில துகள்கள் திரும்பி வந்துவிட்டன. இதற்கு அவர் சொன்னதாகக் கூறப்படும் வாசகம் ‘காகிதத்தில் சுட்ட குண்டு திரும்பி வந்து என்னை தாக்கியதுபோல இருந்தது’. அன்று பிறந்ததுதான் அணுக்கரு.
பிறகு நீல்ஸ் ஃபோர் வருகிறார். சூரியக் குடும்பத்தைப் போலவே அவர் கற்பனையில் அணுவின் வடிவத்தை வரைந்திருந்தார். அவரது மாதிரி முழுமையாக இல்லை. ஆனால், அது இல்லாமல் அடுத்த அறிவியல் கருத்து உருவாகவில்லை. இந்த இடத்தில்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளியின் மூலம் பொருளை விளக்க நினைத்தார்.