மன்னார் - இலங்கை: முத்துக்களில் தேசம் | சுற்றுலா

யாதும் ஊரே யாவரும் கேளிர்
மன்னார் கோட்டை

மன்னார் கோட்டை

Updated on:
5 min read

மதுரையிலிருந்து விமானம் கிளம்பிய 50-வது நிமிடத்தில், பரந்து விரிந்திருந்த இந்துமகா சமுத்திரத்தின் நடுவே அழகிய நித்திலம்(முத்து) போலக் காட்சியளித்தது அந்த தேசம். ‘சொர்க்கம் போன்ற பூமி’ என்று பொன்னியின் செல்வனில் வாசித்த காலம்தொட்டு ஏற்பட்டிருந்த இலங்கையின் மீதான பித்து, எத்தனை முறை சென்றுவந்த பின்னும் குறைவதாக இல்லை. உலகப் பயணிகளை ஈர்க்கும் இலங்கையில், ஒவ்வொரு நூறடிக்கும் வரலாற்று எச்சங்களைத் தன்னுள் புதைத்திருக்கும் மன்னார் மாவட்டத்திலிருந்து பயணம் தொடங்கியது.

தலைமன்னார்: இலங்கையின் வடமேற்குக் கடற்கரையில் இந்தியாவை நோக்கி நீண்டிருக்கும் நிலப்பரப்பின் நுனியில் அமைந்திருக்கிறது தலைமன்னார். ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கப்பலுக்காகக் காத்திருந்த காட்சியும் தனுஷ்கோடி – தலைமன்னார் என இரு கரைகளுக்கிடையே பயணித்த மனிதர்களின் கதைகளையும் சுமந்து கொண்டிருக்கும் அமைதியான கடற்கரை. கடலுக்குள் நீண்டு செல்லும் துறை மேடை(Pier)யும் இலங்கையின் இறுதிமுனையாக இருக்கும் தலைமன்னார் ரயில் நிலையமும் கலங்கரை விளக்கமும் வரலாற்றின் சாட்சியாக மிச்சமிருக்கின்றன.

1914 -ல் அன்றைய மதராஸ் பட்டினத்திலிருந்து தலைமன்னார் வரை ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வண்ணம் சர்வதேசப் பயணப் பாதை இருந்தது. சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயில், அங்கிருந்து கப்பலில் தலைமன்னார், அங்கிருந்து கொழும்புக்கு ரயில் என போட்மெயில் வசதி இருந்தது. 1964 -ம் ஆண்டு ஏற்பட்ட புயல், தனுஷ்கோடி துறைமுகத்தையும் ரயில் பாதையையும் அழிக்க, ரயில்சேவை முடக்கப்பட்டது.

நீர்ப்பரப்புக்கு நடுவே ஒரு பயணம்: மன்னார் தீவையும் இலங்கையின் பிற நிலப்பரப்பையும் இணைக்கும் 3.5 கி.மீ. நீளமுள்ள பாலம் (CAUSEWAY தாழ்வுப்பாதை), கடல் மட்டத்துக்கு மிக அருகில் ஆழம் குறைந்த நீர்ப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இருபுறமும் நீர் விரிந்து கிடக்க, நடுவே நீண்டு செல்லும் சாலையில் பயணிக்கும்போது நாம் நிலத்தில் செல்கிறோமா கடலின் மேற்பரப்பில் மிதந்து செல்கிறோமா? என்ற உணர்வு ஏற்படுகிறது. அமைதியான நீர்ப்பரப்பும் உப்புநிலத் தாவரங்களும் தொலைவில் தெரியும் மீன்பிடிப்படகுகளும் இந்தப் பயணத்தை மேலும் அழகாக்குகின்றன. 1930-ம் ஆண்டில் குறுகிய ஒற்றைப்பாதையாக கட்டப்பட்ட இப்பாலம், 1990- களில் யுத்தக்காலத்தில் உடைக்கப்பட, 2010-ல் ஜப்பான் உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

கடலோரக் காவலன்: மன்னார் தீவை நோக்கிப் பயணிக்கும்போது, பாலம் முடியும் இடத்தருகே கடலைப் பார்த்தபடி பாக். ஜலசந்திக்குள் அமைதியாக நிற்கிறது மன்னார் கோட்டை. இன்று ஆரவாரமற்றுக்கிடக்கும் அந்தக் கற்களின் இடுக்குகளில் பல நூற்றாண்டுகளின் வரலாறு உறங்கிக் கொண்டிருக்கிறது. 1560-ல் யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்த போர்த்துகீசியர்கள், மன்னார் வளைகுடாவின் கடல்போக்குவரத்தையும் முத்து வளத்தையும் கட்டுப்படுத்துவதற்காக இக்கோட்டையை உருவாக்கினர். போர்த்துகீசிய ராணுவத் தளபதி வைஸ்ராய் கான்ஸ்டண்டைன் டி பிரகன்ஸா தலைமையில் காத்தரின் மேஜர் டான் ஜோர்ட் சொய்ஸா என்பவரின் மேற்பார்வையில் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. கோட்டையின் உச்சியிலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் பரந்து விரிந்த நீர்ப்பரப்பு, மற்றொரு பக்கம் பரபரப்பான மன்னார் நகரம். கோட்டைக் குள் நடந்து செல்வதற்கான 8 அடி அகலப்பாதை தான் மன்னார் தீவை அந்தக் கோட்டையுடன் இணைக்கிறது.

திருகேதீஸ்வரம்

திருகேதீஸ்வரம்

சிதிலமடைந்து கிடக்கும் சதுர வடிவ கோட்டைக்குள், ஆங்காங்கே கவனிப்பாரற்றுக் கிடக்கும் பிரெஞ்சு கல்வெட்டுகள், கோட்டையின் 4 புறங்களிலும் கொத்தளங்கள், 12 அடி உயரம், இரண்டரை அடி அகலமுள்ள சுண்ணாம்புக்கல் சுவர்கள், நீர் சேமித்து வைக்கும் கிடங்குகள், கடலை நோக்கிய 4 முனைகளிலும் காவலர் அரண்கள், எதிரிகளின் வருகையை அறிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மணி கோபுரம், கத்தோலிக்க தேவாலயம், அலுவலர்களுக்கான அறைகள், தங்குமிடங்கள் என ஒரு வரலாற்றுச்சின்னம், வார்த்தைகளற்று மவுனமாக நிற்கிறது.

மன்னார்க் கோட்டைக்கும் அல்லிராணிக் கோட்டைக்கும் நிலக்கீழ்சுரங்கம் இருந்ததற்கான அடையாளமாக அறை வட்ட வடிவில் இரண்டு துவாரங்களைக் காட்டுகிறார்கள். 1658 -ல் போர்த்துகீசியரிடமிருந்து டச்சுக்காரர்கள், 1796-ல் ஆங்கி லேயர்கள், 1948-க்குப்பின் 30 ஆண்டுகள் இலங்கை ராணுவம் என பலரின் கட்டுப்பாட்டின் கீழ் கடலைக் காவல் காத்த கோட்டை, காலம் விட்டுச் சென்ற ஒரு திறந்த புத்தகம்.

பெருக்கு மரம் – கடல்கடந்து வந்த அதிசயம்: மன்னாரில் இருக்கும் பல்வேறு ஆச்சரியங்களில் ஒன்று Baobab என்று அழைக்கப்படும் பிரமாண்டமான பெருக்கு மரம். மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை பகுதியில், தெற்காசியாவின் மிகப்பெரிய சுற்றளவு கொண்ட மரம் என்ற பெருமையுடன் (19.51 மீட்டர் சுற்றளவு, 7.5 மீட்டர் உயரம்) நிற்கிறது. 800 ஆண்டுகள் பழமையானது. உலகிலுள்ள உயிர்களிலே ஆறாயிரம் வருடங்களுக்கு மேலாக உயிர் வாழக்கூடியது பெருக்கு மரம் என்கிறார்கள்.

பெருக்கு மரம்

பெருக்கு மரம்

ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த மரங்களை அரேபியர்கள் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து மன்னாருக்கு முத்து வாங்க ஒட்டகங்களுடன் வந்த போது, அவற்றுக்குத் தீனி போடுவதற்காக இந்த மரத்தை உண்டாக்கி யதாக வரலாறு கூறுகிறது. ஆப்பிரிக்கா, அரேபியா, இந்தியா, இலங்கை என்ற கடல் வணிகப் பாதையில் பெருக்கு மரமும் வந்திருக்க வேண்டும். இம்மரத்தின் சிறப்பே, தமது உடற்பகுதியில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் லிட்டர் நீரை சேமித்து வைக்கக்கூடியது. வறண்ட காலத்தில் குழாயில் நீர் எடுப்பது போல இம்மரத்தின் வேரை வெட்டியெடுத்து ஆழ்கிடங்கு அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கட்டுக்கரைக்குளம் மன்னாரின் நீர்த்தொட்டி: மன்னார் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கட்டுக்கரைக்குளம், ராட்சசத் தொட்டி, என்றெல்லாம் அழைக்கப்படும் நீர்பாசனக்குளம். ஐந்தாம் நூற்றாண்டில் மன்னர் தாதுசேனனால் கட்டப்பட்டு 12 -ம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் பராக்கிரம பாகுவால் புனரமைக்கப்பட்ட இக்குளம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையின் நீர்ப்பாசன அறிவியல் எவ்வளவு மேம்பட்டிருந்தது என்பதைச் சொல்கிறது. இப்பகுதியில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆற்றின் நீரை நேரடியாக மன்னார் சமவெளிப் பகுதியில் தேக்குவது சாத்தியமில்லையென்பதால், ஆற்றிலிருந்து நீண்ட கால்வாய் வழியாக நீரைத் திருப்பி, இயற்கையான தாழ்வான பகுதியில் இந்தப் பெரும் நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

டோரிக் மாளிகை: மன்னாரிலிருந்து 16 கி.மீ தூரத்தில் அரிப்பு கடற்பகுதியில் கடலை நோக்கிய தாழ்ந்த பாறை மேட்டின் மீது சிதிலங்களாக நிற்கிறது டோரிக் மாளிகை. கி.பி.1798-ல் பிரிட்டிஷ் பிரதமரின் மகன் பிரெட்ரிக் நோத் (இலங்கைத்தீவின் முதல் பிரித்தானிய ஆளுநர்), முத்துக்குளித்தல் நடைபெற்ற சிலாவத்துறையின் அருகில் தங்க விரும்பியதால் அவருக்காக 1802 - 1804 ஆண்டுகளில் கட்டப்பட்ட கோட்டை இது.

பண்டைய கிரேக்க கட்டிடக்கலையான, டோரிக் கட்டிடக்கலையின் சாயலில் உள்ளதால் டோரிக் மாளிகை என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் வெளிப்புறத்தில் சுட்ட சிப்பிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சுண்ணாம்புப் பூச்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கீழ்த்தளத்தில் அறைகளும் மேல்தளத்தில் ஆளுநரின் அறையும் பெரிய உணவுக்கூடமும் இருந்ததாம்.

டோரிக் மாளிகை

டோரிக் மாளிகை

டோரிக் மாளிகையின் உண்மையான கதை அதன் சுவர்களில் மட்டும் இல்லை, அதைச்சுற்றியுள்ள அரிப்பு கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற முத்துக்குளிப்பு நடவடிக்கைகளில் இருக்கிறது. கி.மு. 3-ம் நூற்றாண்டில் சிலாவத்துறை துறைமுகத்தில் முத்துக்குளித்தலோடு வாசனைப் பொருள்கள், முத்து மற்றும் யானை ஏற்றுமதி மிகச்சிறப்பாக நடைபெற்றன. சலாபம் என்பது முத்து குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடம், அதிலிருந்து மருவியதே சிலாவத்துறை. சிலாவத்துறையிலிருந்து பெறப்பட்ட முத்துகள் இந்தியாவில் மகதப்பேரரசுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஏனையநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கிளியோபாட்ராவின் காதணியில் சிலாவத்துறை கடலில் இருந்து பெறப்பட்ட ஆணிமுத்து பதிக்கப்பட்டிருந்தது என்பது வரலாற்றுச்செய்தி. 19-ம் நூற்றாண்டில் முத்துக்குளிக்கும் தொழில் முடிவுக்கு வர, மாளிகை கேட்பாரற்று போயிற்று. கடல் முத்துக்களை உள்வாங்கிக்கொள்ள, காலம் மாளிகையின் கம்பீரத்தைச் சிதைத்துப்போட்டது.

மடுமாதா கோயில் – வனத்துக்குள் ஒளிரும் நம்பிக்கையின் திருத்தலம்

மடுரோடு, மதவாச்சி சந்தியின் நுழைவாயிலில் மார்பிளால் ஆன மடுமாதா திருசுரூபம் கருணை வழியும் முகத்துடன் நம்மை வரவேற்கிறது. மன்னார் மாவட்டத்தின் அந்த அமைதியான வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் மடுமாதா ஆலயம் இலங்கையின் மிக முக்கியமான கத்தோலிக்கத் திருத்தலம். Baroque Revival என்ற ஐரோப்பிய வகை கட்டிடக்கலை பாணியில் கட்டப் பட்டுள்ளது.

1658-ல் டச்சுக்காரர்கள் மாந்தை பகுதியைக் கைப்பற்றிய காலத்தில், அவர்களால் மாந்தைப் பகுதியிலிருந்த மாதாவின் சுரூபத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நினைத்தனர் கத்தோலிக்கர்கள். அதனால் 1670-ம் ஆண்டுவாக்கில் அங்கிருந்த மரியாளின் திருவுருவச்சிலையுடன் கால் நடையாகவே வந்து, யானையும் புலியும் சிறுத்தையும் சர்வ சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்த, மருதமரங்களினால் சூழப்பட்டிருந்த தட்சனா மருதமடு என்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் சுரூவத்தை நிறுவியிருக்கின்றனர்.

இன்றைய பெரிய ஆலயத்தின் கட்டுமானம் 1872 -ம் ஆண்டு தொடங்கியது. 1900-களில் அரசு ஊழியர்கள் விடுதி, கன்னியர் மடம், வைத்திய சாலை, தபால் தொலைபேசி காரியாலயம், திருவிழாக் காலங்களுக்கென காவல் நிலையம், நீதிமன்றம் என விரிவடைந்தது. திருவிழாக்காலங்களில் தமிழ், சிங்கள கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது, பவுத்தர்கள், இந்துக்கள், புராட்டஸ்டண்ட்கள் என அனைத்து மதத்தினரும் அடர்ந்த மரங்களின் கீழ் கூடாரங்கள் அமைத்துத் தங்குவதும் உணவைக் கூட்டாகச் சமைத்து சாப்பிடுவதுமாக மத வேறுபாடின்றி மடுமாதாவைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

திருகேதீஸ்வரம்: மன்னார் மாவட்டத்தின் முக்கிய துறைமுக நகரமான பழைய மாதோட்ட துறைமுகப்பகுதியை ஒட்டிய அமைதியான சூழலில் இருக்கிறது திருகேதீஸ்வரம். இலங்கையின் ஐந்து பழமையான ஈஸ்வரத் தலங்களில் ஒன்று. திருஞான சம்பந்தரும் சுந்தரரும் பாடிய தேவாரப் பாடல்களால் பெருமை பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இலங்கேஸ்வரன் ராவணனும் அவரது மாமனார் மயனும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையான கோயிலைக் கட்டினார்கள் என்பது நம்பிக்கை. 1028-ல் ராஜேந்திரச் சோழனால் ஈழம் கைப்பற்றப்பட்டபின், ராஜராஜேஸ்வரம் என்று பெயர் மாற்றத்துடன் ஆலயத்தைச் சுற்றி நன்னீர், கடல்நீர் கொண்ட அகழிகள் அமைக்கப்பட்டன.

மடுமாதா ஆலயம்

மடுமாதா ஆலயம்

13-ம் நூற்றாண்டில் முதலாம் சுந்தர பாண்டியனின் காலத்தில் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1505-ல் போர்த்துக்கீசியர்கள் கோயிலைக் கொள்ளை அடித்து சிலைகளை நாசம் செய்து, கோயிலை உடைத்த கற்களைக் கொண்டு மன்னார் துறைமுகத்தைக் கட்டினர். அதன்பின் மண்மாரியால் கோயில் மூடப்பட, அந்த இடம் அடர்ந்த காடாக மாறியது. கோயில் இருந்து மறைந்ததாகக் கருதப்பட்ட 40 ஏக்கர் நிலத்தை பழனியப்பச்செட்டியார் என்பவர் 1893- ல் இலங்கை சைவ மக்கள் சார்பாக, 3,100 ரூபாய்க்கு ஏலம் எடுத்து மணலுக்குள் மூழ்கிய மாந்தோட்ட கோயிலையும் அத்தோடு சேர்ந்த நகரையும் வெளிக்கொணர்ந்தார்கள்.

5 நிலைகளுள்ள ராஜகோபுரம், லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட 2 டன் எடையுள்ள வெண்கல ஆலயமணி, குணவாசல் பிள்ளையார், சுப்பிரமணியர், நந்தி மண்டபம், சூரிய சந்திர சந்நிதிகள், அழகிய வேலைப்பாடுகளுடன் ஐந்து பெரிய தேர்கள், திருக்கேதீஸ்வரநாதர், கவுரி அம்மை என ஆன்மீகவாதிகளைக் கவர்ந்திழுக்கிறது.

சுற்றுலா விரும்பிகளுக்கு, இலங்கையின் அழகோடு சேர்த்து, அதன் மண்ணுக்குள் புதைந்திருக்கும் வரலாறு, பண்பாடு மற்றும் நினைவுகளைத் தேடிச் செல்லும் அர்த்தமுள்ள பயணமாக இலங்கைப்பயணம் அமையும்.

மன்னார் கோட்டை

தென்றல் தாலாட்டும் மேக்கரை! | சுற்றுலா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in