

தமிழில் சுதந்திரத்துக்கு முந்தைய அரசியல் சினிமா என்பது தேசாபிமான இயக்குநர் கே.சுப்ரமணியத்திடமிருந்து தொடங்குகிறது. அவருடைய நவீன நீட்சி எனச் சொல்லும்படியாக, 90களில் ‘தேசபக்தி’யை முன் வைத்து அரசியல் படங்களை எடுத்தார் மணிரத்னம். இடையில் 60களின் தொடக்கத்தில் இனம், மொழியை முன்வைத்து வெளிவந்த திராவிட சினிமாக்கள் பெரும் தாக்கத்தை உரு வாக்கின. இந்த இரு வகைமையிலிருந்தும் விலகி நிற்பவை இடது சாரித் திரைப்படங்கள்.
தொழிலாளர் ஒற்றுமைக்கும் அவர்களின் நலனுக்காகவும் குரல் எழுப்பிய இந்த வகைப் படங்களால் மக்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. ஆனால், இன்றைக்கு அதிகார அத்துமீறல்களைப் பட்டவர்த்தனமாக முன்வைக்கும் திரைப்படங்கள் பெருகியிருப்பதற்கு அவையே அடிக்கற்கள். அந்த வரிசையில் 1961இல், நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய ‘பாதை தெரியுது பார்’ முன்னோடித் திரைப்படம். அதன்பின்னர் 80களின் இறுதியில் கோமல் சுவாமிநாதனின் ‘அனல் காற்று’, ‘ஒரு இந்தியக் கனவு’, ஜெயபாரதியின் ‘ஊமை ஜனங்கள்’, இராம.நாராயணன் இயக்கத்தில் தெலுங்கிலிருந்து தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட ‘சிவந்த கண்கள்’, ‘சிவப்பு மல்லி’, ஜி.ராமநாயுடு இயக்கத்தில், இடதுசாரித் தலைவர் தா.பாண்டியன் வசனத்தில் வெளிவந்த ‘சங்க நாதம்’, ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான ‘ஏழாவது மனிதன்’, அருண்மொழி இயக்கிய ‘காணி நிலம்’, ‘ஏர்முனை’ ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பின்னர் புத்தாயிரத்தில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தை அடியிழையாக வைத்துத் தனது திரைமொழியை அமைத்துக்கொண்ட எஸ்.பி.ஜனநாதனின் திரைப்படங்கள், லெனின் பாரதி இயக்கிய ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ வரை விரல்விட்டு எண்ணிவிடும் அளவில்தான் உழைப்பின் குரல் தமிழ்த் திரையில் ஒலித்திருக்கிறது.
ஒளிப்பதிவுக் கலைஞரும் தொழிற்சங்கவாதியுமான நிமாய் கோஷ் பிரிட்டிஷ் இந்தியாவில் டாக்காவில் பிறந்தவர். இயக்குநர் கே.சுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரால் தமிழ் சினிமாவுக்கு அழைத்துவரப்பட்டவர். இவர் இயக்கிய ‘பாதை தெரியுது பார்’ (1961), திரள்நிதித்திரட்டல் (Crowdfunding) மூலம் தமிழில் தயாரான முதல் இடதுசாரித் திரைப்படம். பொதுவுடைமைச் சித்தாந்தத்தை ஆதரிக்கும் தன்னுடைய நண்பர்கள் 49 பேரிடம் தலா 5,000 ரூபாய் திரட்டிய நிமாய், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தலா 1,000 ரூபாய் மட்டுமே ஊதியமாகக் கொடுத்தார். கம்யூனிஸ்ட் தலைவரான ஜீவானந்தம் படப்பிடிப்பைத் தொடங்கிவைக்க, ஒரே கட்டமாகப் படத்தை எடுத்து முடித்தார். சக தொழிற்சங்கவாதியான எம்.பி.சீனிவாசனை இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார். மார்க்சியவாதியான ஆர்.கே.கண்ணன் திரைக்கதை எழுதியிருந்தார். படத்தில் நாயகி ஒரு முதலாளியின் மகள். அவர் தனது செல்வச் செருக்கைக் கைவிட்டுத் தொழிலாளர்களின் வெற்றிப் பேரணியில் கலந்து கொள்வதுபோல் இறுதிக் காட்சியை அமைத்திருந்தார்.
கதாநாயகியாக அன்றைய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் புகழ்பெற்ற நடன நட்சத்திரமாக விளங்கிய எல்.விஜயலட்சுமி, இப்படத்தில் நடனம் ஏதும் ஆடாமல் கதாபாத்திரமாக மட்டும் நடித்திருந்தார். கே.விஜயன் கதாநாயகனாக அறிமுகமான படம் இது. விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இப்படம், வர்த்தகரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனால், ரஷ்ய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு, சோவியத் ரஷ்யாவிலும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. சிறந்த படத்துக்கான குடியரசுத் தலைவர் விருதினையும் பெற்றது.