வரலாற்றைச் சிதைக்கலாமா?

வரலாற்றைச் சிதைக்கலாமா?
Updated on
1 min read

பல நூற்றாண்டுப் பழமையையும் புராதனத்தையும் சுமந்திருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் தங்களது தொன்மைத்தன்மையை இழந்துவருகின்றன. அரசியல் காரணங்களுக்காகச் சூறையாடப்படுபவற்றில் வரலாற்றுச் சின்னங்களுக்குத்தான் முதலிடம். அதேவேளை அரசின் அக்கறையின்மை, சுற்றுச்சூழல் மாசு, மனிதர்களின் பொறுப்பற்ற நடவடிக்கை போன்றவற்றால் நம் மரபு நினைவுச் சின்னங்கள் அழிவது வேதனைக்குரியது.

கல்வெட்டுகள், நடுகற்கள், நினைவுத் தூண்கள், குடைவரைச் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் நம்மைச் சுற்றியிருக்கின்றன. இவற்றில் சிலவற்றை மட்டும் தொல்லியல் துறையும் அரசும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் இல்லாத புராதனச் சின்னங்களைப் பொதுமக்களில் சிலர் தங்கள் உடைமையாகப் பாவித்துச் சிதைக்கின்றனர். கல்வெட்டுகளை உடைப்பது, சிற்பங்களைச் சிதைப்பது, சுவர் ஓவியங்களைச் சுரண்டி அழிப்பது போன்ற செயல்களைச் செய்கின்றனர்.

இன்னும் சிலரோ காணும் இடங்களில் எல்லாம் தங்களது பெயரையும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயரையும் அழிக்க முடியாதபடி கிறுக்கி வைக்கிறார்கள். குறிப்பாகக் கோயில் சுவர்களிலும் பாறை ஓவியங்களிலும் தங்கள் கைவண்ணத்தைப் பதித்து அதை உலகறியச் செய்கிறார்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த சிலர், பல நூறு ஆண்டுகள் பழமையான மரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் பெயர்களையும் உருவங்களையும் செதுக்குவதும் இதில் அடங்கும்.

ஏற்கெனவே பாழடைந்துவரும் நினைவுச் சின்னங்களைச் சிலர் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டு அவற்றை இன்னும் சிதிலமடையவைக்கின்றனர். பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் சுற்றுலாத் தலங்களாக இருப்பதால், சுற்றுலாவுக்குச் செல்வோரும் தங்கள் பங்குக்குத் தங்கள் ‘கலைத் திறமை’யைக் காட்டத் தவறுவதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் அந்த வரலாற்றுச் சின்னங்களின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள். அது அவர்களது தவறு மட்டுமல்ல; அவர்களிடம் நினைவுச் சின்னங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாத அரசின் தவறும்கூட.

உள்ளூர் நிர்வாகம் நினைத்தால் தங்கள் பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்திப் பொதுமக்களின் உதவியோடு அவற்றை நல்ல முறையில் பராமரிக்க முடியும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைப் பராமரிப்பதில் கூடுதல் கண்காணிப்பும் கவனமும் தேவை. காரணம், வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது என்பது வரலாற்றைச் சிதைப்பதற்கு நிகரானது.

அதனால், நல்ல நிலையில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்களை அவற்றின் தொன்மை கெடாமல் பராமரிப்பது, அழிந்த அல்லது சிதைந்த சின்னங்களை மீட்டு அவற்றை மறு நிர்மாணம் செய்வது, வரலாற்றுச் சின்னங்களை மக்கள் பாழ்படுத்தாத வகையில் விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் அதிகரிப்பது போன்றவற்றைச் செயல்படுத்துவதன்மூலம் வரலாற்றுச் சின்னங்களை அழியாமல் பாதுகாக்கலாம்.

- ப்ரதிமா

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in