இந்தியாவின் பாரம்பரிய நகரங்கள்

இந்தியாவின் பாரம்பரிய நகரங்கள்
Updated on
1 min read

அஜந்தா, எல்லோரா குகைகள் தொடங்கி தெலங்கானாவின் ராமப்பா கோயில் வரை இந்தியாவைச் சேர்ந்த 40 இடங்கள் யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. இதில், அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய இரண்டும் பாரம்பரிய நகரங்கள் என்கிற பிரிவின் கீழ் வருகின்றன.

கலாச்சாரப் பாரம்பரியம், இயற்கைப் பாரம்பரியம், கலாச்சாரமும் இயற்கையும் கலந்த பாரம்பரியம் என மூன்று பிரிவுகளின் கீழ் யுனெஸ்கோ மரபுச் சின்னங்களையும் இடத்தையும் தேர்வு செய்கிறது. இதில் 1995ஆம் ஆண்டு முதன்முதலாக நார்வேயின் பெர்ஜன் நகர் பாரம்பரிய நகரமாகத் தேர்வுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்களாகத் தேர்வாகின.

இந்தியாவில் முதல் பாரம்பரிய நகரமாக 2017இல் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டது. அந்த ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரப் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா தயாரித்து அனுப்பிய பரிந்துரைப் பட்டியலில் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களும் இடம்பெற்றிருந்தன.

ஆனால், அதிக வாக்குகளைப் பெற்ற அகமதாபாத் பாரம்பரிய நகராகத் தேர்வு செய்யப்பட்டது. பொ.ஆ.(கி.பி.) 15ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் அகமத் ஷா அகமதாபாத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். மதில்கள் சூழ உருவாக்கப்பட்ட இந்நகரில் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த கட்டிடங்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன என்பது அதன் தனிச்சிறப்பு.

2019இல் இந்தியாவின் இரண்டாவது பாரம்பரிய நகராக ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்கிற சிறப்பைப் பெற்றது. பிரம்மாண்ட அரண்மனை, கோட்டை, தனித்துவமான நகரக் கட்டமைப்புக்கு இது புகழ்பெற்றது. இந்தியாவில் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்களில் ஜெய்ப்பூருக்குத் தனி இடம் உண்டு.

அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய கமிட்டியின் 43ஆவது மாநாட்டில் 35 நகரங்கள் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டன. இதில் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதியாக ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டது. ஹவா மஹால், ஜெய் மஹால், ஜொஹ்ரி பஜார், பபு பஜார் போன்ற வரலாற்றுத் தலங்களும் சுவையான ராஜஸ்தான் உணவும் ஜெய்ப்பூரின் சிறப்பு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in