

தமிழர் பண்பாட்டு மரபில் ஆறு பருவ காலங்கள் உண்டு. அவற்றில் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய நான்கு மாதங்கள் கதிரவன் காயும் இளவேனில் காலம். இந்த நான்கு மாதங்களில்தான் கிராமப்புறங்களில் விதவிதமான திருவிழாக்கள் நடக்கின்றன. அவற்றில் சிறுதெய்வ, பெருதெய்வ கோயில் திருவிழாக்கள் முதன்மை பெற்றாலும் தனித்துவமான சமுதாய விழாக்களும் பல நூறு ஆண்டுகளாகப் புகழ்பெற்று விளங்குகின்றன.
பிரி கட்டும் விழா, எருது கட்டுத் திருவிழா, மாம்பழம் உண்ணும் திருவிழா, பணியாரம் சுடும் திருவிழா, புட்டுத் திருவிழா, புரவியெடுப்புத் திருவிழா, வைக்கோல்பிரி திருவிழா, கலப்பை கட்டுத் திருவிழா என்று சுவாரசியம் கூட்டும் பலவித விழாக்களில் பழமையானது மீன்பிடித் திருவிழா. ஒரு காலத்தில் ஆதிக்கச் சாதியினரும் இடைநிலைச் சாதியினரும் மட்டுமே பங்குபெற்று வந்த மீன்பிடித் திருவிழா, தற்போது அனைவரும் ஒன்றாக மீன் பிடித்து மகிழும் சமத்துவத் திருவிழாவாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில், குறிப்பாக புதுக் கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மீன்பிடித் திருவிழா புகழ்பெற்று விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள பல பெரிய கிராமங்களில் ஊருக்குப் பொதுவான கண்மாய்கள், கோயில் கண்மாய்கள் போன்றவை மழைக்காலத்தில் நிரம்பி வழியும். இவற்றில் வாய்க்கால் வழி பாசன வசதி உள்ள கண்மாய்களும் உண்டு. மழை வெள்ளத்தில் அடித்து வரப்படும் நாட்டுக் கெளுத்தி, அயிரை, வெளிச்சை, குரவை போன்ற பாரம்பரிய மீன்களுடன், கட்லா, கெண்டை மீன் குஞ்சுகளையும் இக்கண்மாய்களில் விட்டுவிடுகிறார்கள். கட்லா ஐந்து மாதங்களில் விரைவாக வளர்ந்துவிடும். இவற்றுடன் 50களில் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜிலேபி மீன்களும் பல்கிப் பெருகிவிடுகின்றன.
பங்குனி பிறந்துவிட்டாலே மீன்பிடித் திருவிழா பற்றிய பேச்சு தொடங்கிவிடும். கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க ஏதுவாக முட்டிக்கால் அளவுக்குத் தண்ணீர் வற்றிவிட்டதா என்று பார்த்து உறுதி செய்துகொண்டபின், கிராமப் பஞ்சாயத்தார் ஒன்றுகூடி, நாள் பார்த்து, நேரம் பார்த்து மீன்பிடித் திருவிழாவை ஒருமனதாக முடிவு செய்வார்கள். பின்னர் ஆட்டோவில் மைக்செட் கட்டி அறிவித்தும், தண்டோரா போட்டும், வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்தும் அனைவரையும் மீன்பிடித் திருவிழாவுக்கு அழைப்பார்கள். மக்கள் குடும்பம் குடும்பமாக வயது வேறுபாடு இன்றி கண்மாய்க் கரையில் கூடிவிட, ஊர்ப் பெரியவர்கள் வரிசையாக நின்று துண்டைக் கொடிபோல் அசைத்து சமிக்ஞை கொடுத்ததும் ‘ஹோய்ய்ய்ய்…!’ என்கிற சத்தத்துடன் கண்மாய்க்குள் பாய்ந்து மீனைப் பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இன்றைக்கும் கிராமப்புறங்களில் பயன்பாட்டில் இருக்கும் ஊத்தா (கூடை போல இருக்கும்), வலை, பரி போன்றவற்றுடன் ஞெகிழிக் கொசுவலைகளையும் மீன் பிடிக்க எடுத்துவருகின்றனர். ஆனால், பெரும்பாலான மீன்பிடித் திருவிழாக்களில் கண்மாயில் இறங்கிய அத்தனை பேருக்கும் மீன் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஊத்தா மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. இதனால் மீன்பிடித் திருவிழா நடக்கும் ஊர்களில் ஒவ்வொருவர் வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஊத்தா மாட்டப்பட்டிருப்பதைக் காணலாம். ஊத்தா நிபந்தனைக்கு இன்னொரு காரணம், ஒரு மீன்பிடித் திருவிழாவில் இரண்டு கிராமங்கள் முதல் 18 கிராமங்கள் வரை கலந்துகொள்வது உண்டு. பல ஊர்களில் ‘ஊத்தா மீன்பிடித் திருவிழா’ என்றே அழைக்கிறார்கள். மீன்பிடித் திருவிழா நடத்தினால் நல்ல மழை பெய்யும் என்கிற நம்பிக்கையும் கிராம மக்களிடம் இருக்கிறது.