

ரங்கத்தில் சித்திரையில் நடைபெறும் ‘விருப்பம் திருநாள்’ விமரிசையான ஒன்று. இறைவன் ஆலயத்திலிருந்து வீதியுலா வருவதற்கான தாத்பரியமே, ஆலயத்திற்கு வரமுடியாதவர்களை நாடி இறைவனே வந்து அருளைப் பொழிய தரிசனம் கொடுக்கிறார் என்பதுதான். இந்த ‘விருப்பம் திருநாள்’ உலா தொடங்குவதற்குப் பத்து நாள்களுக்கு முன்பாகவே நம்பெருமாள் ஆலயத்தைச் சுற்றியிருக்கும் சித்திரை வீதிகளில் வலம் வருவது மரபு.
பத்து நாள்கள் நடக்கும் இந்த வைபவத்தில் ஆலயத்திலிருந்து பெருமாளின் புறப்பாடு ஒரு வாகனத்திலும் திரும்ப கோயிலுக்கு வருவது வேறொரு வாகனத்திலும் இருப்பது சிறப்பு. வைபவத்தின் இரண்டாம் நாளில் பல்லக்கிலும் மூன்றாம் நாளில் சிம்ம வாகனத்திலும் நான்காம் நாளில் ஒளிரும் இரட்டைப் பிரபையிலும் ஐந்தாம் நாளில் சேஷ வாகனத்திலும் ஆறாம் நாளில் தங்க ஹம்ச வாகனத்திலும் ஏழாம் நாளில் திருச்சிவிகையிலும் எட்டாம் நாளில் வெள்ளிக் குதிரை வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடப்பது வழக்கம். பெருமாளின் வாகனம் நிலை அடையும்போது, கோயிலின் உள்ளே இருக்கும் கண்ணாடி அறைக்கு வந்து சேரும். ரங்கநாதர் ஆலயத்தைச் சுற்றியிருக்கும் மாடவீதிகளில் நடக்கும் இந்த அருள் உலாவைக் காண்பதற்குப் பக்கத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரள்வது வாடிக்கை.