

எல்லைகள் கடந்து சிறகடிக்கும் வலசைப் பறவைகள் போல் பறப்பவர்கள் ‘டிராவல் விளாகர்’கள். இவர்கள் செல்லும் இடங்களின் சிறப்புகளை, அங்கே அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களைத் தங்கள் புரிதலுக்கு ஏற்பப் பார்வையாளர்களுக்குப் பகிர்வார்கள். அவர்களில் புகழ்பெற்ற சிலர்:
கேராவும் நேட்டும் (Kara and Nate) அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரான ‘நாஷ்வில்’லில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களது பள்ளிக் கால நட்பு, பல்கலைக்கழகத்தில் காதலாகி, திருமணம் செய்துகொண்டனர். பிறகு தம்பதியராக உலகைச் சுற்றி வருகிறார்கள். கடந்த 2019 டிசம்பர் வரை, 100 நாடுகளைச் சுற்றி முடித்து 500 காணொளிகளை வெளியிட்டிருக்கிறார்கள். எந்த நாட்டுக்குப் போனாலும் தங்கள் கேரவேனை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. தம்பதியினருக்கு இடையில் வெளிப்படும் நகைச்சுவை உணர்வும் குறும்புகளும் இவர்களது சுற்றுலாக் காணொளிகளின் தனிச் சிறப்பு.
மைக் கோரி (Mike Corey) கனடா நாட்டைச் சேர்ந்தவர். எந்தவொரு விளாகரும் செல்ல விரும்பாத ஆபத்தான இடங்களை உலகம் முழுவதும் தேடி அலைபவர். இதுவரையில் ஆவணப்படுத்தப்படாத பழங்குடிகளின் வாழ்விடங்களுக்கு உயிரைப் பணயம்வைத்துப் போவது, அவர்களது நட்பை வெல்வது, அவர்களது வேட்டையில் பங்குபெறுவது, அவர்கள் தரும் உணவை உண்பது, ஆபத்தான சடங்குகளில் பங்கேற்பது தொடங்கி, கைவிடப்பட்ட, பூட்டப்பட்ட அரண்மனைகள், கோட்டைகளில் உள்ளே நுழைந்து வசிப்பது வரை, துணிவே இவரது துணை. அதனாலேயே ஐரோப்பாவின் முன்னணித் தொலைக்காட்சி இவரை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் ஆக்கியிருக்கிறது.
மார்க் வைன்ஸ் (Mark Wiens) தாய்லாந்தில் பிறந்து வளர்ந்த இவர், தூதரக ஊழியர்களாகப் பணிபுரிந்த தனது பெற்றோரின் நிமித்தம் பால்ய வயதில் பிரான்ஸ், காங்கோ, கென்யா, தான்சானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படித்து, வளர்ந்தவர். அதனால் இவருக்குப் பயணமும் பல நாடுகளின் உணவு வகைகளும் பிடித்துப் போயின. உலகத்தின் பல்வேறு உணவுக் கலாச்சாரங்களைத் தனது பயணத்தின் வழியாகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி உலகப் புகழ் பெற்றிருக்கிறார். சாலையோரக் கடை களின் உணவு வகைகளைப் பற்றி, அதில் சேர்க்கப்பட்ட பொருள்கள், கலாச்சார ரீதியாக அந்த உணவின் பின்னணி ஆகியவற்றை மார்க் விவரிக்கும்போது காணொளி பார்ப்பவரின் நாவில் உமிழ் நீர் சுரக்கச் செய்துவிடுவார்.
ஈவா சூ பெக் (Eva zu Beck) போலந்தில் பிறந்து வளர்ந்தவர். இங்கிலாந்தில் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக பாகிஸ்தானில் ஓராண்டுக் காலம் பணியாற்றினார். பின், அப்பணியிலிருந்து வெளியேறி 60 நாடுகளுக்கு விளாகராகச் சுற்றினார். செல்லும் இடங்களில் எல்லாம் சுற்றுலாப் பயணிகள் புறக்கணித்துச் செல்லும் தலங்கள்தாம் ஈவாவின் ‘டிராவாக்’. அவர் தனது கேமராவில் பிடித்துக் கொண்டு வரும் இடங்களையும் மனிதர் களையும் காணப் பார்வையாளர்கள் தவம் கிடக்கிறார்கள்.