

தமிழில் வெகுஜன நாடகங்களுக்கு என்று ஒரு நெடிய மரபுள்ளது. ‘பாய்ஸ்’ கம்பெனி என்னும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற நாடகக் குழுக்கள் புகழ்பெற்றிருந்தன. சினிமா பரவலானபோது நாடக ஆளுமைகளே சினிமாவிலும் கோலோச்சத் தொடங்கினார்கள். எஸ்.ஜி.கிட்டப்பா, பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ராமச்சந்திரன். சிவாஜி கணேசன் என திரையில் கோலோச்சிய பல நாயகர்கள் நாடக அரங்கத்தில் அனுபவம் பெற்றவர்களே.
சினிமாவே தமிழ் மக்களின் பிரதான பொழுதுபோக்காக மாறிவிட்ட காலகட்டத்திலும் வெகுஜன நாடகக் குழுக்கள் தமிழ்நாட்டு சபாக்களில் அரங்கு நிறந்த காட்சிகளுடன் நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தன. சினிமாவில் புகழ்பெற்ற எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மேஜர் சுந்தரராஜன், வி.எஸ்.ராகவன், வி.கோபாலகிருஷ்ணன், மனோரமா, எஸ்.என்.லட்சுமி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நாடகங்களில் தமது கலைப் பயணத்தைத் தொடங்கிவர்கள்தான். பழைய திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற ஆர்.எஸ்.மனோகர், தன் இறுதிக் காலம்வரை புராண நாடகங்களை மேடையில் அரங்கேற்றிக்கொண்டிருந்தார். பல சமூக நாடகங்களை எழுதி இயக்கிய இயக்குநர் கே.பாலசந்தர் நாடக மேடையிலிருந்து திரைத்துறைக்குச் சென்று கோலோச்சினார். ’நீர்க்குமிழி’, ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட அவருடைய பல கறுப்பு வெள்ளைப் படங்கள் முதலில் நாடகங்களாக அரங்கேற்றப்பட்டவை. அவருக்கு முன்னதாக அண்ணா, மு. கருணாநிதி உள்ளிட்டோரும் நாடகம் வழி பிரபலமடைந்து திரைத் துறைக்குச் சென்றிருந்தார்கள்.
1960களில் அரசியல் பகடி நாடகங்களுக்காக சோ ராமசாமி முக்கியமான ஆளுமையாக உருவெடுத்தார். ஒய்.ஜி.பார்த்தசாரதி தொடங்கிய யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றிவந்தது. அவரது மகன் ஒய்.ஜி.மகேந்திரன் அந்த நாடகக் குழுவை இன்றளவும் நடத்திவருகிறார். எழுத்தாளர் சுஜாதா எழுதிய சில நாடகங்கள் பூர்ணம் விஸ்வநாதனால் அரங்கேற்றப்பட்டு வரவேற்பைப் பெற்றன. 1980களில் கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர் இருவரும் நகைச்சுவை நாடகங்களின் மூலம் உலகளாவிய தமிழர்களைச் சென்றடைந்தனர். தமிழ் நாடக குழுக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நாடகங்களை அரங்கேற்றும் போக்கு தொடங்குவதற்கு இவ்விருவரும் பெரும் பங்களித்தனர்.
கிரேஸி மோகன் 2019இல் மறைந்த பிறகும், அவருடைய தம்பி மாது பாலாஜி வழியாக ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ நாடகங்களை அரங் கேற்றிக் கொண்டிருக்கிறது. எஸ்.வி.சேகரின் ‘நாடகப்ரியா’ மக்களின் ரசனைக்கேற்ற நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இன்றளவும் நகைச்சுவை மட்டுமல்லாமல் பிற வகைமையைச் சேர்ந்த நாடகங்களை அரங்கேற்றும் குழுக்களும் தொடர்ந்து இயங்கிவருகின்றன. விசு, மௌலி, ராது, காத்தாடி ராமமூர்த்தி, கோவை அனுராதா, பாம்பே ஞானம் உள்ளிட்டோர் நாடகம் வழியாகப் புகழ்பெற்றவர்களே.
- நந்தன்