

உரக்கப் பேசுதல், பாடுதல் போன்ற நாடக மேடை உத்திகளையே சினிமாவுக்கான நடிப்பாகவும் தொடக்கக்கால சினிமா நடிகர்கள் பின்பற்றினார்கள். இந்த மிகை நடிப்பு விமர்சனத்துக்கும் உள்ளானது. இதை வெகுவாக மாற்றிக் காட்டியிருப்பவர்கள் நவீன நாடகக் கலைஞர்களே! அவர்களில் சிலரைக் குறித்த சுருக்கமான அறிமுகம்:
கலைராணி: எண்ணற்ற அம்மா கதாபாத்திரத்தைத் தமிழ் சினிமா இவருக்கு அளித்தபோதும் அதிலும் தனித்துவத்தை வெளிப்படுத்தியவர் கலைராணி. நவீன நாடக உலகம் அவரைப் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு, தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ளாமல் தவறி வருகிறது. நாகேஷின் நடிப்பால் சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார், சென்னைப் பெண்ணான கலைராணி. அரசுத் திரைப்படக் கல்லூரியின் நடிப்புப் பிரிவில் சேர்ந்து பயின்றார். கூத்துப் பட்டறையில் பயிற்சிபெற்றார். கூத்துப் பட்டறை தந்த அனுபவம், நாடகம், திரைப்படம் ஆகிய இரு தளங்களிலும் தனித்துவத்துடன் அவரை வலம் வரச் செய்துவருகிறது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு வீதி நாடகம் எழுதவும் நிகழ்த்தவும் பயிற்சி அளித்துள்ளார்.
பசுபதி: கமல் ஹாசனின் ‘மருத நாயகம்’ படத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அவரது ‘விருமாண்டி’யில் கொத்தாளனாக ரசிகர்கள் மனதில் பதிந்தவர் பசுபதி. தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ யில் ரங்கன் வாத்தியாராக நினைவில் நிற்கிறார். எதிர்மறை, குணச்சித்திரம், நகைச்சுவை என எந்தக் கதாபாத்திரத்திலும் எல்லை மீறாமல் நடிப்பார். நுணுக்கமான வசன உச்சரிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட உடல்மொழியும் இவரது பலம். இவரும் கூத்துப்பட்டறை தயாரிப்புதான். ‘மேஜிக் லேன்டர்ன்ஸ்’ நாடகக் குழுவில் நடித்து வந்துள்ளவர் பசுபதி. ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ஏற்றுக் கவனிக்க வைத்தார்.
குரு சோமசுந்தரம்: மதுரை டிவிஎஸ் கம்பெனியில் வேலைபார்த்த குரு சோமசுந்தரம், நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டுக் கூத்துப்பட்டறையில் சேர்ந்தார். பத்தாண்டுக் காலம் அதில் பணியாற்றிப் பல நாடகங்களில் நடிகராகவும் இயக்குநராகவும் பங்காற்றினார். இவரது நடிப்பை, கூத்துப் பட்டறை நிகழ்த்திய ‘சந்திரகிரி’ நாடகத்தில் கூர்ந்து கவனித்தார் தியாகராஜன் குமாரராஜா. தனது ‘ஆரண்யகாண்டம்’ படத்தில், சந்திரகிரியின் அதே உடல்மொழி, வசன உச்சரிப்பைக் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டு ‘காளைய’னாக நடிக்க வைத்தார். இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான கலைஞர் குரு சோமசுந்தரம். திரை, நாடகம் ஆகிய இரு தளங்களிலும் நடித்துக்கொண்டே, குழந்தைகளுக்கும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கும் நடிப்புப் பயிற்சி அளித்துவருகிறார்.
விஜய் சேதுபதி: விஜய் சேதுபதியின் சொந்த ஊர் ராஜபாளையம். 12 வயதில் எண்ணூருக்குக் குடிபெயர்ந்தவர். சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படித்து, பிகாம் பட்டதாரியானார். குடும்பத்துக்காகப் பல வேலைகளைச் செய்தார். துபாயில் கணக்காளராகவும் வேலை பார்த்தார். ஒரு கட்டத்தில் அந்த வேலையும் பிடிக்காமல் போய், சென்னை திரும்பியவருக்கு கூத்துப்பட்டறை பற்றிய சுவரொட்டி கண்ணில் பட்டது. உடனடியாக அங்கு கணக்காளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு நாடகப் பயிற்சிகளைப் பார்த்தே நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். நட்சத்திர பிம்பம் குறித்த கவலை இன்றிக் கதாபாத்திரங்களை ஏற்பவர். இன்று விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞர். தெலுங்கு, இந்தி, மலையாளம் என எல்லைகளையும் கடந்துவருகிறார்.
இளங்கோ குமாரவேல்: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துக்கலைத் துறையில் பட்டம் பெற்றவர் இளங்கோ குமாரவேல். கூத்துப்பட்டறையில் சில காலம் இயங்கிய இவர், ‘மேஜிக் லேன்டர்ன்ஸ்’ என்கிற நாடகக் குழுவைத் தொடங்கினார். இடையிடையே திரைக்கதைகளும் எழுதிவந்த இவரது கவனம் நாடகத் தயாரிப்பில் குவிந்தது. தனது குழுவின் பிரம்மாண்டத் தயாரிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு நாடக வடிவம் கொடுத்து மேடை யேற்றினார். அது அவரைத் திரையுலகத்துக்கு இழுத்துக்கொண்டு வந்தது. நாசர், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோரால் திரையில் அடையாளம் காட்டப்பட்ட இளங்கோ குமாரவேலை, தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தினார் இயக்குநர் ராதா மோகன். திரை, நாடகம் ஆகிய இரண்டு தளங்களிலும் இயங்கி வருகிறார் இளங்கோ.