

ஒரு நாவல் என்ன செய்யும்? அதுவும் காடு குறித்து எழுதப்பட்ட ஒரு நாவல். உலகின் மிகப் பழமையான மழைக்காடுகளில் ஒன்றான போர்னியோ மழைக்காடுகள் அழிக்கப்படுவதைப் பற்றிய நாவல் ‘காடோடி.’ அது வெளிவந்தபோது அலைபேசியில் தொடர்ந்த அழைப்புகளில் ஒருவர் திடீரெனத் தேம்பி அழத்தொடங்கினார். நாவலைப் படித்த அவரால் தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “ஒரு காட்டின் மரணம் எப்படி இருக்குமென்று உணர்த்திவிட்டீர்கள். அதை என்னால் தாங்க முடியவில்லை” என்றார்.
பின்பு அதே வாசகர் புதுச்சேரியிலுள்ள அவருடைய மூன்று மாடி இல்லத்துக்கு அழைத்திருந்தார். வாசலில் ஏகப்பட்ட கார்கள். “சார், இந்த வீட்டுக்கான மரத்தை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து கட்டினேன். இப்போது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. இந்த நாவல் சென்ற ஆண்டே வந்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது. இதை ஈடுசெய்யும் விதமாகச் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எனக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் முழுக்கவும் காடு வளர்க்கப்போகிறேன் என்பதைக் கூறவே உங்களை அழைத்தேன்” என்றார் நெகிழ்ச்சியுடன். ‘காடோடி’ நாவல் ஏற்படுத்திய தாக்கம் அது.
நாவலைப் படித்தவர்கள் நெகிழ்வதும் அழுவதும் இன்றுவரை தொடர்கிறது. அது வெளிநாட்டில் நிகழும் கதை ஆயிற்றே? நம் தமிழ் வாசகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ என்ற தயக்கம் முதலில் இருந்தது. ஆனால், காடழிப்பு என்பது உலகப் பொது நிகழ்வு. போர்னியோ காட்டின் அழிவை நமது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குப் பொருத்திப் பார்த்துக்கொண்டனர் நம் வாசகர்கள். பல ஆண்டுகளாகக் காடுகளுக்கு மலையேற்றம் செல்பவர்கள்கூட நாவலைப் படித்த பிறகு, “இவ்வளவு ஆண்டுகளாக நாங்கள் சென்றது வெறும் சுற்றுப்பயணமே, காட்டை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை இந்நாவல் உணர்த்திவிட்டது” என்றனர்.
தாங்களே மழைக்காட்டுக்குள் நுழைந்து பார்ப்பது போலவே நூலின் நடை அமைந்திருப்பதாகப் பலரும் குறிப்பிடுவர். நாவலில் வரும் உயிரினங்களையும் இடங்களையும் கூகுளில் தேடுகின்றனர். சிங்கப்பூரிலிருந்து ஒரு வாசகர் அழைத்தார். “நாவலில் வரும் கினபத்தங்கன் காட்டுக்கு நேரில் செல்வோம், வருகிறீர்களா?” என்றார். “இப்போது அந்தப் பகுதியில் காடு இல்லாமல், வெறும் செம்பனைத் தோட்டமாக இருந்தால் என்ன செய்வது?” என்றேன். அவரிடம் பதில் இல்லை. அந்த அளவுக்குக் காட்டுடன் ஒன்றிப்போனார்கள் வாசகர்கள்.
நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் வாசகர் மனங்களில் வாழ்கின்றனர். அந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தும் காடு என்றால் என்னவென்று வாசகர்களுக்கு உணர்த்தியவர்கள். அதிலும் பிலியவ் பலருக்குக் குடும்ப உறுப்பினர் போலவே மாறிவிட்டார். கேரளத்தில் வீடுகளை ஏதாவது ஒரு பெயரில் பதிவுசெய்வது வழக்கம். அப்படி வாகமன் என்னும் மலைப்பகுதியில் கட்டியுள்ள தன் வீட்டுக்குக் ‘காடோடி’ வாசகர் ஒருவர், ‘பிலியவ் ஹவுஸ்’ என்று பதிவுசெய்துள்ளார்.
நாவலின் ஆசிரியர் போர்னியோவின் காடழிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியதன் நேரடிச் சாட்சியமே நாவல். அது உண்மை நிகழ்வுகள் பலவற்றின் அடிப்படையில் புனையப்பட்டது என்பதால், அந்த உயிரோட்டத்தை வாசகர்களால் உணர முடிகிறது எனலாம். மேலும், காடழிப்பால் உயிர்ப்பன்மைக்கு, பழங்குடிகளின் வாழ்வுக்கு ஏற்படும் சீரழிவைப் பற்றி மட்டும் இது கூறவில்லை. காடழிப்பின் பின்னுள்ள பன்னாட்டு வள அரசியலையும் சேர்த்துப் பேசியதே நாவலின் சிறப்பாகும்.
தமிழில் இதுவரை ஒரு நாவலுக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்துள்ளன என்றால், அது ‘காடோடி’ நாவலுக்கு மட்டுமே. அந்த அளவுக்கு வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ள நாவல் இது. அதிலும் இதுவொரு சுற்றுச்சூழலியல் நாவலாக இருப்பதுதான் பெருமையளிக்கிறது. இதை நம் மக்கள் சுற்றுச்சூழலியல் நோக்கி தம் மனத்தைத் திருப்பி வருவதன் அடையாளமாகவும் கொள்ள முடியும்.