நீர் எழுத்து பிறந்த கதை!

நீர் எழுத்து பிறந்த கதை!
Updated on
2 min read

நீர்நிலைகளின் மீது ஏற்பட்ட தணியாத ஆர்வம் காரணமாக எந்தவொரு புதிய பகுதிக்குச் சென்றாலும் அங்குள்ள நீர்நிலைகளைத் தேடிச்சென்று பார்ப்பது வழக்கம். போர்னியோ காட்டில் தொடங்கிய பழக்கம். தமிழ் நாட்டுக்கு வந்த பிறகும் சுனை, ஓடை, அருவி, ஏரி, குளம், ஆறு, சுனை என்று மாநிலம் முழுவதும் சுற்றினேன். தமிழ்நாட்டுக்கு வெளியிலும் கேரள, கர்நாடகப் பகுதிகளுக்கும் சென்று வந்தேன். அப்போது எல்லாம் புத்தகம் எழுதும் எண்ணம் இருந்ததில்லை.

ஒருமுறை தண்ணீர் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்பிய நண்பர் ஒருவருக்காக முழுமையான நூல் ஒன்றைத் தேடியபோதுதான் தமிழில் அப்படியொரு நூலே வெளிவரவில்லை என்பதை உணர்ந்தேன். வெளியான நூல்களும் நமது பொறியாளர்களால் எழுதப்பட்ட நீர்நிலைகளின் கட்டுமானங்கள் குறித்த நூல்களாக, நீரியல் துறை சார்ந்த நூல்களாக மட்டுமே இருந்தன. ஒரு எளிய மனிதர் புரிந்துகொள்ளும் வகையில் நூல்கள் இல்லை. அது எனக்குப் பெரும் வியப்பை அளித்தது.

தமிழ்ப் பண்பாடு என்பது தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு. ஒரு வெப்பமண்டலப் பகுதியில் அதுவே இயல்பு. ஆனாலும், ஈராயிரம் ஆண்டு மரபைச் சார்ந்த தமிழ் மொழியில் தண்ணீரைப் பற்றிய ஒரு முழுமையான நூல் இல்லை என்பது ஏமாற்றமளித்தது. தண்ணீரைப் பற்றி அறிவியல், அரசியல், பண்பாடு சார்ந்த முழுமையான பார்வையில் ஒரு நூல் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தபோது பிறந்ததே ‘நீர் எழுத்து.’

ஆனால், அது அவ்வளவு எளிமையாக அமையவில்லை. அதற்காகத் தொடர்ந்து பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுச் செய்திகள் தொடங்கி அறிவியல் செய்திகள் வரை தேட வேண்டியிருந்தது. பல நீரியல் அறிஞர்களைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. அப்படித்தான் இந்தியாவிலேயே குறைவாக மழை பொழியும் ராஜஸ்தானில் அம்மக்களின் தண்ணீர் சேமிப்பு முறையைக் குறித்து அறியும் ஆவல் எழுந்தது. இந்தியாவின் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்தர் சிங்கின் அழைப்பை ஏற்று அங்கும் சென்றேன். ஏழு ஆண்டுகால உழைப்பும் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணங்களும் உள்ளடக்கியதாக மெல்ல ‘நீர் எழுத்து’ உருவானது.

ஆழமான தரவுகள் இருந்தும் அனைத்துச் செய்திகளும் மக்களைச் சென்றடைய வேண்டும், அப்போதுதான் நீர் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குக் கிடைக்கும் என்ற குறிக்கோளுடன் எழுதப்பட்ட நூலுக்குத் தொடர்ந்து பலனும் கிடைத்துவருகிறது. ‘நான் தருவையைப் பார்த்துவிட்டேன்’, ‘நான் புலிக் கண் மதகு அருகிலிருந்து பேசுகிறேன்’ போன்ற பல குரல்கள் அடிக்கடி அலைபேசியில் ஒலிக்கின்றன.

தருவை, அளம், ஏலா முதலிய பெயர்கள் ஒருகாலத் தில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் அறியாத சொற்கள். அதாவது நீர்நிலைகளின் பெயர்கள். இன்று நிலைமை அப்படியில்லை. நீர்நிலைப் பயணங்கள் என்று அடிக்கடி இளைஞர்கள் பயணம் செல்கின்றனர். அதற்கு வித்திட்டிருப்பது ‘நீர் எழுத்து’ நூலாகும்.

மக்கள் மட்டுமன்றி, பல்கலைக்கழகங்களின் நீரியல் துறை ஆய்வு மாணவர்கள் பாடத்திட்டத்துக்கு அப்பால் பலவற்றை இந்நூல் கற்றுத் தந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். நீர்வளத் துறை அதிகாரிகளும் நூல் தங்களுக்குப் பல வகைகளிலும் உதவி வருவதைப் பகிர்ந்துகொள்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நூலைப் படித்துவிட்டு, “இப்படியொரு புத்தகம் தமிழில் வந்திருப்பது வியப்பை அளிக்கிறது. நான் பணிபுரிந்த காலத்தில் இந்நூல் வந்திருந்தால் பலவற்றை நடைமுறைப்படுத்தியிருப்பேன்” என்றார். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும், உயரிய விருது பெற்ற பேராசிரியர் ஒருவர், நூலின் நுட்பமான சில செய்திகள் குறித்து ஆழமாக உரையாடியதுடன் தமிழில் இப்படியொரு நூல் வந்திருப்பதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நூலின் முன்னுரையில் இவ்வாறு எழுதியிருப்பேன்: ‘நீரினால் எழுதும் எழுத்து அழியும் என்பார்கள். இது அழியாத நீர் எழுத்து.” நீர் குறித்து 360 பாகையிலும் தெரிந்துகொள்ள உதவும் கையேடாகத் திகழும் ‘நீர் எழுத்து’ தமிழ்நாட்டின் ‘தண்ணீர் பைபிள்’ போல மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in