

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15, உலக நுகர்வோர் உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உலகம் முழுவதும் நுகர்வோரின் உரிமைகளை அங்கீகரித்து அவை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கானது. நுகர்வோர் உரிமைகள் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்று வலியுறுத்துவதற்கும் நுகர்வோர் உரிமைகளை நசுக்கும் முறைகேடுகளையும் சமூக அநீதிகளையும் எதிர்த்துக் குரல் எழுப்புவதற்கும் உலக நுகர்வோர் உரிமைகள் நாள் பயன்படுத்தப்படுகிறது.
1960இல் உலகெங்கும் உள்ள நுகர்வோர் சங்கங்கள் இணைந்து, நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச நிறுவனம் (International Organisation of Consumer Unions) என்னும் அமைப்பு உருவானது. இது நுகர்வோர் அகிலம் (Consumers International) என்று அழைக்கப்படுகிறது. 1962 மார்ச் 15, அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுகர்வோர் உரிமைகள் பற்றி உரையாற்றினார். “நுகர்வோர் என்பதற்கான வரையறைக்குள் நாம் அனைவரும் அடங்கு வோம். அரசும் தனியாரும் மேற்கொள்ளும் ஒவ்வொரு பொருளாதார முடிவாலும் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான். ஆனால், நுகர்வோரின் கருத்துகள் பெரும்பாலும் அரசு, தனியார் அமைப்புகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை” என்று கென்னடி அந்த உரையில் பேசினார். நுகர்வோர் உரிமைகள் குறித்துச் சர்வதேச அளவில் ஒரு அரசுசார் தலைவர் பேசியது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. இந்தியாவில் மகாத்மா காந்தி நுகர்வோர் பற்றி எழுதியிருக்கிறார்.
நுகர்வோர் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த அன்வர் ஃபஸல் என்னும் நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளர் கென்னடி உரை நிகழ்த்திய மார்ச் 15ஐ ஒவ்வோர் ஆண்டும் நுகர்வோர் உரிமைகள் நாளாகக் கொண்டாடலாம் என்று முன்மொழிந்தார். அதன்படி 1983இல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15 உலக நுகர்வோர் உரிமைகள் நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 1985இல் ஐக்கிய நாடுகள் அவை உலக நுகர்வோர் உரிமைகள் நாளை அங்கீகரித்தது. கடந்த 40 ஆண்டுகளாக உலகளாவிய நுகர்வோர் உரிமை சங்கங்களை இணைத்து நுகர்வோர் உரிமைகள் நாள் பிரச்சார நிகழ்ச்சிகளை ஐநா ஒருங்கிணைத்து வருகிறது.