

நூறு ஆண்டு இந்திய சினிமாவில் முதல் முறையாக ‘பாகுபலி’ படத்தில் ‘கிளிகி’ என்கிற ஒரு கற்பனை மொழியை (Fictional Language) உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். அது பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. ‘பாகுபலி’ படத்தின் இயக்குநருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அந்தக் கற்பனை மொழியை உருவாக்கியவர், கவிஞரும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி. கணினி அறிவியலையும் மொழியையும் இணைத்து ‘லிரிக் இன்ஜினியரிங்’ உள்பட புதுமையான மொழிக் கருவிகளை சோதனை முறையில் உருவாக்கியுள்ள இவர், ‘கிளிகி’ என்கிற கற்பனை மொழியை உருவாக்கிய பின்னணியை நம்மிடம் விளக்கினார்:
“இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, போரை ஒரு தொழிலாகச் செய்யும் காலகேயர்கள் என்கிற கற்பனையான இனக் கூட்டம் பேசும் மொழி அது. பேசப்படும் முறையால் பழங்குடி மொழிகளின் தொன்மை அதில் ஒலிக்க வேண்டும். அந்த மொழியைக் காலகேயர்கள் பேசும்போது, படத்தில் சப்-டைட்டில் போட மாட்டேன். அதற்குப் பதிலாக காளகேயர்கள் பேசுவதை வைத்தே, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக அந்த மொழியின் ஒலியமைப்பும் சொற்களும் இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் உருவாக்கியதுதான் ‘கிளிகி’. இந்த மொழியின் தனித்துவம் இதில் பயன்படுத்தப்படும் ‘கிளிக்’ ஒலிகள்தான். குறியீடுகளைக் கொண்டு அதையே அம்மொழியின் வரிவடிவமாக உருவாக்கினேன். அதில் 22 குறியீடுகளைப் பயன்படுத்தினேன். அவற்றைக் கொண்டு உங்களால் ‘கிளிகி’ மொழியை எழுத, படிக்க முடியும். இம்மொழியைக் கற்றுக்கொண்டு பேசும்போது, அதன் ஒலியமைப்பு உங்களுக்குக் கேளிக்கை உணர்வைக் கொடுக்கும். ‘பாகுபலி’ படப்பிடிப்புக்கு முன்னர், ‘கிளிகி’ மொழியில் 700 சொற்களையும் 40 இலக்கண விதிகளையும் உருவாக்கிவிட்டேன்” என்கிறார். அவர்.
‘பாகுபலி’ படத்துக்கு 50 வருடங்களுக்கு முன்பே, ஹாலிவுட்டில் ஜார்ஜ் லூகாஸ் உருவாக்கத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம். அந்தப் படத்தில் நான்கு கற்பனை மொழிகள் பயன்படுத்தப்பட்டன. வேற்றுக் கிரகங்களில் வாழும் மனித உடலும் விலங்குகளின் முகமும் கொண்ட கதாபாத்திரங்கள் பேசுவதற்கு இந்தக் கற்பனை மொழிகள் உருவாக்கப்பட்டன. ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்த ‘ஸ்டார் ட்ரெக்’ வரிசைப் படங்களுக்கும் கற்பனை மொழிகளைப் பயன்படுத்தினார்கள்.
‘பிரேவ் ஹார்ட்’ படத்தை இயக்கி, நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பார்வையாளர்களைப் பெற்றவர் மெல் கிப்சன். அவரது எழுத்து இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘அபாகலிப்டோ’. மாயன் பழங்குடி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், இரண்டு பழங்குடி இனக்குழுக்களின் மோதலைக் காட்சிப்படுத்தியிருந்தார். இதில் மாயன் பழங்குடிகள் பேசும் மொழியாகப் பயன்படுத்த, மொழியியலாளர்கள் உதவியுடன் முதலில் கற்பனை மொழி ஒன்றை உருவாக்கினார். ஆனால், மெக்சிகோ பகுதிகளில் வாழும் இருபதாயிரம் மக்கள் இன்னும் மாயன் மொழியைப் பேசுவதை அறிந்து, அம்மக்களிடம் செய்த ஆய்வின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்து மாயன் மொழியையே பயன்படுத்தினார்.
அதேபோல், 12 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி, அதிர்ச்சியூட்டும் வசனங்கள், வன்முறை, ஆபாசக் காட்சிகளுக்காக பார்க்கப்பட்டு வரும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில் ‘டோத்ரகி’, ‘வெலரியன்’ என இரண்டு மொழிகள் உருவாக்கப்பட்டன.