Published : 22 Oct 2023 08:37 AM
Last Updated : 22 Oct 2023 08:37 AM

சர்வதேச அனிமேஷன் நாள்: அக்டோபர் 28 | அனிமேஷன் காட்சி அனுபவத்தின் பிரம்மாண்டம்

அனிமேஷன் என்றவுடன் குழந்தைகளுக்கான கார்ட்டூன், திரைப்படங்கள்தாம் நினைவுக்கு வரும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்குத் துறையையும் தாண்டி விளையாட்டு, விளம்பரம், கல்வி, வணிகம் எனப் பல்வேறு துறைகளில் அனிமேஷனின் பயன்பாடு விரிவடைந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும், குறிப்பாக சென்னையிலும் கிடுகிடுவென வளர்ச்சி கண்ட பல துறைகளில் அனிமேஷன் துறையும் ஒன்று.

இந்தியாவில் அனிமேஷன்

குகை ஓவியங்கள், தோல் பாவைக்கூத்து போன்றவையே அனிமேஷன் பிறப்பதற்கான அடிப்படை எனச் சொல்லப்படுகிறது. பின்னாளில், கைப்படவோ அல்லது கணினி மென்பொருளின் உதவியுடனோ ஓவியங்களை வரைந்து, அவற்றைத் தொகுத்து காணொளியாக ஓடவைப்பது அனிமேஷன் ஆனது. டிரெடிஷனல் அனிமேஷன், அனிமே (Anime), 2டி, 3டி, ஸ்டாப் மோஷன், மோஷன் கிராஃபிக்ஸ் என அனிமேஷன் பல வகைப்படும். 1900களின் ஆரம்பத்தில் அனிமேஷன் வேலைப்பாட்டை ஒட்டிய கதாபாத்திரங்களை உருவாக்கும் பணிகள் தொடங்கியிருந்தாலும், ‘மிக்கி மவுஸ்’ கார்ட்டூன் கதாபாத்திரத்தின் வெற்றியால் சாமானியரின் பார்வையும் அனிமேஷனின் மேல் விழத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ‘பாப்பய்’, ‘டாம் அண்ட் ஜெர்ரி’ என வரிசையாக அனிமேஷனைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் உருவாக்கப்பட்டன. கார்ட்டூன்களை அடுத்து ‘டாய் ஸ்டோரி’, ‘ஐஸ் ஏஜ்’ உள்ளிட்ட முழு நீள அனிமேஷன் திரைப்படங்களும் வெளிவரத் தொடங்கின. கூடவே ‘ஜுராஸிக் பார்க்’, ‘ஹாரி பாட்டர்’ போன்ற படங்களில் கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்க அனிமேஷன், கிராஃபிக்ஸ் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தன.

மேற்கத்திய நாடுகளில் இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ‘அனிமே’ எனப்படும் அனிமேஷன் வகையில் ஜப்பான் தன்னை வலுப்படுத்திக் கொண்டது. இன்றும் ஜப்பானின் அனிமே கதைகளுக்கான தனி ரசிகர் கூட்டத்தைப் பார்க்க முடியும். இப்படி உலக நாடுகளில் அனிமேஷன் பரவிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவுக்கு அனிமேஷனை அறிமுகப்படுத்தியவர் தாதா சாகேப் பால்கே. முதல் ‘ஸ்டாப் மோஷன்’ திரைப்படத்தை அவர் இயக்கியதை அடுத்து 1937இல் ஒலியுடன் கூடிய முதல் இந்திய அனிமேஷன் படம் கொல்கத்தாவில் தயாராக, 1947இல் சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் தென்னிந்தியாவின் முதல் அனிமேஷன் படம் தயாரானது.

இந்தியத் திரைப்படப் பிரிவின் (Film Division of India) வரவுக்குப் பிறகு, 1950களில் டிஸ்னி நிறுவனத்துடன் கைகோத்து ஒப்பந்தம் ஒன்றை இட்டுக்கொண்டது. டிஸ்னியின் தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு இந்தியாவில் அனிமேஷன் மீது ஆர்வம் கொண்டவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. அதே நேரம், இந்தியத் திரைப்படப் பிரிவின் கீழ் ‘அனிமேஷன் யூனிட்’ தொடங்கப்பட்டது. இந்த யூனிட்டின் முதல் அனிமேஷன் திரைப்படமான ‘தி பான்யன் டீர்’ திரைப்படம் 1957ஆம் ஆண்டு வெளியானது. இதுவே இந்தியாவில் அனிமேஷன் வளர்வதற்கான முதல் படி!

கோலிவுட்டில் கிராஃபிக்ஸ்

‘தி பான்யன் டீர்’ வெளியானதிலிருந்து அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்திய அனிமேஷன் துறையில் நிறைய மாற்றங்கள் நடந்தன. கற்பதும் பெறுவதுமாக இருந்த அந்தக் காலகட்டங்களில் சோதனை முயற்சியாக சில அனிமேஷன் படங்கள் தயாரிக்கப்பட்டன. கணினி அனிமேஷன் வேலைப்பாடுகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தில் விளம்பரங்களில் இந்திய அனிமேஷன் கலைஞர்கள் கவனம் செலுத்தினர். அதன் விளைவாக வரலாற்றில் மறக்க முடியாத ஏர் இந்தியாவின் ‘மகாராஜா’, அமுல் ‘சிறுமி’ போன்ற முத்திரை முகங்கள் அனிமேஷனின் உதவியோடு வடிவமைக்கப்பட்டன. குழந்தைகளுக்கான படங்கள், திகில் படங்கள் போன்றவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அனிமேஷனின் பயன்பாடு இருந்த நிலையில், சாதாரண படங்களிலும் அனிமேஷனைப் புகுத்த நினைத்தார் இயக்குநர் ஷங்கர். 90களில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘காதலன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’ திரைப்படங்களின் மூலம் அனிமேஷன் கிராஃபிக்ஸ் மேலும் பரவலாக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு வெளியான ‘ஆளவந்தான்’ திரைப்படம் மூலம் சண்டைக் காட்சிகளுக்கும் அனிமேஷன் கிராஃபிக்ஸைப் பயன்படுத்தலாம் என்கிற புதுமையைப் புகுத்தினார் கமல் ஹாசன். இப்படித் திரைப்படங்கள், விளம்பரங்கள் எனப் பல துறைகளில் தேவைக்கேற்ப அனிமேஷன் பயன்படுத்தப்பட்டது.

அதிகரிக்கும் பயன்பாடு

2005க்குப் பிறகு அனிமேஷனின் தேவை அதிகரித்தது. அனிமேஷன் தொடர்பான படிப்புகள் மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டன. ‘கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்’, ‘அனிமேஷன்’ சார்ந்து குறுகிய காலப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. காட்சித் தொடர்பியல் (‘விஸ்காம்’) பட்டப்படிப்பில் இது குறித்த பாடங்கள் இடம்பெற்றன.

இந்தக் காலகட்டத்தில் ‘கேமிங்’ வாயிலாக அனிமேஷன் துறை வேறொரு பரிமாணத்தை எட்டியது, கடந்த 15 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கான வளர்ச்சியை கேமிங் துறை எட்டியிருக்கிறது. கணினி, திறன்பேசியின் பயன்பாடு பரவலாக்கப்பட்ட நேரத்தில் கேமிங் துறையில் பல புதுமைகள் அறிமுகமாகிக்கொண்டே இருந்தன. இதனால், வயது வித்தியாசமின்றி இணையவழி ‘கேமிங்’ விளையாட்டுகளுக்கு அடிமையாகும் பயனர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது. இத்துறையின் வளர்ச்சிக்கு அனிமேஷனின் பங்கு அளப்பரியது.

கேமிங், திரைப்படங்கள், விளம்பரம் என எதுவாயினும் திரையில் தோன்றும் காட்சிகளை மேலும் மெருகேற்றிக் காட்டவே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (எஸ்.எஃப்.எக்ஸ்), விஷுவல் எஃபெக்ட்ஸ் (வி.எஃப்.எக்ஸ்) பயன்படுத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் ‘அவதார்’ தொடங்கி கோலிவுட்டின் ‘லியோ’ வரை இந்த எஃபெக்ட்ஸை பயன்படுத்தி திரைப்படக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. ஹாலிவுட் உள்ளிட்ட பல வெளிநாட்டுப் படங்களுக்கான அனிமேஷன் பணிகள் செலவு குறைவு என்பதனால் இந்தியாவின் மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

எஸ்.எஃப்.எக்ஸ், வி.எஃப்.எக்ஸ் வேலைப்பாடு களுக்கும், வெர்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி, மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர்த் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் அனிமேஷன்தான் அடிப்படை. ஏற்கெனவே வீட்டு மனை விற்பனை தொடர்பான விளம்பரங்களில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு, நீங்கள் இருக்கும் இடத்தி லிருந்தே வாங்க நினைக்கும் வீட்டை நேரில் சென்று பார்ப்பது போலவே திரையில் காணலாம். ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக காட்டும் இந்த வேலைப்பாடுகள் மெய்நிகர் திரை மூலம் சாத்தியமாகிறது. அடிப்படையாக அனிமேஷன் படைப்புகள் உருவாக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப அந்தப் படைப்புகளை வெர்சுவல் ரியாலிட்டிக்கு உள் ளேயோ, மெட்டாவெர்ஸ் உலக்குக்கோ கடத்தலாம்.

பெருகும் வாய்ப்புகள்

அனிமேஷன் என்பது ‘அனிமேட்டர்’ எனப்படும் ஒற்றை நபரால் செய்து முடிக்கக்கூடிய வேலை அல்ல. வரைவது, லே-அவுட் அமைப்பது, வண்ணம் பூசுவது, பேக்கிரவுண்ட் அமைப்பது, மாடலிங், அனிமேஷன், ஒலி-ஒளி சேர்ப்பது, படத்தொகுப்பு செய்வது, அவுட்புட் எடுப்பது என அனிமேஷன் கிராஃபிக்ஸ் வேலைப்பாடு என்பது பலரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படும் வேலை. திறனைச் சோதிக்கும், அதிக நேரமெடுக்கும் வேலை என்பதால் ஒவ்வொரு வேலைக்கும் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் ஓர் அனிமேஷன் புராஜெக்ட்டில் பணியாற்றும் ஒவ்வொருவரும் அனிமேஷனின் அடிப்படையைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

திரும்பும் திசையெல்லாம் காட்சிமயமாகிப் போன இந்தக் காலகட்டத்தில் அனிமேஷன், கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகளுக்கான தேவை நிச்சயமாக அதிகரிக்கும். எனவே இத்துறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள், படித்துக்கொண்டே அனிமேஷன் சார்ந்த குறுகிய காலப் படிப்புகள், பயிலரங்குகளில் பதிவுசெய்து கற்கலாம். ‘மாயா’, ‘பிளெண்டர்’ என அனிமேஷன் செய்வதற்கான சில மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து அனிமேஷன் பயிற்சி எடுக்கலாம். அன்று எட்டாத அதிசயமாகப் பார்க்கப்பட்ட அனிமேஷன் இன்று எளிதாக அணுகக்கூடியதாகிவிட்டது. தொழில்முறைத் தேவைகளுக்காகவும், தனிப்பட்ட தேவை களுக்காகவும் அனிமேஷன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இத்துறையில் வாய்ப்புகள் பலமடங்கு பெருகி உள்ளன. ஆர்வமும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் இத்துறையில் ஜொலிக்கலாம்.

தகவல்கள் உதவி: வசிம், வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x