

காலப்போக்கில் பல விஷயங்கள் மாறி வந்துள்ளன. இதில் நண்பர்கள் நாள் கொண்டாட்டமும் விதிவிலக்கல்ல. 2023இல் வழக்கமான நண்பர்கள் நாள் கொண்டாட்டத்துக்கான அறிகுறிகளே இல்லை எனச் சொல்லாம். ஒரு 15 ஆண்டுகள் ரீவைண்ட் செய்துபார்த்தால், ஃபிரெண்ட்ஷிப் பேண்ட் வாங்கிக்கொண்டும், பரிசுகள் வாங்கிக்கொண்டும் சில நாள்களுக்கு முன்பே நண்பர்கள் நாள் கொண்டாட்டத்துக்கு ஆயுத்தமாகி கொண்டிருந்தனர் 90'ஸ் கிட்ஸ்கள்.
அது ஒரு காலம்
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் நாளாகக் கொண் டாடப்படுகிறது. ஆனால், 90'ஸ் கிட்ஸ்களுக்கு என்னமோ அந்த ஞாயிறுக்கு முந்தைய நாளான சனிக்கிழமையோ அல்லது வெள்ளிக்கிழமையோதான் நண்பர்கள் நாள். ஞாயிறுகளில் பள்ளி/கல்லூரி விடுமுறை என்பதால் இரண்டு நாள்களுக்கு முன்பே இந்த கொண்டாட்டம் தொடங்கிவிடும். பல வண்ணங்களில் பேண்ட் வாங்குவது, நெருக்கமான நண்பர்களுக்கு ஸ்பெஷல் பேண்ட் வாங்குவது என அலப்பறைகள் அள்ளும். ஒரு கையில் பேண்ட் கட்டிக்கொண்டு இடம் போதாமல் இன்னொரு கையிலும் கட்டிக் கொண்டதெல்லாம் அந்த காலம். கட்டிய பேண்ட் அவிழ்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டும், அவிழ்ந்தால் மறுபடி கட்டிக்கொண்டும் நட்பின் விசுவாசத்தைக் காட்டியதை மறக்க முடியாதது. பிடித்த பேண்ட்களையெல்லாம் புத்தகத்துக்கு நடுவே வைத்து பாதுகாத்தவர்கள் 90'ஸ் கிட்ஸ்களே!
ஆனால், 90'ஸ் கிட்ஸ்கள் கொடுத்து வைத்தவர்கள். ’முஸ்தபா முஸ்தபா… மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப்தான்’ எனப் பாடிய தலைமுறையும் இதுதான், இன்ஸ்டகிராம் ரீல்ஸ் பதிவுசெய்யக்கூடிய தலைமுறையும் இதுதான். அது இது, அப்போ இப்போ என இரண்டையும் பார்த்திருக்கும் 90'ஸ் கிட்ஸ்களின் நட்பு எப்படி இருக்கும்?
அலைபேசி அரட்டைகள்
வீட்டுத் தொலைபேசி அல்லது குடும்பத்துக்கு ஒரு அலைபேசி என இருந்த காலம் அது. முக்கியமான ஒரு சிலருக்கு மட்டும் அழைப்பு எண்களை பகிர வேண்டும் என்கிற அப்பாவின் கட்டளைக்கு இணங்க, நெருக்கமான தோழன், தோழிக்கு மட்டும் எண்கள் பகிரப்படும். அப்பா, அம்மா தொடங்கி வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாம் பயன்படுத்தியதுபோக 'கிடைக்கும் கேப்'பில் கோல் போடுவதுபோல் தொலைபேசியோ அலைபேசியோ கையில் கிடைக்கும். அப்போது நண்பர்களை அழைத்து ‘என்ன சாப்ட்ட’ என்று வெட்டிக்கதை பேசியதும் ‘சன் மியூசிக்ல உனக்கு பிடிச்ச பாட்டு போட்றாங்க உடனே பாரு’ன்னு எஸ்.எம்.எஸ் அனுப்பியதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.
அதையும் தாண்டி நேரில் சந்திக்கும்போது அரட்டை அடிப்பதும் கதைக் கேட்பதும் கொடுக்கும் உற்சாகம் தனி ரகம். இணைய வசதியற்ற காலத்து நட்பு என்பதாலோ என்னமோ நேரில் பார்த்து பேசிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் மாலைநேர ‘குரூப் ஸ்டடி’யிலும், ஞாயிறு கிரிக்கெட்டிலும் ஒன்றாக சேர்ந்து அடித்த லூட்டிகளை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்து மட்டுமே சந்தோஷப் பட்டுக்கொள்ள முடியும். பள்ளிக்கூட நட்பு, டியூஷன் நட்பு, கிரிக்கெட் நட்பு, ஏரியா நட்பு என பட்டியல் நீளும். வசதிகள் குறைவாக இருந்தபோதே கட்டிக் காப்பாற்றிவந்த அந்த காலத்து நட்புகளுடன் இன்றும் தொடர்பில் இருக்கும் 90'ஸ் கிட்ஸ்களுக்கு, சமூக வலைதளம் போன்ற இணைய வசதியை கையில் தந்தால் சும்மா இருப்பார்களா? அவ்வப்போது சில பிரெண்ட்ஷிப் கட்டுரைகளை பார்சல் செய்து அனுப்புகிறார்கள்!
ஸ்லாம் புக் டு ஃபேஸ்புக்
’ஸ்லாம் புக்’ நினைவிருக்கிறதா? பள்ளிக்கூடம் நிறைவடையும் தறுவாயில் ‘ஸ்லாம் புக்’ விற்பனை அனல் பறக்கும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அழைப்பு எண், மின்னஞ்சல், வீட்டு முகவரிகளை வைத்துதான் எதிர்காலத்தில் நண்பர்களைத் தொடர்புகொள்ள முடியும். பள்ளிக் கால நட்புகளின் வார்த்தைகள், நினைவுகளை சுமக்கும் அந்த ’ஸ்லாம் புக்’தான் வாழ்நாளுக்குமான பொக்கிஷம். ஆனால், இந்த விஷயத்திலும் 90'ஸ் கிட்ஸ்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். ஸ்லாம் புக் பயன்படுத்திய கடைசி தலைமுறையினராக இருக்கக்கூடிய இவர்களுக்கு ஆர்குட், ஃபேஸ்புக் ஆகியவற்றின் அறிமுகமும் கிடைத்தது. 2000களின் தொடக்கத்தில் மின்னஞ்சலும், வலைப்பதிவுகளும் (blog) 2010களின் தொடக்கத்தில் சமூக வலைதளங்களும் பரவலாகத் தொடங்கின. சமூக வலைத்தள யுகத்தில் ஸ்லாம் புக் தலைமுறையினரின் நட்பு ஃபேஸ்புக் வழியாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இணைய புரட்சியின் முன், பின் காலத்தில் நட்பை கொண்டாடும் 90'ஸ் கிட்ஸ்கள் பாக்கியசாலிகள் தானே!