

“வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி, வீழ்வதில் இல்லை” - நம்பிக்கை யுடன் பேசத் தொடங்குகிறார் ஹரிதாஸ் (28). போதைக்கு அடிமையாகிக் குற்றமிழைத்த இளம் சிறார்களை மீட்டெடுத்து அவர்களுக்கு நல்வாழ்வு அமைத்து தரும் பணியில் இவர் ஈடுபட்டுவருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்களில் மாற்றத்துக்கான சமூகச் செயல்பாட்டாளராக இயங்கி வரும் ஹரிதாஸ், பதின்ம வயதில் வழி தவறிச் சென்றவர்தான். புத்தக வாசிப்பு, கலை ஆகியவற்றின் மீதான ஆர்வம் அவருக்குக் கைகொடுக்க, தன்னை மீட்டெடுத்து புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்.
படிப்பு தந்த வாழ்க்கை
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் படிப்பில் சராசரி என்றாலும் என்.சி.சி. பயிற்சி, ஓவியம் வரைதல் போன்ற மற்ற விஷயங்களில் கெட்டிக்காரர். மளிகைக்கடைக்காரத் தந்தை, உடல்நலம் குன்றிய தாய், சகோதரி என குடும்பத்துடன் இருந்தவரது வாழ்க்கை எதிர்பாராத ஒரு சம்பவத்தால் தடுமாறத் தொடங்கியது. பத்தாம் வகுப்பு படித்தபோது நண்பர்களுடன் சேர்ந்து குற்ற வலையில் சிக்கிய ஹரிதாஸின் வாழ்க்கை தலைகீழானது. கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்ட அவர் மீண்டு வந்த கதை நம்பிக்கை நிறைந்தது.
“அப்பா வேலையில் கவனமாக இருந்தார், நரம்புப் பிரச்சினையால் அம்மாவுக்கு நினைவு பறிபோனது. அன்பும் கண்டிப்பும் இல்லாத குடும்பத்தில் இருந்ததால் நண்பர்கள் மூலமாக சில குற்றச்செயல்களில் ஈடுபட நேர்ந்தது. 15 வயதில் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டேன். ஆரம்பத்தில் தப்பியோட வேண்டும், குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணங்களே இருந்தன. ஆனால், அங்கிருந்த மற்ற சிறுவர்களுக்கும் எனக்கும் இருந்த ஒரே வித்தியாசம் படிப்பு.
புத்தகங்களைப் புரட்டத் தொடங்கினேன். வாசிப்பு என்னைத் திசைத்திருப்பியது. படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கூட்டியது. அங்கிருந்தபடி பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றேன். உடனிருந்த சிறார்களுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொடுத்தேன். சுந்தர் சார், கல்யாணியம்மா, அருட்தந்தை வின்சென்ட் சேவியர் போன்றோரின் உதவியால் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தேன். பல தடைகளைத் தாண்டி சென்னை சமூகப் பணி கல்லூரியில் (Madras School of Social Work) முதுகலைப் படிப்பில் சேர்ந்தேன். படிக்கும்போதே பிரிஸம் (PRISM) என்கிற அமைப்புடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். எனக்குக் கிடைத்த உதவிகளும் வழிகாட்டுதலும் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென அதே துறையைத் தேர்வுசெய்து பணியாற்றத் தொடங்கினேன். கூர்நோக்கு இல்லங்களுக்குச் சென்று குற்றமிழைத்த சிறார்களுக்கு நல்வாழ்வு அமைத்து தரும் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறேன்” என்றார்.
போதைப் பழக்கமும் குற்றங்களும்
போதைப் பழக்கத்திலிருந்து சிறார்களைக் காப்பாற்றுவதன் மூலமாகவே குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்கிறார் ஹரிதாஸ். “போதைக்கு அடிமையானவர்களை மீட்பது சவாலான காரியம். வேலையில் மட்டும் கவனம் செலுத்தும் பெற்றோர் குழந்தைகளின் பழக்க வழக்கத்தைக் கவனிப்பதில் கோட்டைவிட்டுவிடுகின்றனர். புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘கூல் லிப்’ என்னும் பொருளுக்கு முதலில் அடிமையாகும் சிறார்கள் அடுத்து சிகரெட், மது, போதை மாத்திரை ஆகியவற்றுக்கு அடிமையாகிறார்கள். இப்படிப் போதையில் சிக்கும் ஒரு சிறுவன்தான் நாளடைவில் அடுத்தடுத்த குற்றச் செயல்கள் செய்யவும் தூண்டப்படுகிறான். தமிழ்நாட்டில் குற்றப் பிண்ணனி கொண்ட சிறார்களில் 60 சதவீதத்தினர் போதை அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் போதைக்கு அடிமையாகும் சிறார்கள்தான் பல குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்று விளக்குகிறார்.
போதைக்கு அடிமையான சிறார்களை மீட்பதற்குத் தான் பின்பற்றும் வழிமுறைகளை விவரிக்க்கிறார் ஹரிதாஸ்- “போதைக்கு அடிமையாகியுள்ள நிலையைப் பொறுத்து, வெவ்வேறு பிரிவுகளில் சிறார்களைப் பிரித்து மறுவாழ்வுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். போதைக்கு அடிமையானதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே தனிப்பட்ட அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்வார்கள். அதன்படி நான் அவர்களுடன் உணர்வுரீதியாக நெருக்கமாகி அவர்களைச் சோகத்தில் ஆழ்த்திய விஷயங்களையும், மகிழ்ச்சிப்படுத்திய விஷயங்களையும் தனித்தனியே கேட்டறிவேன். வாழ்வின் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் சிறார்களுக்கு அவர்கள் விருப்பப்படி நல்வாழ்வு அமையும் என நம்பிக்கையைத் தருவேன். எடுத்துக்காட்டாக அவர்களுக்குப் பிடித்த திரை நட்சத்திரம் யார் என்று கேட்டு, ’ஒருநாள் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு அமையலாம்; அதற்காக உழைக்க வேண்டும்,தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்’ எனப் பேசி ஊக்கப்படுத்துவேன். இப்படித் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கும்போது மன மாற்றம் நிகழும். இதற்கு சில மாதங்கள் தேவைப்படும். மனம் மாறினாலும் பெரும்பாலானோர் மீண்டும் அடிமையாவதற்கான சாத்தியம் உண்டு.
பத்தில் ஏழு குழந்தைகளை மீட்க முடியுமென்றாலும் மீதி மூன்று பேரை மீட்டெடுப்பது அவரவர் தரும் ஒத்துழைப் பிலும்தான் உள்ளது. முதல் முறை தவறு செய்யும் குழந்தைகளைத் (‘First time offenders’) தேர்வுசெய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இப்பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும்போது, மீண்டும் போதைக்கு அடிமையாவதை ஓரளவு தடுக்க முடியும்” என்கிறார்.
“இங்கு பற்றிக்கொள்வதற்கான கரங்களும், அவற்றைப் பற்றிக்கொள்ளும் மனங்களும்தான் தேவை” எனச் சொல்லும் ஹரிதாஸ் தன் கரங்களை விரித்து சேவையைத் தொடர்கிறார்.