

பாரத பூமியில் வாழும் அனைத்து மக்களும் ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மலைகள், கடல்கள், நதிகள் நிறைந்த பாரதத்தில் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படும் நேரங்கள் புண்ணிய காலங்கள் என்றழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதம் முதல் நாள் விஷ்ணு பதி புண்ய காலங்களாக போற்றப்படுகின்றன. ஆவணி மாதம் முதல் நாள் 18.8.2026 செவ்வாய்க்கிழமை, சித்திரை நட்சத்திரம் கூடிய நேரம் விஷ்ணு பதி புண்ய காலம் ஆகும்.
நிலத்துக்கு அதிபதி செவ்வாய். சித்திரை நட்சத்திரத்தின் அதிபதியும் செவ்வாய். அன்றைய தினம் சித்திரை நட்சத்திரம் காலை 8.50 மணி வரை உள்ளது. இந்த விஷ்ணு பதி புண்ய காலத்தில் பூதத்தாழ்வார் அவதரித்த மாமல்லபுரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது பல நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.