

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். தனக்கு மிகவும் பிரியமான ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட பூமி.
ஒரு முறை காவிரித் தாய் திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் குழந்தை வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார்.
மேலும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். காவிரித் தாய் திருமாலிடம், “தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும் கங்கையின் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்” என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் இருப்பதை இன்றும் காணலாம்.
ஆதிசேஷன் மீது திருமகளுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த திருமால், ஒருசமயம் பிரம்மதேவனை அழைத்து பிரளய காலம் வருகிறது என்றார். மேலும் பிரம்மதேவனை பூலோகத்துக்குச் சென்று ஒரு புனித தலத்தில் இருந்து மண் எடுத்து குடம் செய்து, அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய்யுமாறு பணித்தார்.