

பஞ்சமங்கல ஷேத்ரம் என்று அழைக்கப்படும் திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராண நாதேஸ்வரர் கோயிலில், காளி, சூரியன், பூமாதேவி, விஷ்ணு, பிரம்மதேவர், அகத்திய முனிவர் வழிபட்டுள்ளனர்.
அப்பர், சம்பந்தரால் இத்தலம் பாடப் பெற்றுள்ளது. முன்பொரு காலத்தில் காலவ முனிவர், தனக்கு நோய் வரப்போவதை தனது ஞானதிருஷ்டி மூலம் அறிந்து கவலை அடைந்தார். இதைத் தொடர்ந்து இமயமலைச் சாரலில் அமர்ந்து, நவக்கிரகங்களை நோக்கி காலவ முனிவர் தவம் மேற்கொண்டார்.
காலவ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த நவக்கிரகங்கள், அவர் முன்பு தோன்றின. காலவ முனிவரும் தனக்கு நோய் வராமல் காத்தருள வேண்டும் என்று வேண்டினார். பூர்வ ஜென்ம பாவ தோஷப்படி முனிவர் அந்த நோயை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை மாற்றுவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நவக்கிரகங்கள் தெரிவித்தன.