

தல வரலாறு
ஒருசமயம் கைலாயம் சென்ற நாரதர், பார்வதியிடம் ஒரு கனியை கொடுத்தார். அக்கனியை முருகனுக்கு தருவதா? விநாயகருக்கு தருவதா? என அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது. எனவே, உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கு கனியை தருவதாக கூறினார் சிவன். முருகன் மயிலில் உலகத்தை சுற்ற கிளம்பினார்.
விநாயகரோ, பெற்றோரை சுற்றி வந்து கனியை வாங்கிக் கொண்டார். எனவே, கோபம் கொண்ட முருகன், அம்பிகை தடுத்தும் கேட்காமல் பழநிக்குச் சென்றார். அதன்பின் தன்னால் தம்பி, பிரிந்து சென்றதை எண்ணிய விநாயகர் மனம் வருந்தினார்.
தனக்கு விட்டுக்கொடுக்கும் பக்குவம் இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். எனவே பூலோகத்தில் தவமிருந்து, மன அமைதி பெற அனுமதிக்கும்படி பெற்றோரிடம் வேண்டினார். சிவன் - அம்பிகை இருவரும் அவரை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. சிவன் அவரிடம் பூலோகில் செண்பக மரங்கள் நிறைந்த தலத்தில் தவம் இருக்கும்படி கூறினார்.
அதன்படி நாகை மாவட்டம் செண்பகபுரம் வந்த விநாயகர், தவமிருந்தார். விநாயகர் முழுமுதற்கடவுள் என்றாலும் அவரும் ஒரு தாய்க்கு பிள்ளைதான். வனத்தில் தனியே தவமிருக்கும் தன் மகனுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சிவனிடம் வேண்டினாள் பார்வதி தேவி. எனவே சிவபெருமான் இத்தலம் வந்து விநாயகரை சுற்றிலும் ஐந்து இடங்களில் பஞ்சபூத வடிவில் பாதுகாப்பாக தங்கினார்.