

கொல்கத்தா நகரில் 1863, ஜனவரி, 12-ம் தேதி பிறந்த குழந்தை தான் பின்னாளில் இந்து மதத்துக்கு சர்வதேச அளவில் புகழையும், பெருமையையும் பெற்றுக் கொடுத்தது. ஆம்! விசுவநாத தத்தர் - புவனேசுவரி தம்பதியின் ஞான குழந்தைதான் நரேந்திரன் என்கிற சுவாமி விவேகானந்தர்.
தெய்வீக அம்சத்துடன் பிறந்த நரேந்திரநாத் சிறுவயதில் மற்றவர்களை போல் விளையாட்டில் ஈடுபடாமல் ராமன், சீதை, கிருஷ்ணன் போன்ற தெய்வீக பொம்மைகளை சேர்த்து வைத்துக் கொண்டு ஆன்மிக உணர்வுடன் வழிபட்டு மகிழ்வான். தாயார் புவனேசுவரி மூலம் குழந்தை பருவத்தில் இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல புராண கதைகளை விரும்பி கேட்டதால், அடிக்கடி தியானம் செய்யும் பழக்கத்தை சிறுவயதிலேயே கற்று இருந்தான்.
ஒருநாள் நரேந்திரன், தன்னை அறியாமல் மெய் மறந்து தியானம் செய்து கொண்டு இருந்தான். ஓரிரு நண்பர்கள் மட்டுமே உடன் இருந்தனர். அந்த வேளையில் ஒரு பாம்பு நரேந்திரனுக்கு அருகே மெதுவாக ஊர்ந்து வந்தது.
இதைப் பார்த்த நண்பர்கள் பயத்தில் ஓடி விட்டனர். கூச்சலிட்டு அக்கம் பக்கம் இருந்தவர்களை வரவழைத்தனர். இந்த சத்தத்தை உணராமல் நரேந்திரன் கண் மூடி தியானம் செய்து கொண்டு இருந்தான். வந்தவர்கள் ஆச்சரியத்துடன் இதைப் பார்த்தனர். சிறிது நேரம் கழித்து, நரேந்திரன் தியானத்திலிருந்து வெளிவர, நடந்த சம்பவத்தை எல்லோரும் அவனுக்கு விளக்கினர். ஆனால் நரேந்திரன் ஆழ்ந்த தியான நிலையில் இருந்ததால் வெளி உலகில் நடப்பவை ஒன்றுமே தெரியவில்லை.
ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நரேந்திரன் மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை வங்காளத்தில் காமார்புகூர் கிராமத்தில் முதன் முதலில் தரிசனம் செய்த பிறகு அவர் மீது ஆழ்ந்த மதிப்பு ஏற்பட்டு பின்னாளில் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டான்.
அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ‘ஹால் ஆஃப் கொலம்பஸ்’ எனும் கட்டிடத்தில் நடைபெற்ற சர்வமத மகாசபையில் பங்கேற்று இந்து மதத்தின் தொன்மை, பெருமை, பெருந்தன்மை போன்றவற்றை தெளிவாக விளக்கி சொற்பொழிவு ஆற்றி, இந்து மதத்துக்கு சிறப்பு சேர்த்தார்.
மாநாட்டில் வெற்றி வாகை சூடி இந்தியாவுக்குத் திரும்பிய சுவாமி விவேகானந்தர், கொழும்பிலிருந்து, ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் பாலத்துக்கு வந்தபோது, ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தரை அலங்கார ரதத்தில் உட்கார வைத்து சேதுபதி மன்னரே ரதத்தை இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினார்.