

பாரதத் திருநாட்டின் பல்வேறு மொழிகளிலும் இராமாயணங்கள் உண்டு. ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் இருப்பது சிறப்பு. அந்தந்த பகுதிக்குஏற்ப, சிற்சில மாற்றங்களுடன் இராமாயணங்கள் வலம் வருவதால், பலவித மரபுகள், பழக்க வழக்கங்கள், கதை மாந்தர்களின் சிறப்பு குணாதிசயங்களை நாம் அறிகிறோம்.
சரளா தாசர் இயற்றிய பிலங்க (இ)ராமாயணம், பிச்வநாத் குந்த்யா இயற்றிய பிசித்ர (இ)ராமாயணம் ஆகியவற்றோடு, ஒடிய மொழி இலக்கியவுலகில் பிரதான இடம் வகிக்கிறது பலராம தாசரின் ஜகமோகன் (இ)ராமாயணம். முன்னவை இரண்டும் முழுமையான காப்பியங்கள் இல்லையென்பதாலும், ஜகமோகன் (இ)ராமாயணத்தின் முக்கியத்துவம் கூடுகிறது.
தாண்டிப்ருத கவிதை முறையில் அமைந்திருப்பதால் தாண்டி (இ)ராமாயணம் என்றும் அழைக்கப்பெறும் இக்காப்பியம், 15-ம் நூற்றாண்டு ஒடியக் கவிஞரான பலராம தாசரால் இயற்றப் பெற்றது.
தம்முடைய பிரதேசத்துப் பழக்க வழக்கங்களையும் வட்டாரத்தில் வழங்கிய இராம கதைக் கூறுகளையும் பிணைத்துக் கொண்ட பலராம தாசர், தம்முடைய காலகட்டத்தில் பரவலாகக் காணப்பெற்ற கிருஷ்ண பக்தி மரபுகளையும் இணைத்துக் கொண்டுள்ளார்.
தங்கள் ஊருக்குள் கிருஷ்ணன் வருவதை அறிந்த மதுரை நகர மக்கள், ஓடோடி வந்து அந்த மாயனைக் கண்டார்கள். விச்வாமித்திரரோடு இராமனும் இலக்குவனும் வருவது மிதிலை மக்களுக்குத் தெரிந்தது. இந்த இராமனின் கால் பட்டுத்தான் கல் பெண்ணானது என்பதும் புரிந்தது. இராமனைக் காணாமல் இருப்பதா? ஓடி வருகிறார்கள்.
ஸிந்தூர சிதாமான கேனுனா திலே நாரீ, கந்த
சந்தன் போலி ஸே போலிலே பாஷோரி
கேவண ஸுந்தரீ ஜே ஹஸி ஹஸி தாயீம், முகரே
காயிலா பான ஓஷ்டரே படயீம்