

இராம கதை அனுபவத்தில் சினத்தைத் தோற்றுவிப்பவள், கூனி என்னும் மந்தரை. இராமன் கானகம் செல்வதற்குக் காரணமானவள். கைகேயியின் மனத்தைக் கலங்கடித்தவள்.
இவள் யார்? கைகேயி பெற்றோரின் சேடிப் பெண் என்றும், இவளின் பிறப்பு சரியாகத் தெரியாது என்றும், (கைகேயி வந்த காலத்திலிருந்து) அயோத்தியில் வாழ்பவள் என்றும் வால்மீகி முனிவர் குறிப்பிடுகிறார்.
ஞாதி தாஸி யதோ ஜாதா கைகேய்யா து ஸஹோஷிதா
இராம பட்டாபிஷேக அறிவிப்பின் கோலாகலத்தைக் கண்டு என்னவென்று விசாரிப்பவள் இவள்தான்.
ஸ ஹர்ஷோத்புல்லநயனாம் பாண்டுர் அக் ஷௌமவாஸினீம் அவிதூரே ஸ்திதாம் த்ருஷ்ட்வா தாத்ரீம் பப்ரச்ச மந்தரா
இராமன் குழந்தையாக இருந்தபோது செவிலித் தாயாகச் செயல்பட்ட பெண்மணி, வெண்பட்டுடுத்தி, கண்களில் களிப்போடு நிற்பதைக் கண்டு அவளிடம் வினவுகிறாள். மறுநாள் புஷ்ய தாரகையில் இராமனுக்கு பட்டாபிஷேகம் என்பதை அப்பெண்மணி தெரிவிக்கிறாள்.