சீதையின் பெருஞ்சரிதம் | இராம கதாம்ருதம் 54

சீதையின் பெருஞ்சரிதம் | இராம கதாம்ருதம் 54
Updated on: 
2 min read

பூமியில் நிலவும் 20,000-க்கும் மேற்பட்ட இராமகதைகள், இராமனின் புகழைப் பாடுகின்றன. வால்மீகி (இ)ராமாயணம் ஸ்ரீராமனின் வீரத்தையும் பெருமையையும் பாடினால், அத்புத (இ)ராமாயணம் சீதையின் பராக்கிரமத்தையும் அவளே ஆதிசக்தி என்பதையும் உலகுக்கு உணர்த்துகிறது.

எத்தனை (இ)ராமாயணங்கள் இருக்கின்றன? இந்த வினாவை முன்னமே கேட்டுப் பார்த்தோம், இல்லையா? இப்போதும் கேட்போம். இதற்கான விடையை பாரத்வாஜ மகரிஷி தருகிறார்.

ராமாயணம் இதி க்யாதம் சத கோடி ப்ரவிஸ்தாரம்

ப்ரணீதம் பவதா யச்ச ப்ரஹ்மலோகே ப்ரதிஷ்டிதம்

ஸ்ரூயதே ப்ரஹ்மணா நித்யம் ருஷிபி: பித்ருபி: ஸுரை:

பஞ்சவிம்சதி ஸாஹஸ்ரம் ராமாயணம் இதம் புவி:

ததாகர்ணி தமஸ்மாபி: ஸவிசேஷம் மஹாமுனே

(இ)ராமாயணம் மிகவும் புகழ் மிக்கது; பெருமைக் குரியது. பல்லாயிரக்கணக்கான செய்யுள்களால் ஆனது. தங்களால் வெகு விஸ்தாரமாக உரைக்கப் பெற்றது. பிரம்மலோகத்திலும் இதன் பெருமை பரவியுள்ளது. பிரம்மாவாலும் முனிவர்களாலும் பித்ருக்களாலும் தேவர்களாலும் நிதமும் செவிமடுக்கப் பெறுவது.

இதன் எத்தனையோ வடிவங்களில், ஏறக்குறைய 20,000 வடிவங்கள் பூமியில் நிலவுகின்றன. மகாமுனிவரே, நாங்கள் இவைகுறித்துக் கேட்டிருக்கிறோம். தமஸா நதிக்கரையிலிருந்த வால்மீகி மாமுனிவரைச் சந்தித்து, இதனைக் கூறுகிறார் பாரத்வாஜர்.

ஆக, ஆதிகவியிடமே, இராமகதையின் பல்வேறு வடிவங்கள் குறித்தும், அவை பூமியெங்கணும் பரந்து விரிந்து பரவியுள்ளன என்பது குறித்தும் பாரத்வாஜர் விவாதிக்கிறார்.

இருபதாயிரமா? இத்தனை வடிவங்கள் எதற்காக என்று நமக்கொரு ஐயம் வருமில்லையா? உரையாடலிலிருந்தே விடையையும் பெறுகிறோம். இராமனுடைய கதையில், அவ்வளவாக வெளியில் தெரியாததும், ரகசியார்த்தம் நிறைந்ததுமான பகுதி எது என்று பாரத்வாஜர் வினவ, வால்மீகியின் உரையாக விரிகிறது, அத்புத (இ)ராமாயணம் என்னும் காவியம்.

Loading content, please wait...

X