

பாரத நாட்டுக் கலைகளுக்கும் கலாச்சாரத்துக்கும், இராமன் – சீதை திருமணமானது ஏராளமான பங்களிப்புகளைத் தந்துள்ளது. வடக்கு பிஹார், தெற்கு நேபாளம் ஆகிய பகுதிகளில் வழங்கும் மைதிலி மொழிப் பாடல்களிலும் மைதிலி வகைக் கலைகளிலும் இந்தச் செல்வாக்கை நிரம்பக் காணலாம்.
மதுபனிக் கலை என்று வழங்கப்பெறும் மைதிலி வகை ஓவியங்கள், இராமகதையின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பெறுகின்றன. இராம-சீதை திருமணத்தின்போது, மக்கள் அனைவரும் தத்தம் இல்லங்களின் மண் சுவர்களில் இயற்கையின் இனிய காட்சிகளையும் தெய்வீகத் திருக்கல்யாணங்களையும் ஓவியமாகத் தீட்டி அலங்கரிக்கும்படி ஜனக மன்னர் ஆணையிட்டார்.
இந்த வழக்கமே இன்னமும் தொடர்வதாக ஐதீகம். மைதிலி வட்டார விவாக கீதங்களும் இராம சீதை திருமணப் பாடல்களாகவே இப்போதும் அமைகின்றன. சல்லப்போனால், அவரவர் வீட்டுத் திருமணங்களை, இராம – சீதை திருமணமாகக் காணும் முறை இன்னமும் தொடர்கிறது.
மணமகன் ஊர்வலம் நடக்கும்போது, இராமனே மணமகனாக வந்திருப்பதாக மகிழ்வார்கள்: ஆஜு மிதிலா நகரியா நிஹாலு ஸகியா சாரோம் தூல்ஹா மே பட்கா கமாலு ஸகியா ‘இன்று மிதிலை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; நான்கு மாப்பிள்ளைகளில் மூத்தவன் மிகுதியும் சிறந்தவன்’ - மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக் கொள்ளும்போது, பெண் வீட்டார் மாப்பிள்ளையைக் கிண்டலடிப்பார்கள்: ஜுக் ஜயியோ தோடா ரகுபீரு, லலீ தோ மோரி சோட்டீ ஸி ‘சற்றே குனிந்து கொள் ரகுவீரா, மென்மையான எங்கள் சீதை, குட்டையாக இருக்கிறாள்’ - விருந்தின்போது, மணமக்களைச் சூழ அமர்ந்து, மாப்பிள்ளையைச் சீண்டுவார்கள்: மிதிலா கே நாரி படா சதுர்..அச்ரா கே தம் ஸுனீ ஹஸலா ரகுபீரு...