

அயோத்தி நாட்டு இராமன், கானகம் சென்றான்; மனைவியைச் சிறை மீட்பதற்காக இலங்கை வரை சென்றான்; பின்னர் அயோத்தி திரும்பினான் – இதுதான் இராம கதை. ஆயின், இராமன் கதை எங்கு வரை சென்றது என்று வினா எழுப்பினால், ‘செல்லாத இடமே இல்லை – அது இல்லாத இடமே இல்லை’ என்று விடை மொழியத் தோன்றுகிறது.
அறம், அறநெறிகள், அறம் சார்ந்த வாழ்வு ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதற்கு உலகெங் கிலும் உள்ள அறிஞர்கள் இராம கதையையே நாடியுள்ளனர் என்பது வியப்பு! ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலம், இராம கதை நாடகத்தில் இராமனாகத் தோன்றி அரங்கையே தன் வசப்படுத்திய ருஷ்யக் கலைஞர் மிகைலோவிச் பெஷ்னிகோஃப் 2010-ல், நாடகத்தின் பொன் விழாக் கொண்டாட்டங்களின்போது, ‘இராமாயணம் என்பது இந்தியாவின் தேசியக் கோட்பாடு; நெறிமிக்க மேலாண்மையின் அடையாளம்’ என்றே பெருமைப்பட்டார்.
1960-களில் தொடங்கி, பற்பல ஆண்டுகளுக்கு, ருஷ்ய ரசிகர்களை இராம நாடகம் வசப்படுத்தியது, சம்ஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி ஆகிய இந்திய மொழிகளில் வல்லவரும், இந்தியவியல் வித்தகருமான அலெக்ஸெ பெட்ரோவிச் பாரனிகோஃப் என்பார், 1948-ல், இராமாயணத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பை வெளியிட்டார். வான்மீகத்தின் மொழிபெயர்ப்பாகக் கருதப்பட்டாலும், துளசிதாசரின் (இ)ராம சரித மானஸ செல்வாக்கு இதனில் நிரம்ப இருந்தது.