

நிழல்போல் இராமனைத் தொடர்ந்தவன் இலக்குவன். இராமாயண வடிவங்கள் யாவற்றிலும் இலக்குவனுக்குச் சிறப்பிடம் உண்டு. எனினும், நாட்டுப்புற வழக்காறுகளிலும் கதைப் பாடல்களிலும் இலக்குவன் தனிச் சிறப்பு பெறுகிறான். கானகத்துக்கு இராமன் செல்லும் தருணத்திலிருந்து, இராமனுக்கும் சீதைக்கும் பணிவிடை செய்யும் சேவகனாகவே இலக்குவனைக் காண்கிறோம்.
இப்படிப்பட்ட சேவையில், வனவாச காலமான பதினான்கு ஆண்டுகளும் இலக்குவன் உண்ணவில்லை, உறங்கவில்லை என்பதும் கூடுதல் சிறப்பு. இதனாலேயே, ‘உண்ணா நோன்பன்’ என்றும், ‘உறங்காவில்லி’ என்றும் இலக்குவனுக்குப் பெயர்கள் உண்டு.
இராமனும் சீதையும் உறங்கும்போது, தான் உறங்காமல், ஏன் கண்களைக்கூட இமைக்காமல் இலக்குவன் பாதுகாத்து நின்றான் என்பதைத் தன்னுடைய கண்கள் இமைக்காமல் குகன் பார்த்திருந்தான் என்பது போன்றதொரு காட்சியைக் கம்பர் காட்டுவார். இதே நிலையை, அன்புக் கண்கொண்ட அணங்கையர் எவ்வாறு கண்டனர் என்பதை நாட்டுப்பாடல் ஒன்று நயம்பட நவில்கிறது.
தெலுங்கு மொழிப் பாடல் இது. பாடலின் போக்கு இதுதான்: இராம பட்டாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவர்களும், வானரங்களும், ராக் ஷஸர்கள் சிலரும், இன்னும் பலரும் பங்கு கொள்கின்றனர். பட்டாபிஷேகத்தின் பெருமிதத்தில் அனைவரும் திளைத்துக் கொண்டிருக்கும்போது, சிம்மாசனத்துக்கு அருகில் நின்றிருக்கும் இலக்குவன், திடீரென்று பெருங்குரலெடுத்து நகைக்கிறான்.
அவனுடைய பார்வை, அருகே பார்ப்பதுபோல்தான் இருக்கிறது; யாரையோ குறிப்பாகக் கண்டு சைகை செய்வதுபோலவும் இருக்கிறது. ஆனால், யார் என்று தெரியவில்லை. சிவபெருமான் உள்ளிட்ட பெரியோர் இருக்கும் சபையில், இலக்குவனுடைய இச்சிரிப்பு எல்லோரையும் வியப்பிலும் கோபத்திலும் ஆழ்த்துகிறது.