

இராமபிரானின் வரலாறு அனைவரையும் மெய்மறக்கச் செய்துவிடும். ஒவ்வொருவரையும் கவிஞராக்கிவிடும். பலரை விடுகதை போட வைக்கும். காவியங்கள், செய்யுள்கள், பாடல்கள், கவிதைகள், இசை, நாடகம், நாட்டியம் ஒற்றைக் கவிதை, குறுங்கவிதை, ஸ்லோகம், விடுகதை என்று இராமகதை பயணித்துக் கொண்டே இருக்கிறது.
இத்தனை இத்தனை இராமகதைகளா? என்ற ஐயம், நம் மனங்களில் எழக் கூடும். இராமனுடைய வரலாறு, கேட்பவரையும் வாசிப்பவரையும் கவிஞர்கள் ஆக்கிவிடும் என்று உறுதிபடக் கூறுகிறார் இந்தி மொழிக் கவிஞரான மைதிலி சரண் குப்தா.
ராம தும்ஹாரா வ்ரத்தா ஸ்வயம் ஹி காவ்ய ஹை
கோயி கவி பன் ஜாயே ஸஹஜா ஸம்பவ்யா ஹை
ராமா, உன்னுடைய கதையே காவியம்தான். அதை எழுதவேண்டுமென்று யார் விரும்புகிறார்களோ, அவர்கள் மிக எளிதாகக் கவிஞர் ஆகிவிடுவார்.
மைதிலி சரண் குப்தா அவர்களின் வாக்கை மெய்ப்பிப்பதாகவே, பற்பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மிகப் பெரிய அல்லது வெகு நீண்ட காவியங்கள் என்றில்லாமல், ஒற்றைக் கவிதையிலோ ஸ்லோகத்திலோகூட இராமகதை கூறப்படுகிறது.
இந்திமொழி நாட்டுப்புறப் பாடல் வழக்கில், கீழ்க்காணும் சௌபாயி – நான்கடிக் கவிதையைச் செவியுறலாம்.
பனே பகி த்ரியா சுராயி : பனே பஸே கரி லராயி
ஏக ராம, ஏக ராவண : துல்சி நே ரசா தாவோ போத்தன்ன
இக்கவிதையின் மொத்த பொருள்: ஒருவன் மனைவியை ஒருவன் அபகரித்தான்; அவன் அவனோடு யுத்தம் செய்தான்; ஒருவன் (இ)ராமன்; ஒருவன் (இ)ராவணன்; துளசி (தாசர்), இதைக் கொண்டு காவியம் படைத்துள்ளார்.